நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்
எனக்கு அன்பானவர்களே!
உயிர்த்தெழுந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
இயேசுவை மூடி வைத்த கல்லறையின் முத்திரை தெறித்தது. மேகத் திரைகளை மின்னல் கிழிக்க, தாகம் தீர்க்கும் வான் மழை பொழிந்தது. இறந்த இயேசு கிறிஸ்து உயிர்த்தார். ஆம்… இன்று இயேசு கிறிஸ்து வெற்றி வீரராக உயிர்த்தெழுந்த புனித நாளாம் “ஈஸ்டர் திருநாள்”.
சாவை வீழ்த்தி, பாவத்தை அழித்து, இருளை வெற்றி கொண்ட இறைமகன் இயேசு உயிர்த்தெழுந்த நாள் `பாஸ்கா பண்டிகை’ (Pascha) எனப்படும் .`
பாஸ்கா’ என்றால் `கடந்து போதல்’ என்று பொருள். சாவைக் கடந்து, இயேசு உயிர்ப்பு பெற்றார்.
இன்று இறைமகன் இயேசு மகிமையோடும் வல்லமையோடும் உயிர்த்தெழுந்த நாளை உலகமனைத்தும் கிறிஸ்தவ மக்கள் பெரும் மகிழ்ச்சியாக கொண்டாடுகின்றார்கள்.
சாவின் நின்று உயிர்த்து எழுதல் என்பது இறைவன் ஒருவரால் மட்டும் நிகழ்த்தக் கூடிய இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்ச்சி. மனித இனமானது பாவத்தில் வீழ்ந்து, மரணம் என்ற சாபத்திற்கு ஆளானதால், இயேசு கிறிஸ்து தமது அற்புதமான உயிர்ப்பினால் சாவை வென்று வெற்றி வாகை சூடி மீண்டும் நமக்கு நித்திய பேரின்ப வாழ்வின் நம்பிக்கையைப் பெற்றுத் தந்தார்.
வேதத்தில் பார்ப்போம்,
🌟 மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே?
1 கொரி 15:55.
🌟 அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்;
மத்தேயு 28 :6.
🌟 இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்,
யோவான் 11:25
பிரியமானவர்களே,
இப்பூமியிலே எத்தனையோ தேவர்களும் மகான்களும் தோன்றி சில காலங்கள் வாழ்ந்து பிறகு மறைந்து போனார்கள். அப்படிப்பட்டவர்களுடைய. பெயர் மரணத்திற்குப் பிறகு அவர்களுடைய சகாப்தமே முடிந்து போனது.
அடிமை
வாழ்விலிருந்து விடுதலையாகி, வாக்களிக்கப்பட்ட வளமான நாட்டுக்கு இஸ்ரேல் மக்கள் கடந்து சென்றதைப் போல, நாமும் பாவ வாழ்விலிருந்து விடுபட்டு, நீதியான, சமத்துவமான, மனிதநேயமிக்க வாழ்வுக்கு நேராக திரும்பி வாழுவோம்.
பாவமும் பாவ நாட்டங்களும் நம்மில் எப்போது சாகின்றனவோ அப்பொழுதே இயேசு கிறிஸ்து நம்மில் உயிர்ப்பிக்கிறார்.
நமது பழைய வாழ்க்கையில் இருந்து, புதிய வாழ்க்கைக்கு மாறுவதே , ஈஸ்டர் திருநாளின் மேன்மை.
இயேசுவின் வார்த்தையைக் கேட்ட உலகமே மெய்சிலிர்த்து அதிர்ந்து நிற்கின்றது. ‘வாழ்வது ஒரு முறை’, ஆனால், வாழப் போகும் அத்தனை தலைமுறைகளும் வாழ்ந்து காட்டிய அற்புதமான அன்பு இயேசுவே.
மரணத்தை வென்று உயிர்த்த அதிசய தெய்வமே! வாழ்வை சூது கவ்வுவது போல் தோன்றும் ஆனால், தர்மம் மீண்டும் வென்றே தீரும். ஒளியை இருள் சிதறடித்ததாக வரலாறும் இல்லை. வாழ்வை சாவு விழுங்கியதாக வரலாறும் இல்லை. அதர்மம், தர்மத்தை வென்றுவிட இயலாது.
உண்மை ஒருநாள் வென்றே தீரும். இறந்த இயேசு வெற்றி வீரராக உயிர்த்தெழுந்தார். கல்லறையை மூடியிருந்த கல் ஒதுங்கி அவருக்கு இடம் தந்தது. உயிர்த்து உலகெங்கும் அவர் பிரசன்னத்தால் ஒளியை நிலைக்கச் செய்தார்.
பொய்மை அழியும் உண்மை வெல்லும். தர்மம் ஜெயிக்கும். அநீதி அழியும். நீதி நிலைக்கும்.
இதுவே இயேசுவின் உயிர்ப்பு சொல்லும் செய்தி, இறுதி வெற்றி இயேசு கிறிஸ்துவுக்கே! அது மட்டுமல்ல
அவரையே நம்பியிருக்கும் பிள்ளைக்குமே.
ஆகவே இந்த உயிர்ப்பின் நாளில் அவரின் பிள்ளைகளாய் வாழ்ந்து , இம்மையிலும் மறுமையிலும் சுகித்திருக்க கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக
ஆமென்.