Daily Manna 61

சிலுவையைப் பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவ பெலனாயிருக்கிறது. 1 கொரி1:18

எனக்கு அன்பானவர்களே!

சிலுவை நாதர் இயேசு கிறிஸ்துவின் ஈடு இணையற்ற நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

ரொன் பேக்கர் (Ron Baker) என்னும் மனிதரின் வாழ்க்கையில் எல்லாமே தலை கீழாக போய் கொண்டிருந்தது. தனது சிறுவயதில் சென்ற தகாத அனுபவங்களால், அவர் ஒழுக்கமாக பேசக் கூடாதவராகவும், படிப்பறிவில்லாதவராகவும் இருந்தார்.

மேலும் அவர் குடிப்பழக்கத்திற்கும் சூதாட்டத்திற்கும், செய்வினை, பில்லி சூனியம் போன்ற எல்லா தீய பழக்க வழக்கத்திற்கும்,
அடிமையாகி இருந்தார்.

பஸ் ஓட்டுநராக வேலைப் பார்த்து வந்த அவர், தினமும் குடித்து வெறித்து, வீட்டுக்கு வந்து மனைவியையும், பிள்ளைகளையும் அடித்து, உதைப்பதும் வழக்கமாக இருந்தது.

அவர் பஸ் ஓட்டுநராக இருந்த காரணத்தால், பில்லிகிரகாம் என்ற ஊழியரின் நற்செய்திக் கூட்டங்களுக்கு மக்களை கொண்டு செல்பவராக பணியாற்றினார். முதல் நாள் கூட்டம் முடிய மிகவும் தாமதமானதால், அவரால் குடிக்க முடியாமல் போனது.

மறுநாள் மிகவும் கோபத்துடன் வந்த அவரை, அவரது நண்பர், பில்லிகிரகாமின் நற்செய்திக் கூட்டத்திற்கு வரும்படி அழைத்தார். ஆனால் அவருக்கு இருந்த கோபத்தில் அந்த நண்பரை கன்னா பின்னாவென்று திட்டித் தீர்த்தார்.

அவரது மனைவியும் அவரிடம், ‘நான் அந்த கூட்டங்களுக்கு போய் வருகிறேன். கர்த்தர் கிரியை செய்தார், நான் என் வாழ்க்கையை கர்த்தரிடம் அர்ப்பணித்தேன். நீங்களும் போய் வாருங்கள்’எனச் சொன்னார்கள். ஆனால் அவரோ, முடியாது என்று மனைவியை திட்டினார்.

ஆனாலும் கூட்டத்தின் கடைசி நாளன்று நண்பர் விடாப்பிடியாக, அவரை எப்படியோ சமாதானப்படுத்தி அவருடைய கூட்டத்திற்கு அழைத்து சென்றார். மேடைக்கு வெகு தூரத்தில் அமர்ந்திருந்த ரொன் பேக்கர், தன்னுடைய உள்ளத்திலோ ‘இந்த மனுஷன் சொல்கிறது எல்லாம் குப்பை’ என்று நினைத்துக் கொண்டே கேட்டு கொண்டிருந்தார்.

அதே நேரத்தில், சில வார்த்தைகள் அவரது உள்ளத்தில் விழுந்தது. அந்த இரவிலே தேவன் அவரை தொட்டார். அவர் தன் வாழ்வை கிறிஸ்துவுக்கு அர்பணிக்கும் அளவுக்கு அந்த வார்த்தை அவருக்குள் கிரியை செய்தது.

அதன்பின் இரண்டு வருடங்கள் அவர் குடி பழக்கத்தை விட போராடினார். அவரது சகல தீய பழக்கவழக்கங்களிலிருந்தும் விடுபட கர்த்தர் தமது கிருபையினால் உதவி செய்தார்.

ஒரு கிறிஸ்தவ பயிற்சியாளர் மூலம் நன்கு பேசவும், படிக்கவும் கற்றுக் கொண்டார். ஒரு வேதாகம கல்லூரியில் சேர்ந்து, வேதத்தை முறையாக கற்று, ஆஸ்திரேலியா முழுவதும் கர்த்தரின் நாமத்தை பறைசாற்றுகிற வல்லமையுள்ள ஊழியராக மாறினார்.

நம் தேவனால் கூடாத காரியம் ஒன்றுண்டோ?
அன்பார்ந்தவர்களே, இயேசு கிறிஸ்துவிடம் வரும் போது, நாம் இரட்சிக்கப்படுவது மட்டுமன்றி, நம்முடைய ஆவி ஆத்துமா சரீரத்திலும் பெரிய விடுதலையை அடைகிறோம்.

கிறிஸ்துவை குறித்து, உபதேசங்களை கேட்கும் போது, அநேகருக்கு அது பைத்தியமாக தோன்றுகிறது.

இந்த கிறிஸ்தவர்களுக்கு வேறு வேலையில்லை என்று கூறுகிறவர்களும் உண்டு. ஆனால் அந்த இரட்சிப்பை பெற்றுக் கொள்கிறவர்களுக்கோ, அது தேவபெலனாய், நமது நம்பிக்கையாய், நமது எதிர்காலமாய், நமது ஜீவியத்தையே மாற்றுகிறதாக இருக்கிறது.

வேதத்தில் பார்ப்போம்,

அவர் {இயேசு}எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக் கொண்டு, என்னைப் பின்பற்றக் கடவன்.
லூக்கா 9:23.

நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங் குறித்து மேன்மை பாராட்டாதிருப்பேனாக;
கலா 6 :14.

சிலுவையை ப்பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவ பெலனாயிருக்கிறது.
1 கொரி 1 :18.

பிரியமானவர்களே,

கிறிஸ்தவத்தின் அடையாள சின்னமாக சிலுவை விளங்குகிறது. பாவம் என்பது எவ்வளவு பயங்கரமான ஒன்று என்பதை அது ஞாபகப்படுத்துகிறது.

பாவத்திலிருந்து மனிதனை மீட்க இயேசு எவ்வளவு பெரிய கிரயத்தை செலுத்த வேண்டியிருந்தது என்பதை அது நமக்கு நினைவுபடுத்துகிறது

அதை நாம் பார்க்கும் போது மிகக்கொடிய தண்டனையாகிய சிலுவை மரணத்தின் மூலம் என்னுடைய பாவங்களிலிருந்து நான் மீட்கப்பட உதவி செய்தீரே என்று கர்த்தரை துதிக்க வேண்டும்.

ஆனால் இவ்வித உணர்வுகளோடு சிலுவையை பார்ப்பவர்கள் எத்தனைபேர் என்று கேட்க வேண்டியுள்ளது. பல ஆலயங்களில் சிலுவை அடையாளம் என்பது இங்கே ஒரு கிறிஸ்துவ ஆலயம் இருக்கிறது என்பதை பிறருக்கு அடையாளம் காட்டவே பயன்படுகிறது.

பலர் அந்த அடையாளத்தை நாங்களும் கிறிஸ்தவர்கள் என்று அடையாளம் காட்ட கழுத்திலும், காதிலும் அணிந்துக் கொள்ளுகிறார்கள்.

எப்படியோ சிலுவை மிக விரும்பப்பட்ட முக்கிய அடையாளமாகி விட்டது. ஆனால் சிலுவையின் உண்மையான அர்த்தங்கள் மறக்கப்பட்டு விட்டன.

சிலுவை அடையாளங்களை நம்மோடு வைத்திருப்பதாலும், சிலுவை அடையாளங்களை நாம் உபயோகிக்கும் பொருட்களில் பொறிப்பதாலும் ஆசீர்வாதம் வரும் என்ற ஐதீக சிந்தனை முதலில் மாற வேண்டும்.

சிலுவையை அல்ல சிலுவையில் நமக்காக அறைப்பட்ட இயேசுவின் ஐக்கியம் நம்மிடம் எப்போதும் காண சிலுவை மூலம் இயேசு நமக்காக உருவாக்கிய ரட்சிப்பின் அனுபவம் நம்மோடு இருக்க வேண்டும்.

நமக்கு தேவை சிலுவையின் அடையாளம் அல்ல. சிலுவையின் மூலமாக நமக்காக ஆயத்தமாக்கப்பட்ட பரிசுத்த வாழ்வு என்ற அடையாளமே அவசியம்.

கிறிஸ்துவினுடைய உபதேசம், பாவ மனிதனை பாவத்திலிருந்து வெளிவர செய்கிறது. அநேகர் தங்கள் வாழ்வை கிறிஸ்துவுக்கு ஒப்புகொடுக்க காரணமாய் இருக்கிறது. அநேகர் அந்த உபதேசத்தினால் ஆத்மீக சரீர சுகமடைந்திருக்கிறார்கள்.

அந்த உபதேசத்திற்கு ஏன் அத்தனை ஆற்றல் என்றால்,அது இயேசு கிறிஸ்துவாகிய உலக இரட்சகரை பற்றியது. அவரே உலகத்தில் வந்த எந்த மனிதனையும் பிரகாசிப்பிக்கும் மெய்யான ஒளியாக இருக்கிறவர்.

இந்த அருமையான தேவனை போல் வேறு யாருண்டு? நமது பாவங்களை கழுவி நம்மை இரட்சித்து, நம்மை பரலோக ராஜ்ஜியத்திற்கு பங்குள்ளவர்களாய் மாற்றும் இந்த தேவனைப் போல யாருண்டு?

இந்த தேவனை விசுவாசிக்கிறவர்கள் யாரும் வெட்கப்பட்டு போவதில்லை.

இப்படிப்பட்ட நல்ல தெய்வத்தை பெற்றுள்ள நாம் பாக்கியவான்கள் ! சிலுவையினால் வெற்றி சிறந்தவர் நம்மையும் வெற்றி சிறக்க பண்ண வல்லவராயிருக்கிறார்.

அவர் தருகிற ஆசீர்வாதங்களை பெற்றுக் கொண்டு வளமான வாழ்வு வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.
ஆமென்.

  • Related Posts

    தயவு: ஆவியின் கனியாக வாழ்க்கையில் வெளிப்படும் கிரிஸ்தவ குணம்

    தயவு என்பது கைமாறு நினைக்காமல் செய்யப்படும் அன்பான நடத்தை. இது ஆவியின் கனியாக வளரும்போது உறவுகள், சமாதானம், விசுவாச வாழ்வு எல்லாம் வலுப்படும்.

    நாவின் அதிகாரம்: வார்த்தைகள் வாழ்க்கையையும் உறவுகளையும் எப்படி மாற்றுகின்றன

    நாவின் அதிகாரம் ஏன் நம்மை எச்சரிக்கச் செய்கிறது? நாவின் அதிகாரம் என்பது ஒரு சிறிய விஷயமாக தோன்றலாம். ஆனால் வேதாகமம் அதை மிகவும் தீவிரமாக எடுத்துக் காட்டுகிறது. நாம் பேசும் வார்த்தைகள் ஒருவரை உயர்த்தவும் முடியும், அதே நேரத்தில் ஒருவரின் மனதை…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    Seek First the Kingdom of God: A Practical Guide to Right Priorities

    Seek First the Kingdom of God: A Practical Guide to Right Priorities

    You Will Eat the Fruit of Your Labor: God’s Promise for Faithful Work

    You Will Eat the Fruit of Your Labor: God’s Promise for Faithful Work

    God’s Word Is Light: Biblical Guidance for Life

    God’s Word Is Light: Biblical Guidance for Life

    Trust in the Lord: Committing Your Ways to God

    Trust in the Lord: Committing Your Ways to God

    Living a Faithful Life: Why Truth Still Matters to God

    Living a Faithful Life: Why Truth Still Matters to God

    Christian Kindness: How the Fruit of the Spirit Changes Everyday Relationships

    Christian Kindness: How the Fruit of the Spirit Changes Everyday Relationships