தேவன் உங்களுக்குக், கட்டளையிட்ட உடன்படிக்கையின் இரத்தம் இதுவே. எபிரேயர் 9 :20
எனக்கு அன்பானவர்களே!
சிலுவை நாதர் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ரோட் ரன்னர் என்பது ஒரு பறவை. இந்த பறவைக்கு எதிரி கொடிய விஷமுள்ள ராடில் சிநேக் (Roddle Snake).
இந்த பாம்பு சுருண்டு படுத்து தூங்கும் போது அந்த பறவை கொடிய முட்களுள்ள கத்தாழை முட்களை வேலிபோல் இடைவெளி இல்லாமல் பாம்பை சுற்றி போட்டு விடும்.
இந்த பாம்பு அந்த முட்களைத் தாண்ட முயற்சித்தால் தன் உடல் புண்ணாகிவிடும் என்ற பயத்தில் தாண்டாது. இதனால் கோபமூண்ட பாம்பு தன்னை தானே கடித்துக் கொண்டு
அப்படியே செத்து போய்விடும்.
பிசாசோடும் அவன் தந்திரங்களோடும் தான் நமக்கு மிக பெரிய போராட்டம் உண்டு. நம்முடைய மனதில் தவறான எண்ணங்கள்,
ஆசைகள், இச்சைகளை, சண்டை, பகையை உண்டாக்குவதும் இந்த சத்துருவாகிய பிசாசு தான்.
இந்த ராடில் சிநேக் தூங்கும், எனவே மாட்டிக் கொள்ளும். நம்முடைய எதிராளியோ எவனை விழுங்கலாமென்று சுற்றித் திரிகிறவன். ஆனால் அவனால் தாண்ட முடியாத எல்லை ஒன்று உண்டென்றால் அது இயேசுவின் இரத்தம் மாத்திரமே.
எனவே இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஒன்றே வஞ்சக பிசாசின் கிரியைகளிலிருந்து நம்மைப் பாதுகாக்க முடியும்.
எகிப்தில் சங்காரத் தூதன் தலைப் பிள்ளைகள் யாவரையும் சங்கரித்த போது பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தம் பூசப்பட்ட வீடுகளை கடந்து சென்றான்.
இன்று நமக்கு அதைவிட வல்லமையான இரத்தம் உண்டு. தேவ ஆட்டுக்குட்டியாகிய இயேசுவின் இரத்தத்துக்குள் உங்களை ஒப்புக் கொடுங்கள். நீங்கள் அந்த இரத்தத்திற்குள் மறைந்திருக்கும் வரை சாத்தான் உங்களை நெருங்கவோ மேற்கொள்ளவோ முடியாது.
“நீங்கள் .. கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிற படியால், பாவம் உங்களை மேற்கொள்ள மாட்டாது” (ரோம.6:14). சிலுவையில்லையேல் இரத்தமில்லை. இரத்தமில்லையேல் பாதுகாப்பில்லை. பாதுகாப்பில்லையேல் பரலோகமில்லை. பரலோக வாசலாகிய சிலுவையில் சிந்தப்பட்ட இரத்தமே உங்களை முடிவு வரை பாதுகாக்கும்
வேதத்தில் பார்ப்போம்,
இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது.
மத்தேயு 26 :28.
இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.
ரோமர் 5 :9.
அந்தப்படியே, இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ் செய்யும் படியாக நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார்.
எபிரேயர் 13 :12.
பிரியமானவர்களே,
சிலுவையில் இயேசுகிறிஸ்து சிந்தின இரத்தம் நமக்காகப் பரிந்து பேசுகிறதாயிருக்கிறது.
1யோவான் 2:1 இல் ஒருவன் பாவஞ் செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காக பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்.
புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும், ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப் பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தம் என்றெழுதியிருக்கிறது.
நான் பாவம் செய்யும் பொழுது எனக்கு பாவத்திற்குரிய தண்டனை உடனே வரலில்லையென்றால்,எனக்காக பிதாவினிடத்தில் மன்றாடுகிறபடியால் நான் தப்புகிறேன்.
கிறிஸ்து எல்லாவற்றையும் பூமியில் செய்துவிட்டு “முடிந்தது” என்றார். ஆனால் இன்றும் எனக்காக பரிந்துபேசும் ஊழியத்தை மாத்திரம் செய்துகொண்டே இருக்கிறார்.
எத்தனை இரக்கம்! எத்தனை கிருபை!! நாம் நிர்மூலமாகாதிருப்பது அவருடைய சுத்த கிருபையே!! எனவே நாம் தைரியமாய் கிருபாசனத்தண்டை வருவோம். அவரிடத்தில் வருகிறவனுக்கு அடைக்கலமும் ஆசீர்வாதமும் நிச்சயம் உண்டு.
இச்செய்தியை வாசித்துக் கொண்டிருக்கிற அன்பான சகோதரனே, சகோதரியே இயேசுவின் இரத்தமில்லாமல் பாவமன்னிப்பில்லை. அவர் பரிந்து பேசாவிட்டால் நமக்கு மீட்பு இல்லை.
இயேசுவே உம்முடைய இரத்தத்தால் எங்களை கழுவும். உம்முடைய இரத்தத்தின் பாதுகாப்பில் எங்களையும் குடும்பத்தையும் வைத்துக் கொள்ளும் என்று ஒவ்வொரு நாளும் ஜெபிப்போம்.
அவரின் பாதுகாப்பில் என்றென்றும் வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு கிருபை செய்வாராக.
ஆமென்.