Daily Manna 70

நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோக ராஜ்யம் அவர்களுடையது. மத்தேயு 5:10

எனக்கு அன்பானவர்களே!

இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

1960 ஆம் ஆண்டு பாஸ்டர் புளோரெஸ்கோ என்பவர் ரோமானியாவில் “இயேசுவே மெய்யான தேவன்” என்று அறிவித்த ஒரே காரணத்துக்காக தீவிரவாதிகள் அவரைக் கொரடூரமாகத் தாக்கி பயங்கர இரத்தக் காயங்களுடன் சிறையில் அடைத்தனர்.

ஒவ்வொரு நாளும் அவர்கள் மீண்டும் மீண்டும் சிறைக்கு வந்து “உன்னோடு சேர்த்து இயேசுவை வழிபடும் மற்றவர்கள் யார் யார் இருக்கின்றார்கள்? அவர்களுடைய பெயரைச் சொல்” என்று கேட்டு பல வகையில் கொடுமைப்படுத்தினார்கள்.

எதைக் கேட்டாலும் எந்த பதிலையும் சொல்லாமல் அமைதியாகவே இருந்தார். அந்த தீவிரவாதிகளுக்கு அது ஒரு சவாலாகவே மாறி விட்டது. பழுக்க காய்ச்சிய இரும்புக் கம்பியுடன் தீவிரவாதிகள் சிறை அறைக்குள் நுழைந்தனர்.

புளோரெஸ்கோவிற்கு சிவப்பும் மஞ்சளும் கலந்த நிறத்தில் தக தக என அக்கினியைக் கக்கிக் கொண்டிருக்கும் கம்பியின் கொடிய காட்சி அச்சத்தை உருவாக்கிற்று.

“இது என் நொந்து போன சரீரத்தில் படுமானால் என் நிலை என்னவாகும்” என்ற பயம் ஒரு பக்கம், “கர்த்தர் பெரியவர், அவர் எனக்கு நலமானதை செய்வார்” என்ற உறுதி மறுபக்கம்.

அச்சத்தின் மத்தியிலும் உறுதியே மேலோங்கி நின்றது. அவர்கள் கேட்ட எந்த தகவலும் அவர் கூற மறுத்து விட்டார். பழுக்க காய்ச்சிய கம்பி அவரது உடலில் பல இடங்களில் பாய்ந்து தன்னிலுள்ள அக்கினியின் உக்கிரத்தைத் தீர்த்துக் கொண்டது.

மயங்கி விழுந்த நிலையில் விட்டு விட்டுச் சென்றனர்.
பல நாட்கள் பட்டினி போட்டார்கள். பல எலிகளை அவரது அறையில் விட்டனர். இரண்டு வாரங்கள் இரவும் பகலும் அவைகள் அவரைத் தூங்க விடவில்லை. தூங்கினால் எலிகள் தாக்கி விடும்.

உட்காரக் கூட முடியாமல் விழிப்போடிருந்து அவற்றை விரட்டிக் கொண்டு நின்றார். இந்த நிலையில் அவ்வப்போது வந்து அவரைக் கேள்வி கேட்பார்கள். அவர் மௌனமே சாதித்தார். தன்னோடுள்ள கிறிஸ்தவ சகோதரர்களை அவர் காட்டிக் கொடுக்கவே இல்லை. அதில் உறுதியான வைராக் கியமாயிருந்தார்.

கடைசியாக அந்த தீவிரவாதிகள் புளோரெஸ்கோவின் 14 வயதான மகனைக் கொண்டு வந்தனர். பாஸ்டருக்கு முன்பாக ஒன்றுமறியாத அவனை கொடூரமாக அடித்து சித்திரவதை செய்தார்கள். புளோரேஸ்கோ இதை தாங்க முடியாமல் துடித்துப் போனார்.

பாஸ்டரின் உறுதி அசைய ஆரம்பித்தது. “அலெக்சாண்டர் என் மகனே, உன்மேல் விழும் அடிகளை என்னால் தாங்க முடியவில்லை, அவர்கள் விரும்புகிற தகவல்களை நான் சொல்லித் தான் ஆக வேண்டுமோ? என்னால் இதை சகிக்க முடியவில்லையே” என்று கதறினார்.

“அப்பா என்னைக் கொன்றாலும் அதைத் தாங்கிக் கொள்ளுங்கள். மற்றவர்களைப் பற்றி சொல்லி விடாதிருங்கள், கிறிஸ்தவர்களைக் காட்டிக் கொடுத்த துரோகியின் மகன் என்ற அநியாயப் பெயர் எனக்கு வேண்டாமப்பா” என்று தைரியமாக பதிலுரைத்தான். “என் மகனே” என்று புளோரெஸ்கோ கதறினார்.

“அப்பா நான் செத்தாலும் இயேசுவின் பெயரை உச்சரித்துக் கொண்டே சாவேன், நீந்கள் பயப்பட வேண்டாம்” என்று மகன் தைரியம் சொன்னான்.

எதையோ எதிர்பார்த்து மகனைக் கொண்டு வர அது வேறு வகையில் திரும்பி விட்டதே என்ற கடுங் கோபத்தில் அவனைத் தாக்கினார்கள். அவன் சிந்திய இரத்தம் சிறைச் சுவர்களெல்லாம் தெறித்தது. இயேசுவைத் துதித்துக் கொண்டே தன் ஜீவனை விட்டான்.

“அலெக்சாண்டர், என் மகனே நீ எனக்கு முந்திக் கொண்டாய், நீ இயேசுவோடு இருப்பாய். நானும் வந்து உன்னைக் காண்பேன்” என் மகனே என்றார்.

இரத்த சாட்சிகளின் ஒரு சொட்டு இரத்தம் கூட வீணாகிப் போவதில்லை. அவை யாவும் ஜீவனுள்ள வித்துக்கள். அவைகள் நிச்சயம் முளைத்தெழும்பும்.

வேதத்தில் பார்ப்போம்

என் ஆத்துமா தேவன்மேல், ஜீவனுள்ள தேவன் மேலேயே தாகமாயிருக்கிறது; நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்?
சங்கீதம் 42:2

என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்.
மத்தேயு 5:11

நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோக ராஜ்யம் அவர்களுடையது.
மத்தேயு 5 :10.

பிரியமானவர்களே,

நாம் தீமை செய்து பாடு அனுபவித்தால், அது ஏற்றுக் கொள்ளக் கூடியதே. ஆனால், நன்மை செய்து பாடுகளை அனுபவிக்க நேர்ந்தால், அவைகளைப் பொறுமையோடு சகிப்பது மிகவும் கடினம்.

ஆனால் அதைத் தான் ஆண்டவர் நமக்கு முன் மாதிரியாக வைத்துப் போனார். இயேசு சிலுவைப் பாடுகளையும் அவமானத்தையும் பொறுமையுடன் சகித்தாரே, அவர் பாவம் செய்தாரா? இல்லை.

ஆனால் அதுவே தமது பிதாவின் சித்தம் என்பதை இயேசு அறிந்திருந்தார். நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோக ராஜ்யம் அவர்களுடையது மத். 5:10 என்று கற்றுத் தந்தவர் ஆண்டவர் தானே!

அவர் அடிக்கின்றவர்களுக்கு முதுகையும் உமிழ்நீருக்கு முகத்தையும் மறைக்கவில்லை. அவற்றைப் பொறுமையோடு சகித்து, அவர்களுடைய மன்னிப்புக்காக சிலுவையில் தொங்கியபடியே ஜெபித்தாரல்லவா!

அந்த சிந்தை, அந்த குணாதிசயம் இன்று நம்மிலும் காண்பிக்கப்பட வேண்டும் அல்லவா!

நம்முடைய வாழ்வில் பாடுகள் பெருகும் போது, நமக்காகவே பாடுகளைச் சகித்த ஆண்டவரையே நினைத்துக் கொள்வோம். நாம் பாடுகளுக்கு முகங்கொடுக்கும் போது, கிறிஸ்து நமக்குள் இருக்கிறார் என்பதை நினைவு கூருவோம்.

2கொரி.13:5.
பாடுகளைப் பொறுமையோடு சகிக்கும்போது, விசுவாசத்தில் இன்னமும் உறுதியாயிருப்போம். பாடுகள் நம்மைச் சுத்தப்படுத்தி, தேவனோடு இன்னும் கிட்டிச்சேரும் பெரும் சிலாக்கியத்தைக் கொடுக்கிறது.

நீதியின் நிமித்தம் பாடுபட நேரிடுமாயின், அதை இன்முகத்துடனே அனுபவிப்போம்.

ஆம், தேவ பிள்ளைகளாகிய நாம், தீமை செய்து பாடனுபவிப்பதிலும், தேவனுக்குச் சித்தமானால், நன்மைசெய்து பாடனுபவிப்பதே மேன்மையாயிருக்கும்
1பேது.3:17 அல்லவா,

இவ்வுலக வாழ்வை நாம் பாடுகளின் வழியாக தான் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. அந்த பாடுகள் மத்தியிலும் நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மோடு இருந்து நமக்கு விசுவாசத்தையும் பெலனையும் தந்து, நாம் மேலான ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ள நமக்கு உதவி செய்வாராக.

ஆமென்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *