கவலைப்படாதிருங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். மத்தேயு :6:25
அன்பானவர்களே!
கவலைகளை மாற்றி சந்தோஷத்தை அளிக்கிற இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
இன்றைய காலத்தில் கவலை என்பது எல்லோரிடமும் இருக்கும் ஒருவிதமான சொத்து என்பது போல் மாறி விட்டது.
அதன் உருவங்கள் மாறலாம். ஆனால் அதன் அழுத்தம் ஒன்றாகவே இருக்கும்.
கவலையே இல்லாத மனிதர் யாருமே இல்லை.
மத்திய கிழக்கு நாடுகள் வனாந்தரமாக இருப்பதால், செடிகள் அந்த மண்ணில் வளருவது கடினம். Conocarpus என்னும் ஒரு வகை செடி, அதற்கு தண்ணீரோ, குளிர்ந்த இடமோ தேவையில்லை.
அந்த செடி இந்த வனாந்திரமான இடங்களிலும், கடுமையான வெட்பத்திலும் செழிப்பாக வளருகிறபடியால்,
எல்லா இடங்களிலும் அவற்றை நட்டு வைத்து, வளர்த்து, ஒவ்வொரு விதமான மிருகங்கள் போல, பறவைகள் போல வெட்டி, அழகுபடுத்தி, சாலைகளின் ஓரங்களில் வரிசையாக வைத்திருக்கிறார்கள்
இந்த நாடுகளுக்கு வருபவர்கள், இது வனாந்தரமா என்று நினைக்குமளவுக்கு இந்த மரங்களை ஏராளமாய் நட்டு, பசுமையாக காட்சி தருமளவு அரசாங்கம் எல்லா முயற்சிகளையும் எடுத்து தங்கள் நாடுகளை அழகுபடுத்தி
இருக்கிறார்கள்.
சில இடங்களில் இவைகள் வெட்டப்படாமல், ஒரு அமைப்பு இல்லாமல் வளர்ந்து, ஒரு புதரைப் போல காட்சியளிக்கும்.
வனாந்தர இடமாக இருப்பதால் வனாந்தரத்தில் காணப்படுகிற தேள்கள், மற்ற விஷ பூச்சிகள் இதற்குள் ஓடி ஒளிந்து கொள்ளவும், குடியிருக்கவும் பயன்படுத்திக் கொள்ளும்.
அநேகம் இடங்களில் செடிகளோடு கூட களைகளும் வளர்ந்து, செடிகளுடைய ஆகாரத்தை உண்டு, செடிகளை சரியாக வளர விடாதபடி இவை வேகமாய் வளர்ந்து, செடியை மூடிக் கொள்கின்றன.
கவலையும் அதைப் போலத் தான். அந்த களைகளைப் போல அதை ஆரம்பத்திலேயே கிள்ளி எறியாவிட்டால், அது வேர்படர்ந்து, பெரிய கிளையாகி, ஆளையே விழுங்கி விடக் கூடியதாக உள்ளது.
சிலருக்கு கவலைப்படாவிட்டால், அவர்களுக்கு தூக்கம் வராது. இது நடந்து விடுமோ, அது நடந்து விடுமோ என்று கவலைப்பட்டு கொண்டு இருப்பார்கள்.
மார்த்தாளைப் போல, அநேக காரியங்களை குறித்து கவலைப்படுகிறோம்,
நம் வாழ்க்கையின் அநேக சமயங்களில் பயம் நம்மை பிடிக்க முற்படுகிறது. நாம் எப்பொழுதெல்லாம் பயப்படுகிறோமோ அப்பொழுதெல்லாம் ஒரு கலக்கம் நம் இருதயத்துக்குள்ளாக வருகிறது.
எப்பொழுதெல்லாம் பயம் நம் வாழ்க்கையில் வருகிறதோ, அப்பொழுதெல்லாம் நம் வாழ்க்கையை நிதானமாய் செயல்பட விடாதபடிக்கு அது முயற்சிக்கிறது.
நாம் எப்பொழுதெல்லாம் பயப்படுகிறோமோ அப்பொழுது நாம் கவலைப்பட ஆரம்பிக்கிறோம். பயம் நம் வாழ்வில் நாம் முன்னேறி செல்வதை அது தடுக்கிறது.
வேதத்தில் பார்ப்போம்,
ஆகையால், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள், நாளையத் தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும்.
மத்தேயு: 6:34
மிகவும் அற்பமான காரிய முதலாய் உங்களால் செய்யக் கூடாதிருக்க, மற்றவைகளுக்காக நீங்கள் கவலைப் படுகிறதென்ன?
லூக்கா: 12:26
அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர் மேல் வைத்து விடுங்கள்.
1 பேதுரு :5:7
பிரியமானவர்களே,
சந்தோஷமாயிருங்கள் என்பது உங்களுக்கான ஒரு அறிவுறுத்தல், ஒரு கட்டளை மட்டுமல்ல, இது உங்களுக்கான ஒரு நினைவூட்டல் என்பது தான் மிக முக்கியமானது.
ஆனந்தமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதுவும் சந்தோஷமாக வாழ்வதுமே மனிதனுக்கு கடவுளால் அருளப்பட்ட இயல்பாகவே இருக்க வேண்டிய பண்புகள். சந்தோஷமாக வாழ்வதற்காகவே நீங்கள் படைக்கப்பட்டுள்ளீர்கள்.
சிறுவர்களாக இருந்த போது எப்படி இருந்தீர்கள். உங்கள் எண்ணங்கள் செயல்கள் எல்லாம் எப்படியானதாக இருந்தது என சிந்தித்துப் பாருங்கள்.
நண்பர்களோடு விளையாடி மகிழ்ந்தீர்கள். ஒருவருக்கொருவர் சண்டை பிடித்துக் கொண்டீர்கள், ஆனால் உடனடியாக சகலத்தையும் மறந்து மறுபடியும் ஒற்றுமையாக விளையாடினீர்கள்.
ஏனெனில் உங்கள் மனதில் குரோதம், கபடம் இருக்கவில்லை, பொறாமை இருக்கவில்லை. உங்கள் மனதில் அன்பு மட்டுமே இருந்தது.
சிறு பிள்ளைகளாக இருந்த போது உங்களிடமிருந்த அந்த நல்ல பண்புகள் எல்லாம் என்னவாயிற்று?
பெரியவர்களாக வளர்ந்த பின்னர் சிறந்த கல்வியறிவு பெற்றுள்ளீர்கள்.
நிறைய அனுபவங்களை பெற்றுள்ளீர்கள். சுயமாக சிந்திக்கும் ஆற்றலையும் பெற்று உங்களின் விருப்ப தேர்வுக்கு ஏற்றவாறு ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கான ஆசீர்வாதங்களையும் பெற்றுள்ளீர்கள்.
இறைவனால் படைக்கப்பட்ட மனுக்குலம் சிறப்பாக வாழக்கூடிய இயற்கை வளங்களோடு கூடிய இந்த அழகிய அற்புதமான பூவுலகில் ஒரு மானிட பிறவியாக வாழ்வதற்காக படைக்கப்பட்டதே நீங்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு போதுமானதாகும்.
என்றாலும் அநேகர் சந்தோஷமாக வாழ்வதில்லை, வாழ முற்படுவதில்லை, சந்தோஷமாக இருக்க வேண்டிய தருணங்களில் கூட கவலையோடும், விரக்தியோடும் வாழ்வதையே பழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.
எல்லாச் சூழ்நிலைகளிலும் மகிழ்ச்சியாக இருப்பது சிலருக்கு இயலாமல் இருக்கலாம், ஆனால் பலர் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கக் கூடிய தருணங்களிலும் கூட எதிலும் ஏதாவது ஒரு குறையை மட்டுமே கண்டு அவற்றை மட்டுமே பெரிதுபடுத்தி மகிழ்ச்சியாக வாழ வேண்டிய தருணங்களை இழந்து விடுகிறார்கள்.
நம்மிடையே காணப்படும் பொறாமை, காழ்ப்புணர்ச்சி போட்டி மனப்பான்மை, பிறருடன் ஒப்பிட்டு பார்க்கும் தன்மை போன்ற எதிர்மறையான எண்ணங்களின் காரணமாக நாம் சந்தோஷமாக வாழ வேண்டிய தருணங்களையும் மகிழ்ச்சியாக வாழ வேண்டிய பண்புகளையும் இழந்து விடுகிறோம்.
நம்முடைய வாழ்க்கையில் பல கவலைகள் கஷ்டங்கள் இருந்தாலும், “கிறிஸ்துவுக்குள் மகிழ்ச்சியாய் இருப்பதே எனது பெலன்” என்று எண்ணி, என்னை விசாரிக்கவும், தேற்றவும் இயேசு உண்டு என்ற விசுவாச உறுதியில் ஒவ்வொரு நாளும் வாழுவோம்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே இத்தகைய மனநிறைவுள்ள வாழ்வை அருள் செய்வாராக.
ஆமென்.