நித்திய ஜீவனை அளிப்பேன் என்பதே (இயேசு) அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம். 1 யோவான் 2:25
எனக்கு அன்பானவர்களே!
நல்ல மேய்ப்பனாம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
இந்த தவக்காலத்தில் இயேசுவின் பாடுகளையும் மரணத்தையும் தினமும் தியானித்து வருகிறோம்.
ஒரு சமயம் யோர்தானிலுள்ள பெட்றா என்ற இடத்தில் குதிரையில் சென்று கொண்டிருந்த ஒரு மனிதர் அப்பொழுது ஒரு காட்சியை கண்டார்.
சுமார் 200 அடிக்கு மேலாக உள்ள ஒரு மலையுச்சியிலிருந்து ஒரு மனிதன் ஒரு கயிறைக் கட்டி இறங்கிக் கொண்டிருந்தான்.
மலையுச்சியிலிருந்து சுமார் முப்பது அடிக்குக் கீழாக ஒரு சிறிய செங்குத்தான பாறை இருந்தது. அதில் ஒரு ஆடு தனிமையாக ஆதரவின்றி நின்றிருந்தது.
அம்மனிதன் தன் உயிரைப் பணயம் வைத்து அந்த ஆபத்தின் விளிம்பில் நிற்கும் ஆட்டைக் காப்பாற்ற முயற்சி செய்து கொண்டிருந்தான்.
இம்முயற்சியில் அவனுடைய உயிருக்கும் ஆபத்து உண்டல்லவா?
ஆனாலும் இந்த யோர்தான் மேய்ப்பன் தன் உயிரைப் பணயம் வைத்து இறங்கி அந்த தனித்த ஆட்டை காப்பாற்றினான்.
அதைப் போன்று தான்
நாமும் , பாவத்திலும் , சாபத்திலும் சிக்கி தவித்த போது நம்மை மீட்க இயேசு தன்னுடைய உயிரையே தியாகம் செய்தார்.
கோரச் சிலுவையின் பலவிதமான சித்திரவதைகளை மனமுவந்து நமக்காக ஏற்றுக் கொண்டார். நமக்காக, தமது உயிரைக் விலைக்கிரமாய் கொடுத்து நம்மை மீட்டுக் கொண்டார்.
வேதத்தில் பார்ப்போம்,
நானே நல்ல மேய்ப்பன், நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.
யோவான் 10:11
நாமெல்லாரும் ஆடுகளைப் போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன் தன் வழியிலே போனோம், கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப் பண்ணினார்.
ஏசாயா 53:6.
நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.
யோவான் 10:9.
பிரியமானவர்களே!
நம் அருமை ஆண்டவர் சொல்லுகிறார்.
நானே நல்ல மேய்ப்பன்; நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான் யோவான் 10:11. ஒரு மேய்ப்பன் தன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுப்பானா? அவர்களுக்கிடையே உள்ள அன்பு அவ்வளவு வலிமையானதா? என நாம் கேள்விகளை எழுப்பலாம்.
தொண்ணூற்றொன்பது ஆடுகளின் உவமையில் அந்த மேய்ப்பன் தனது ஆடுகள் அனைத்தையும் பத்திரமான இடத்தில் சேர்த்த பின்னர் காணமற்போன ஆட்டைத் தேடி வனாந்தரத்துக்குப் போனான் என்று இயேசு விளக்கினார்.
எனவே, நல்ல மேய்ப்பன் தியாக உணர்வோடு தம் மந்தையைக் காக்கிறான் என்பதை இயேசு சுட்டிக் காட்டுகிறார்.
அவர் நம்மைக் காக்கிறார்.
தன்னுடைய மந்தைக்காக தன்னுடைய உயிரைக் கொடுக்க ஆயத்தமாயிருக்கிற அவரே நல்ல மேய்ப்பன்.
அவர் தன்னுடைய சரீரத்தை மட்டும் நமக்காகக் கொடுப்பேன் என்று சொல்லாமல், தன்னுடைய ஆவி, ஆத்துமா, சரீரம் அனைத்தையும் தன்னுடைய மந்தையின் மீட்புக்காகக் கொடுக்கிறார்.
இயேசு தனக்காக வாழ்ந்து, தனக்காக மரிக்காமல் நமக்காக வாழ்ந்து, நமக்காக மரித்தார்.அந்த நல்ல மேய்ப்பனின் சத்தத்திற்குச் செவிகொடுத்து அவரின் பிள்ளைகளாய் வாழ நம்மை அன்பாய் அழைக்கிறார்.
நாமும் இந்த பரிசுத்த ஓய்வு நாளில் கர்த்தரின் சத்தத்தை கேட்டு அவருக்கு பின் சென்று மேய்ச்சலை (ஆசீர்வாதங்களை) கண்டடைவோம்.
ஆமென்.