அப்பொழுது இயேசு: பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். லூக்கா 23 :34.
எனக்கு அன்பானவர்களே!
மன்னிப்பதில் வள்ளலாம் இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
மன்னிப்பு என்பதை எல்லாராலும் அருள முடியாது…. மனப்பூர்வமாக ஒருவர் தனக்கு
செய்த தீங்கை மன்னிக்கிறார் ஒரு இளம்பெண்..
இந்த உண்மை
சம்பவம் நமக்கு மன்னிப்பின் அழகு என்ன என்று காண்பிக்கிறது…
ஜேக்குலின் என்ற
பெண் , முக அழகும் அழகான உடல் அமைப்பும் கொண்டவள். வீட்டில் ஒரே பெண் பிள்ளை என்றதாலே மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டாள்.
அவளும் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தாள் .
இவள் மேல்படிப்புக்காக கல்லூரி ஒன்றில் சேர்ந்தாள். அவளுடன் படித்த அனைவரும் ஜேக்குலின் போன்ற அமைதியான பாசமான தோழி எங்கும் இல்லை என்று
கூறும் அளவுக்கு அவள் குணம் நிறைந்தவளாய் அவளுடைய செயல்பாடுகள் இருந்தன.
ஜேக்குலினிற்கு தாய் இல்லை… தன் தந்தையையும் ஒரே
அண்ணனும் அவளை அன்பாக கனிவாக கவனித்துக் கொண்டார்கள்.
ஜேக்குலினின் அழகான வாழ்வில் ஒரு துயர சம்பவம் வர நேர்ந்தது…
தன் கல்லூரி இரு
தோழிகளுடன் அவள் ஒரு சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தாள்.
அப்பொழுது மது அருந்தி விட்டு காரில் வேகமாக வந்த ஒரு வாலிபர் அவர்கள்
மீது மோதி விட்டான்
ஜேக்குலினின் கண் முன்பே அவரது இரண்டு தோழிகளும் இறந்தனர்… ஜேக்குலின் உடல் முழுவதும் சிதைந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாள்.
அவளை அப்படியே விட்டுவிட்டு அந்த வாலிபன் ஓடி விட்டான்.
அங்கு இருந்த சில நல்மனம் படைத்த மனிதர்கள் அவளை மருத்துவமனைக்கு
எடுத்துக் கொண்டு
சேர்த்தனர்… மருத்துவர்கள் மிகவும் போராடி ஜேக்குலினின் உயிரை
காப்பாற்றினர்…
ஆனால் அவளுடைய உருவமோ பார்க்க முடியாத அருவருக்கத்தக்க தோற்றத்தில் இருந்தது.
இதுதான் அவளுடைய விபத்திற்கு பின் கிடைத்த உருவம்.
ஜேக்குலின் மனம்
உடைந்து போனாள்… அவளது தந்தையும் அண்ணனும் அவளுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தனர்.
அவள் தன் வயதுள்ள மக்களை கண்டால் ஜேக்குலின் கண்களில் கண்ணீர் வரும்….தன்
தோழிகள் நண்பர்கள் யாரும் இப்பொழுது தன்னை காண வருவதில்லை… தனக்கு
எல்லாமே தனது தந்தையும் அண்ணனும் தான் என்பதை அறிந்து கொண்டாள்.
அந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்…அந்த வாலிபரின் தாய் தன் மகனால்
ஜேக்குலினிற்கு நிகழ்ந்த கொடுமையை அறிந்து ஜேக்குலினை சந்தித்து கண்ணீர்
மல்க அழுதார்…
அதற்கு ஜேக்குலின் என்ன கூறினார் தெரியுமா?
“அவர் வேண்டுமென்றே அப்படி செய்யவில்லையே, தெரியாமல் நடந்த விபத்து தானே,
எனக்கு அவர் மேல் எந்த வருத்தமும் இல்லை” என்றார்.
அவரது இளகிய மனதை கண்டு
அங்கிருந்த அனைவரும் துடித்து போயினர். இந்த வயதில் இத்தனை பக்குவப்பட்ட மனமா? தன்னை இந்தக் கோலத்திற்கு கொண்டு வந்தவனை இவளால் எப்படி மன்னிக்க முடிந்தது என்று அசந்து போனார்கள்.
இந்த சம்பவம் இணையத்தில் வெளிவர … ஒரு நபர் இவ்வாறு
கமெண்ட் செய்திருந்தார்,
“எனக்கு ஜேக்குலின் போன்ற அழகான பெண் யாரும்
தெரியாது… அவரது உருவத்தில் இயேசு நாதரை காண்கிறேன்”
என்றார்.
வேதம் இவ்வாறு கூறுகிறது .நீதி 19:11. மனுஷனுடைய விவேகம் அவன் கோபத்தை அடக்கும்; குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை என்று.
வேதத்தில் பார்ப்போம்,
மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்.
மத்தேயு 6 :14.
அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின் படியே, இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.
எபேசியர் 1 :7.
அவர்கள் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து, எனக்கு விரோதமாய்த் துரோகம் பண்ணின அவர்களுடைய எல்லா அக்கிரமங்களையும் மன்னிப்பேன்.
எரேமியா 33 :8.
பிரியமானவர்களே,
நம் அன்பான இயேசு கிறிஸ்து குற்றுயிராய் நைந்து தொங்கிய உடல், சிலுவையில் ஓர் அழுக்கான படத்தைப் போல ஆணிகளால் அறையப்பட்டு தொங்கவிடப்பட்டது.
அந்த வேதனையின் பெருங்கடலிலும் இயேசு பிதாவிடம் வேண்டுதல் செய்தார்.
“பிதாவே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை”.
தனக்காக வேண்டுதல் செய்யவே பிரியமில்லாத மனிதர்களின் மத்தியில், பிறருக்காக வேண்டுதல் செய்கிறார் இயேசு. அதுவும் மரணத்தின் வாசலில் கால் வைக்கும் போதும் அவர் வேண்டுகிறார்.
பாவத்தை யார் தான் தெரியாமல் செய்தது? இயேசுவை சாட்டையால் அடித்தவனுக்குத் தெரியவில்லையா?, சிலுவையைத் தோளில் தூக்கிப் போட்டவனுக்குத் தெரியவில்லையா?, கூர் ஆணிகளால் வெள்ளைப் புறாவின் இறகுகளை இறுக்கமாய் அடித்தவனுக்குத் தெரியவில்லையா?
எல்லோருக்கும் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது தெரிந்தே இருந்தது. ஆனால், ‘மீட்பரைச் சிலுவையில் அறைகிறோம்’ என்பது அவர்களுக்குத் தெரியவில்லை.
வாழ்நாள் முழுவதும் மன்னிப்பைச் செயலிலும், போதனைகளிலும் காட்டி வந்த இயேசு, தனது முடிவுரையில் மீண்டும் ஒரு முறை அதை எழுதி வைக்கிறார்.
“பிதாவே இவர்களை மன்னியும்” என யாரைக் குறிப்பிட்டார் இயேசு.
அவரை குற்றம் சாட்டியவர்களை, சாட்டையால் அடித்தவர்களை,
‘சிலுவையில் அறையும்’ அறையும் என கத்தியவர்களை, ‘பரபாஸ் போதும்’ என சமரசம் செய்தவர்களை, சிலுவையில் அறைந்தவர்களை, அவருக்கு ஆதரவாய் நிற்காத மனிதர்களை… எல்லோரையும் இயேசு மன்னித்தார். அவ்வளவு தானா?
“நமது பாவங்கள் தான் அவரைச் சிலுவையில் அறைந்தது” என்கிறது பைபிள்.
அப்படியானால் அவரைச் சிலுவையில் அறைந்தது யார்? நமது பாவங்கள் தான்.
நம்மிடம் பாவம் இல்லை என்றால் நாம் பொய்யர்கள். எனில், சிலுவையில் உச்சியில் இயேசு யாருடைய பாவங்களை மன்னித்தார்?
நமது பாவங்களை மன்னித்தார்.
இயேசுவை, சிலுவையில் அறைந்ததில் நமது பங்கும் உண்டு.நாம் தெரிந்தே செய்கின்ற பாவத்தைக் கூட இயேசு, “தெரியாமல் செய்கிறார்கள்” என கரிசனையோடு கூறுகிறார். நமது பாவங்களுக்காகப் பரிந்து பேசுகிறார்.
மூன்று வயது மழலை குழந்தை தவறு செய்து விட்டு ஓடி வரும் போது, “சின்னப் பிள்ள தெரியாம செஞ்சுடுச்சு” என தழுவிக் கொள்ளும் ஒரு தந்தையின் பிரமிப்புப் பாசத்தை அல்லவா இயேசு சிலுவையில் காட்டினார்?
“இவனுடைய ரத்தப்பழி எங்கள் மேலும், எங்கள் சந்ததி மேலும் வரட்டும்” என திமிராய்ப் பேசிய மக்களை இயேசு சிறிதும் வெறுக்கவில்லை.
“தெரியாமல் செய்கிறார்கள், மன்னியுங்கள் பிதாவே” என வலியின் உச்சத்திலும் கதறி வேண்டுகிறார்.
“பாவத்தின் சம்பளம் மரணம், இதோ அந்த மரணத்தை நான் சிலுவையின் வழியாக நிறைவேற்றி விட்டேன்.
பிதாவே இவர்களை மன்னியும்” என இயேசு மக்களுக்காய் வேண்டுகிறார்.
பழிக்குப்பழி வாங்கும் எண்ணமோ, முள்ளை முள்ளால் எடுக்கும் குணமோ எனக்கு இல்லை. “பிதாவே என்னிடம் வெறுப்பு இல்லை, இவர்களை மன்னியும்” என எதிரிகளுக்காய் மன்றாடுகிறார்.
அந்த வார்த்தை கூடியிருந்த சேவகர்களை ஊடுருவக் குத்தியிருக்க வேண்டும். அங்கிருந்த படைவீரர்களில் சிலர் புனிதர்களாக மாறினார்கள் என்கிறது வரலாறு.
இயேசுவின் சிலுவை, விண்ணகத்தையும் மண்ணகத்தையும் இணைக்கும் பாலமாய் இருக்கிறது. கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இருந்த திரையைக் கிழித்தது சிலுவை தான்.
எப்படி ஜெபிக்க வேண்டும் எனும் போதனையில் மன்னிப்பைப் போதித்த இயேசு, எப்படி வாழ வேண்டும் என வாழ்க்கையில் மன்னிப்பைப் போதித்த இயேசு, எப்படி இறக்க வேண்டும் என்பதிலும் மன்னிப்பை முன்னிறுத்துகிறார்.
நாமும் இயேசுவை முன்மாதிரியாக கொண்டு அவரைப் போலவே வாழ்ந்து அவருடனே என்றென்றுமாய் வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.
ஆமென்.