Daily Manna 45

என் பிதாவே, இந்தப் பாத்திரத்தில் நான் பானம் பண்ணினாலொழிய இது என்னை விட்டு நீங்கக்கூடாதாகில், உம்முடைய சித்தத்தின்படி ஆகக்கடவது என்று ஜெபம் பண்ணினார். மத்தேயு 26:42

எனக்கு அன்பானவர்களே!

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

பல வருடங்களுக்கு முன்பு, சர்வாதிகாரியாக வாழ்ந்த நெப்போலியன், ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு ஒரு தீவில் தனிமையில் கைதியாக அடைக்கப்பட்டான்.

நாட்கள் செல்லச்செல்ல அவருடைய சரீரம் முழுவதும் வீக்கமடைய ஆரம்பித்தது, அவர் தன்னைக் கண்காணித்துக் கொண்டிருந்த அதிகாரியைப் பார்த்து, “ ஐயா, எனக்கு ஆகாரத்தில் விஷம்கலந்து கொடுத்து கொல்ல முயற்சி செய்வதைப் போல் உணருகிறேன். தயவுசெய்து எனக்கு உதவி செய்யுங்கள்” என்றார்.

உடனே வைத்தியரை அழைத்து வந்தனர். வைத்தியர் சோதித்துப் பார்த்து விட்டு, “யாரும் விஷம் கொடுக்கவில்லை” என்று எழுதி வைத்துப் போய்விட்டார். ஆனால், அங்கிருந்த ஒருவர் ஒவ்வொரு நாளும் யாருக்கும் தெரியாமல் அவருக்குக் கொடுக்கிற ஆகாரத்தில் சிறிதளவு விஷத்தை கலந்து கொண்டே வந்தார்.

விஷத்தின் கிரியையை தன் சரீரத்தில் உணர்ந்த நெப்போலியன், “ஐயோ, விஷத்தை வைத்து என்னைக் கொல்லுகிறார்களே; என்னைக் காப்பாற்ற யாரும் இல்லையே” என்று கண்ணீர் வடித்தவராய் மரித்துப் போனார்.

ஆம் ! மரணம் அத்தனை கொடுமையானது. நமது அருமை ஆண்டவர் ஒவ்வொரு மனிதனுடைய பாடுகளையும் ஏற்று கொண்டு, தனிமையில் மரண பயத்தின் வழியாக கடந்து சென்றார்.

ஒரு பக்தியுள்ள கிறிஸ்தவன் தனக்கு வரவிருக்கும் சவால்களை முழங்கால்களிலேயே எதிர்கொள்வான்!

தனக்கு வரும் போராட்டங்களை எதிர்கொள்ள முழங்கால் யுத்தம் ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் அவசியம்.

நமது ஆண்டவராகிய இயேசு தன்னை பெலப்படுத்திக் கொள்ள, சிலுவை மரணத்தை எதிர்கொள்ள முழங்காலிட்டார்! மூன்று முறை ஒரே வார்த்தையை சொல்லி ஜெபித்தார்..

அவர் ஒருமுறை ஜெபித்தால் போதாதா என்ன? எத்தனை முறை ஜெபித்தாலும் தன் விருப்பம் அல்ல, தேவசித்தமே ஆகட்டும் என ஜெபித்தார். நாம் எப்படி ஜெபிக்கிறோம் என நம்மை நாமே ஆராய்தல் மிகவும் அவசியம்!

வேதத்தில் பார்ப்போம்,

சற்று அப்புறம் போய், தரையிலே விழுந்து, அந்த வேளை தம்மை விட்டு நீங்கிப் போகக் கூடுமானால் அது நீங்க வேண்டுமென்று வேண்டிக் கொண்டு:
மாற்கு 14:35

அப்பா பிதாவே, எல்லாம் உம்மாலே கூடும்; இந்தப் பாத்திரத்தை என்னிலிருந்து எடுத்துப் போடும், ஆகிலும் என் சித்தத்தின் படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்றார்.
மாற்கு 14:36

பின்பு அவர் தம்முடைய சீஷர்களிடத்தில் வந்து: இனி நித்திரைபண்ணி இளைப்பாறுங்கள்; இதோ, மனுஷகுமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக் கொடுக்கப்படுகிற வேளை வந்தது.
மத்தேயு 26:45 என்றார்.

பிரியமானவர்களே,

காட்டிக் கொடுக்கப்படும் வேளை நெருங்க நெருங்க, அவர் தம்முடைய நெருங்கிய சீடர்களான பேதுரு, யாக்கோபு, யோவான் மூவரையும் கெத்செமனே தோட்டத்திற்கு கூட்டிக் கொண்டு போய் அங்கே அவர் துக்கமடையவும், வியாகுலப்படவும் தொடங்கி, “என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங் கொண்டிருக்கிறது;

நீங்கள் இங்கே தங்கி என்னோடேகூட விழித்திருங்கள்” என்று கூறி சற்று அப்புறம் சென்று, “என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்;

ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது “ மத்தேயு 26:36-42 என்று கதறினார். அவர் ஜெபித்து விட்டு திரும்பி வரும் பொழுது, அவருடைய சீடர்கள் மூவரும் உறங்கி விட்டார்கள்,

அவரோடு மன்றாட ஒருவரும் இல்லை. மரணம் இன்னதென்று அறியாத சர்வ வல்லமையுள்ள தேவனுடைய தற்சொரூபமாகிய அவர் தனிமையில் வியாகுலப்பட்டு, ஜெபம் பண்ணினார்.

அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய் தரையிலே விழுந்தது லூக்கா 22:44 ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தன்னை முழுமையாக நமக்காக அர்ப்பணித்தார்
அவர் பிதாவிற்கு கீழ்படிந்து, தம்மையே தியாக பலியாக ஒப்புக் கொடுத்தார்.

பழுதற்ற ஆட்டுக் குட்டியானவர் ஒவ்வொரு மனிதனுடைய பாவங்களுக்காகவும் தன்னுடைய சரீரத்தில் வேதனைகளை சகித்தார். இது எவ்வளவு பெரிய தாழ்மையான, தியாகம்.

அளவிடமுடியாத தேவ அன்பு. இன்றைக்கு நீங்களும் உங்களை தேவனுடைய சமூகத்தில் தாழ்த்துங்கள். உங்களுக்காக தம்மையே தியாகமாக்கின கர்த்தர் இரு கரம் நீட்டி உங்களை அரவணைத்து ஏற்றுக் கொள்வாரென்பதில் எந்த ஐயமுமில்லை.

“நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம் பண்ணும் போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்”
1 கொரிந்தியர்:11:26. என்ற வார்த்தையின்படி இதை நினைவுகூர்ந்து, இன்றைக்கு தேவசமூகத்தில் உங்களை தாழ்த்தி அர்ப்பணியுங்கள்.

அப்பொழுது அவர் உங்களை இரட்சித்து புது வாழ்வை தந்து ஆசீர்வதிப்பார்.
ஆமென்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *