மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனை செய்து, ஆனந்த சத்தத்தோடே அவர் சந்நிதி முன் வாருங்கள். சங்கீதம் 100:2
எனக்கு அன்பானவர்களே!
ஆராதனையின் நாயகராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
நம்மில் அனேகர் இன்று ஞாயிற்றுக் கிழமையா? ஆராதனையில் நான் தவறாமல் சர்ச்சுக்கு போய் விடுவேன்” என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறோம்.
ஆனால், சர்ச்சுக்குப் போனதும் பைபிளை வாசிப்பதைக் கவனமாக கேட்கிறோமா? அல்லது பிரசங்கத்திற்கு செவிமடுக்கிறோமா? அங்கே, ஆராதனை நடந்து கொண்டிருக்க, நாம் ஆலயத்தை விட்டு வெளியேறி, சொந்த விஷயங்களைப் பேசிக் கொண்டும், நினைத்துக் கொண்டும் இருக்கிறோம்.
இதனால் ஆலயத்திற்கு வந்ததினால், என்ன லாபம்? 1930 -ல் காந்திஜி தென்ஆப்ரிக்காவில் இருந்தார். சில கிறிஸ்தவ நண்பர்களின் ஆலோசனைப்படி ஞாயிறுதோறும் சூவெஸ்லியன்’ சர்ச்சுக்கு சென்றார்.
அங்கு சென்றதைப் பற்றி அவரே சொல்கிறார்,
“அங்கு நடந்த எந்தக் காரியங்களும் எனக்கு ஆர்வமூட்டுவதாக இல்லை. சபையார் நடந்து கொண்ட முறையில் எனக்கு திருப்தி ஏற்படவில்லை.
அவர்கள் தேவ பக்தியுள்ளவர்கள் என்று என்னால் சொல்ல முடியாது. உலக சிந்தையுள்ளவர் களாகவே இருந்ததைக் காண முடிந்தது.
ஆலயத்திற்கு வருவதை ஒரு பொழுது போக்காகவும் ஏதோ சடங்காச் சாரத்திற்காகவும் வருகிறவர்கள் போல் தான் தெரிந்தது.
அந்த ஆலயத்திலிருந்த வேளையில் அநேக சந்தர்ப்பங்களில் என்னையும் அறியாமல் நான் தூங்கி விடுவேன். தொடர்ந்து, ஆலயத்திற்கு செல்வதால் எந்த பயனுமில்லை என்று நினைத்து அங்கு செல்வதை நான் நிறுத்திக் கொண்டேன்,” என்கிறார்.
ஒரு வேளை காந்திஜி ஆலயத்தில் சென்ற போது உண்மையான தேவ பக்தியுள்ளவர்களை கண்டிருந்தால் அன்றே கிறிஸ்தவத்தை பின்பற்றியிருப்பார் அல்லவா?
அவர் சொல்லி 77 ஆண்டுகள் கடந்து விட்டன. இப்போது நம் ஆலயம் எப்படி இருக்கிறது? நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?
பைபிளை கற்றிருக்கிறோமா?அல்லது பிரசங்கங்களை கேட்கிறோமா? நம்மை நாமே சுய பரிசோதனை செய்து பார்க்கும் வேளை இது.
“சகல மனிதர்களாலும் அறிந்து வாசிக்கப்படும் நிருபமாக” வசனப்படி நாம் மாற வேண்டும். ஒரு நடமாடும் பைபிளாக நம்மை நாமே மாற்றிக் கொள்ள வேண்டும்.
வேதத்தில் பார்ப்போம்,
மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப்போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று, ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான் என்றார்.
மத்தேயு 15 :9.
அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக் கொடுக்க வேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக் கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.
ரோமர் 12 :1.
ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக் கொள்ளக் கடவோம்.
எபி12 :28.
பிரியமானவர்களே,
ஆராதனை என்பதன் பொருள்…..
தேவனுடைய நாமத்தை மகிமைபடுத்துதல் என்பதாகும்.
பாடல்கள் மூலமாகவும், நம்முடைய நல்ல செயல்கள் மற்றும் நம்முடைய நற்கிரியைகள் மூலமாக நாம் தேவனுடைய நாமத்தை மகிமைபடுத்துவதே சிறந்த ஆராதனையாகும் என்பது பலருடைய கருத்தாகும்.
நம்முடைய ஜீவியத்தின் எல்லா பகுதிகளிலும் தேவனுடைய நாமத்தை உயர்த்தும் எந்த செயலும் ஆராதனையே..
ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் *பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை* செய்யும்படி கிருபையைப் பற்றிக் கொள்ளக் கடவோம். எபி 12:28-
நாம் அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்கள். இன்றைக்கு அசையும் ராஜ்யத்துக்கு மனிதர்கள் போராடுகிறார்கள், ஆசைப்படுகிறார்கள்.
ஒருவருக்கொருவர் பொறாமையோடும், போட்டியோடும் இந்த உலகத்தில் வாழ்கிறார்கள்.
ஆனால் ஒருநாள் அவர்களின் மூச்சு எடுக்கப்படும் பொழுது எல்லாம் மறைந்துவிடும். இது நிலையான ராஜ்ஜியம் அல்ல. ஆனால் தேவ மக்களாகிய நாம் அசைவில்லாத ராஜ்ஜியத்தைப் பெறப் போகிறவர்கள்.
தேவனுக்குப் பிரியமாயிராமல், உலகத்தின் முறைகளைத் தெரிந்து கொண்டு, உலகத்துக்குப் பிரியமாய் வாழ்வது நம்முடைய வாழ்க்கையில் அசைவில்லாத ராஜ்ஜியத்தின் சரியான வழிமுறை அல்ல.
ஆண்டவர் கிருபையாக நமக்கு இந்த தேவ வசனங்களைக் கொடுத்து, அதன் மூலமாக அசைவில்லாத ராஜ்யத்தை குறித்தக் காரியத்தையும், நம்பிக்கையையும் நம்முடைய இருதயத்தில் வைக்கிறார்.
இதை நாம் பற்றிக் கொள்ளாமல் மற்றதைப் பற்றி கொள்ளுவோமானால் நாம் எவ்விதம் நித்திய ராஜ்ஜியத்தின் பிரஜைகளாகக் காணப்பட முடியும்?
ஆகவே தான், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ் செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக் கடவோம்”
எபிரேயர் 4:16 என்று வேதம் சொல்லுகிறது.
எவ்வளவு உன்னதமான ஸ்தலம் கிருபாசனம். அப்படியே ஆண்டவருடைய சமூகத்தில் நாம் சென்று கிருபாசனத்தின் முன்பு நம்முடைய எல்லா காரியங்களையையும் விவரித்துச் சொல்லுவோமானால், அவர் நமக்கு இரங்குகிறவரும், நம்மை அருமையான வழியில் நடத்திச் செல்பவராகவும் இருக்கிறார்.
தேவனுக்குப் பிரியமான ஆராதனை செய்ய மக்களிடம் வாஞ்சை இல்லை. இன்றைக்கு ஆராதனை என்ற பெயரில் மக்கள் பலவித சுய இஷ்ட ஆராதனை செய்கிறார்கள்.
தங்கள் விருப்பப்படி ஆடியும் பாடியும் ஆராதனை என்ற பெயரில் செயல்படுவது கர்த்தருக்குப் பிரியமில்லாத பொய்யான ஆராதனையாகும்.
நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்ய நம் இருதயத்தைத் தாழ்த்துவோமாக.
இப்படிப்பட்ட புத்தியுள்ள ஆராதனையை பக்தியுடன் இந்த ஓய்வு நாளில் அவருக்கு சமர்பிக்க கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு கிருபை செய்வாராக.
ஆமென்.