ஆனாலும் எங்கள் தேவனாகிய ஆண்டவரிடத்தில் இரக்கங்களும் மன்னிப்புகளும் உண்டு. தானியேல் 9:10
எனக்கு அன்பானவர்களே!
மன்னிப்பின் மகுடமாம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
நம்மில் பெரும்பாலானோர் பலரை மன்னித்துவிடும் மனப்பான்மையில் இருப்பதில்லை. ஆனால், ஒருவரை மன்னிப்பதால் கிடைக்கும் உணர்வினை குறித்து ஒருவர் பேசியுள்ளார்.
ஒரு சக்தி வாய்ந்த TEDx உள்ளூர் தன்னார்வலர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பேச்சரங்கத்தில் பேசிய, எழுத்தாளரும் கதையாசிரியருமான சாரா மொன்டானா என்பவர் தனது குடும்பத்தில் இரண்டு மரணங்களுக்கு காரணமான ஒருவரை மன்னிக்க முயற்சிக்கும் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
அந்த நபர் தனது தாய் மற்றும் சகோதரரை கொலை செய்து விட்டார். அது தனது வாழ்க்கையை புரட்டி போட்டது என்றார்.
இருப்பினும் ஒரு மனிதனுக்கு ஏற்படும் சில மோசமான சூழ்நிலைகள் மற்றும் அதன் வெவ்வேறு விதங்களை பற்றி நான் கற்பனை செய்து பார்த்தேன். மன்னிப்பது தான் சிறந்தது என முடிவு செய்தேன்.எனவே
நான் மன்னிப்பின் பாதையில் செல்ல முடிவெடுத்திருக்கிறேன் என கூறினார்.
இப்போது, தனது குடும்பத்தை கொன்ற கொடூரன் ஆயுள் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறான்.
ஆனால் என்னால் அந்த நபரை காப்பாற்ற எந்த ஆதாரத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
மேலும் சிறைகளில் நடக்கும் மனித உரிமை மீறல்களின் எண்ணிக்கையை உணர்ந்த போது, என்னுடைய குடும்பத்தை கொன்றவன் எவ்வளவு துன்பப்படுகிறான் என்பதை உணர்ந்தேன் என் சாரா தெரிவித்துள்ளார்.
ஆனால், தனது குடும்பத்தை அழித்தவரை நான் ஏன் மன்னிக்க வேண்டும்? என்ற கேள்விக்கு பதிலளித்த சாரா, ஆண்டவரின் அன்பு என்னைத் தூண்டியது என்று கூறினார்.
மன்னிப்பைத் தேடுவதை நோக்கித் தூண்டியது என்ன என்பதைப் பற்றி அவர் கூறுகையில், “என்னைப் பொறுத்தவரை, மூன்று காரணங்கள் இருந்தது. அதில் ஒன்று, நான் ஒரு நல்ல மனிதனாக இருக்க விரும்புகிறேன்.
இரண்டு மற்றவர்களை மகிழ்விப்பதை நான் விரும்புகிறேன். மூன்று எனக்கு பாதிக்கப்படக்கூடிய, கோபமான, குழப்பமான, முட்டாள்தனத்தை நான் வெறுக்கிறேன்.
ஆனால் மன்னிப்பு என்பது ஒரு வலிமையான சக்தியாக மாறிவிடும். இதனை எண்ணும் போது மேற்கண்ட காரணங்கள் எதுவும் மனதில் ஒட்டிக் கொள்ளும் அளவுக்கு வலுவாக இருக்காது.” என்று கூறினார்.
வேதத்தில் பார்ப்போம்,
மனுஷனுடைய விவேகம் அவன் கோபத்தை அடக்கும்; குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை.
நீதி 19 :11.
மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்.
மத்தேயு 6 :16.
கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்.
எரேமியா 31:34.
பிரியமானவர்களே,
நீங்கள் ஒருவர் மீது கோபத்தை வளர்த்துக் கொண்டால் உங்களுக்குத் தான் பாதிப்பு உண்டாகும்.
உங்களை நீங்களே கன்னத்தில் அறைந்து கொண்டு வேறொருவருக்கு வலிக்க வேண்டும் என்று நினைப்பீர்களா?
மன்னிக்காமல் மனதில் கோபத்தை வளர்க்கும் ஒருவர் இப்படித் தான் நினைக்கிறார்; தன்னைக் கஷ்டப்படுத்தியவருக்குத் தண்டனை கொடுப்பதாக நினைத்துக் கொண்டு தன்னையே ஏமாற்றிக் கொள்கிறார்.
மார்க் ஸிக்கல் என்பவர் “குடும்பங்களைப் பிணைக்க”என்ற புத்தகத்தில் (ஆங்கிலம்) இப்படிச் சொல்கிறார்: ‘நீங்க தான் அவர் மேல [குடும்பத்திலுள்ள ஒருவர் மேல்] கோபமா இருப்பீங்க. ஆனா, அவரு எதையுமே கண்டுக்காம, எப்பவும் போல ஜாலியா இருப்பார்.அவரை தண்டிக்கணும்னு நீங்கள் நினைச்சு செய்ற எதுவும் அவரை பாதிக்காது, உங்கள தான் பாதிக்கும்.’ என்று எழுதி வைத்துள்ளார்.
`ஒரு மனிதன் தேவ நிலையை அடைய வேண்டுமெனில் மன்னிப்பு அவனிடம் இருக்க வேண்டும்’ என்கிறது பகவத் கீதை.
இஸ்லாம் கடவுளை ‘அல் கபிர்’ என்கிறது, “முழுமையாய் மன்னிப்பவர்” என்பது அதன் அர்த்தம். ‘மன்னிக்க மறுப்பவர்கள் சுவர்க்கம் செல்லவே முடியாது’ என்கிறது.
ஆனால் கிறிஸ்தவ மதமோ, இயேசுவே உலகத்தில் வந்து மன்னிப்பைக் போதித்தது மட்டுமின்றி, மன்னிப்பை கடைபிடித்து ஒரு முன்மாதிரியான வாழ்க்கையை மக்களுக்கு காண்பித்தார்.
ஆனால் மனிதனுடைய மனதில் மட்டும் மன்னிப்பு என்பது குதிரைக் கொம்பாகத் தான் இருக்கிறது.
மன்னிப்பது கோழைகளின் செயல் என்றே பலரும் நினைக்கிறார்கள். ‘எதிரி நாட்டு மன்னனைப் போரிட்டு அழிக்கும் பரம்பரை நாம்’ என பெருமை பாராட்டுகிறோம்.
உண்மையில் மன்னிப்பது தான் போரை விட வீரமானது. போர் உடல்களைத் தான் வெற்றி கொள்ளும், ஆனால் மன்னிப்பு மனதையே வெற்றி கொள்ளும்.
இதைத் தான் மகாத்மா சொன்னார், ‘மன்னிப்பு பலவான்களின் செயல், பலவீனர்களால் மன்னிக்க முடியாது.
கைகுலுக்கிக் கொள்வது நாம் நட்புடன் இருக்கிறோம் என்பதன் வெளி அடையாளம் மட்டும் தான். மன்னிப்புடன் மனங்களைக் குலுக்கிக் கொள்வது தான் உண்மையான நட்பின் அடையாளம்.
அடையாளங்கள் வாழ்க்கையை அழகாக்குவதில்லை, அவை காகிதப் பூக்களை ஒட்டி வைத்த முல்லைக் கொடி போல செயற்கையின் பிள்ளையாய் அர்த்தமிழக்கும்.
மன்னிக்கத் தெரிந்த மனிதர்கள் ஈகோ எனும் எல்லைக்கு வெளியே நின்று வாழ்க்கையை அதன் அழகியலில் லயிப்பவர்கள். மனிதத்தின் புனிதமான பாதைகளில் பயணிக்கும் பாதங்கள் அவர்களுடையவை.
ஆகவே நாமும், பிறர் நமக்கு செய்த தீமைகளை மன்னித்து இறைமகன் இயேசு காட்டிய வழியில் நடக்க கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு அருள் புரிவாராக.
ஆமென்.