இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான். லூக்கா: 23:42
எனக்கு அன்பானவர்களே!
இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
போர்வீரன் ஒருவன் ஒரு குருவை அணுகிக் கேட்டான். “ஐயா, சொர்க்கம் அல்லது நரகம் என்று உண்மையிலேயே ஏதாவது இருக்கிறதா?”என்று கேட்டான்.
குரு இவனுக்கு சொர்க்கத்தையும், நரகத்தையும் காட்ட வேண்டும் என்று மனதில் நினைத்தவாறு அவனுடைய கேள்விக்குப் பதில் சொல்லாமல்,
குரு அவனைப் பார்த்துக் கேட்டார் “நீ உண்மையிலேயே ஒரு போர்வீரனா? பார்த்தால் பிச்சைக்காரன் போல இருக்கிறாய். உன்னைத் தன் படைவீரனாக நியமித்திருக்கும் உன்னுடைய அரசன் எப்பேர்ப்பட்ட பிச்சைக்காரனாக இருப்பான்?” என்று கேட்டார்.
போர்வீரன் கடுங்கோபத்துடன் வாளை உறையில் இருந்து உருவத் துவங்கினான். ஓஹோ. வாளை வைத்திருக்கிறாயோ? அதற்கு என் தலையை சீவும் வல்லமை உனக்கு இருக்கிறதா என்று கேட்டார் குரு.
அவன் ஏறத்தாழ அவர் தலையை சீவத் தயார் ஆனான். அவன் கையைப் பிடித்து நிறுத்தி குரு சொன்னார் “இப்போது நரகத்தின் கதவுகள் உனக்கு திறக்கின்றன” என்றார்.
அவன், குருவை தன் வாய் ஜாலத்தால் சமாளித்து தலை குனிந்து மன்னிப்பு கேட்டு,வெட்கி பணிவாய் அவரை வணங்கி நின்றான்.
குரு சொன்னார்- “இப்போது உனக்கு சொர்க்கத்தின் கதவுகள் திறந்து விட்டன என்றார்.
பிரியமானவர்களே வேதம் சொல்லுகிறது. மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்.
நீதி 18 :21.
வேதத்தில் பார்ப்போம்,
இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான்.
லூக்கா 23:42
இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
லூக்கா 23:43
ஜெயங் கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக் கொடுப்பேன் என்றெழுது.
வெளி 2 :7.
பிரியமானவர்களே,
மரணத்திற்குப் பின் நமக்கு ஓர் வாழ்க்கை உண்டு என்பதை நீங்கள் நம்புகிறீர்களா? அதற்கு நீங்கள் ஆயத்தமாக உள்ளீர்களா?? நானும் இயேசுவோடு கூட பரதீசியில் செல்லுவேன் என்ற விசுவாசம் நமக்குள் இருக்கிறதா?
அந்த கள்ளன் ஆண்டவராகிய இயேசுவிடம் பேசின தைரியத்தைக் குறித்து நான் ஆச்சரியப்படுகிறேன். அங்கிருந்தவர்களில் ஒருவர் கூட தாங்கள் இரட்சிக்கப்பட வேண்டும் என்று இயேசுவிடம் கேட்கவில்லை.
ஆசாரியர்கள், மதத்தலைவர்களும் கிறிஸ்துவை நிந்தித்தார்கள்.
சேவகர்கள் அவனது நெருக்கமான நண்பர்கள் யாரையும் குறித்து அவன் கவலைப்படாமல் ஆண்டவராகிய இயேசுவை கிறிஸ்துவை
தைரியத்துடன் நம்பி விசுவாசித்தான்.
அங்கே கூடியிருந்த மக்கள் கூட்டம் இயேசுவை எதிர்த்தது. சேவகரும் அவரைக் கேலி செய்து நிந்தித்தார்கள், நகைத்தார்கள்.
ஆனால் அந்த கள்ளனின் சிநேகிதனும் இயேசுவை நிந்தித்தான்.
இன்றும் கூட சிலர் பிற மக்களுக்கு பயப்படுவதால், ஆண்டவராகிய இயேசுவை நம்புவதற்கு விருப்பமில்லாமல் இருக்கிறார்கள்.
இயேசு என்றால் இரட்சகர் என்று அர்த்தம். இயேசுவிற்கு ஒரு ராஜ்யம் உண்டு என்றும்,இயேசு குற்றமற்றவர் என்றும், இயேசு நாசரேத்திலிருந்து வந்தவர் என்றும். அவர் மற்றவர்களை இரட்சித்தார் என்றும் அவன் நன்கு அறிந்திருந்தான்.
நான் இரட்சிக்கப்பட விரும்புகிறேன், ஆனால் அது பற்றி மேலும் அறிந்து கொள்ள விரும்புகிறேன் என்று அனேகர் சொல்வதைக் கேட்டிருக்கிறோம். அன்பான சிநேகிதனே, இந்தக் கள்ளன் அதிகமாக ஏதும் அறிந்து கொள்ளவில்லை. ஆனால் அவன் அறிந்து கொண்ட காரியம் அவனை இரட்சகரண்டை நடத்தினது.
ஆனால் இங்கு இயேசு தள்ளப்பட்டவராக, குற்றஞ் சாட்டப்பட்டவராக, பெலவீனராக, மரித்துக் கொண்டிருப்பவராக அக்கள்ளன் கண்டான். அந்த நிலையில் இருக்கும் ஒருவரை நீங்கள் நம்புவீர்களா??
கிறிஸ்து ஒரு அற்புதம் செய்ததினிமித்தம் அவரை நம்புவது இலேசான காரியம்.
ஆனால், இயேசு இங்கு ஒரு அற்புதமும் செய்யவில்லை. இங்கு இயேசு கைவிடப்பட்டவராக, நகைப்புக்குள்ளானவராக இருந்தார். ஆயினும் அந்தக் கள்ளன் அவரை விசுவாசித்தான்.
அந்தக் கள்ளனுக்கு அதிகமாக அறிவு இல்லை. அவன் இயேசுவைப் பார்த்த பொழுது அழகான காட்சி எதுவும் காணவில்லை. ஆயினும், அவன் இயேசுவை நம்பி இரட்சிப்பை பெற்றுக் கொண்டான்.
வேதாகமத்தில் இந்த மனிதனுடைய விசுவாசம் மிகவும் உயர்ந்ததும், உன்னதமானதுமாக காணப்படுகிறது.
எனவே தான் இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
லூக்கா 23:43.
எனக்கு அருமையானவர்களே
நம்முடைய விசுவாசம் எப்படி இருக்கிறது??இயேசு கிறிஸ்து இந்த கள்வனுக்கு சொன்ன வார்த்தையை நம்மோடு சொல்லக் கூடுமா??
சிந்தித்துப் பாருங்கள்
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
யோவான் 3 :16.
தம்மையே நமக்காக தந்த இயேசுவின் அன்பை உணர்ந்தவர்களாய் வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.
ஆமென்.