யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள். இதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். மத்தேயு 12 :41
எனக்கு அன்பானவர்களே!
இரக்கமுள்ளவராய் இருக்கிற இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
நினிவே என்கிற மிகப்பெரிய நகரமாகவும், அதிகமான பாவங்களும், அக்கிரமங்களும் காணப்பட்ட இடமாக இருந்தது. இது அசீரியாவின் தலைநகரமாகமாகும்.
அசீரியா என்றாலே முழு உலகமும் நடுங்குமளவுக்கு அது பயங்கரமானதாக இருந்தது. பகைவர்களை கொடூரமாக சித்திரவதை செய்து, கொல்வதில் இவர்கள் பெயர் போனவர்களாக இருந்தார்கள்.
குற்றவாளிகளின் தோலை உரித்தல், மனிதத் தோலை தங்கள் இருக்கையின் விரிப்புக்குப் பயன்படுத்துதல், சிறைபிடிக்கப்பட்ட பெண்களை கொடுமையாக அவமானப்படுத்துதல்
தாங்கள் தோற்கடித்த பகுதியின் மக்களுடைய தலைகளை ஊரின் நுழைவாயிலில் குவித்து வைத்தல் போன்றவற்றைச் செய்தார்கள்.
20 அடி உயரம். 40 அடி அகலத்திற்கு மண்டை ஓடுகளைக் குவித்து வைத்திருந்தார்கள் என்றால், எத்தனை ஆயிரக்கணக்கான நபர்களின் தலைகள் என்று பாருங்கள்!
அத்தனை கொடூரமான மனிதர்கள் நாட்டில் வாழ்ந்து வந்தார்கள்.
அந்நாட்டில் மக்களின் பாவம் பெருகியது அவர்களுடைய அக்கிரமம் என் சமுகத்தில் வந்து எட்டினது
யோனா 1:2
என்று தேவன் கூறுகிறார்.
ஆனாலும் அந்த மக்களுக்காக தேவன் மனஸ்தாபப்பட்டார்.
வேதத்தில் பார்ப்போம்,
வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத இலட்சத்து இருபதினாயிரம் பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற மகா நகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ என்றார்.
யோனா 4:11
நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், நான் உனக்குக் கற்பிக்கும் வார்த்தையை அதற்கு விரோதமாய்ப் பிரசங்கி என்றார்.
யோனா 3:2
என் நெருக்கத்தில் நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்கு உத்தரவு அருளினார்; நான் பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூக்குரலிட்டேன், நீர் என் சத்தத்தைக் கேட்டீர்.
யோனா 2:2
பிரியமானவர்களே,
யோனா என்ற பெயருக்கு புறா என்று அர்த்தமாகும். பழைய ஏற்பாட்டில், சரித்திரப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தீர்க்கதரிகளின் சிறிய புத்தகங்களில் இதுவும் ஒன்றாகும்.
மற்ற தீர்க்கதரிசிகளின் புத்தகங்களிலிருந்து இது முற்றிலும் மாறுபட்ட புத்தகமாக இருக்கிறது. காரணம் இது ஒரு குறிப்பட்ட தீர்க்கதரிசனத்தை முக்கியப்படுத்தாமல்,
யோனா தீர்க்கதரிசியின் வாழ்வில் நடந்த சம்பவத்தைக் குறித்ததாக இருக்கிறது.
எனவே இது ஒரு செய்தி அல்ல, மாறாக ஒரு சரித்திர சம்பவமாகும்.
இந்தப் புத்தகம் குறிப்பாக தேவன் புறஜாதியாரை சந்திக்கும் சத்தியத்தையும், அவருடைய இரக்கத்தையும், மன்னிக்கும் தன்மையையும், அவருடைய பரிதபிக்கும் குணாதிசயத்தையும் மிக அழகாகப் படம்பிடித்துக் காட்டுகிறது.
தேவனுடைய சித்தமும் மனிதனுடைய சித்தமும் எவ்வாறு இடைபடுகின்றன என்பதைக் குறித்த சிறந்த படைப்பாக இந்தப் புத்தகம் இருக்கிறது. முடிவில் விருப்பமற்ற ஒரு தீர்க்கதரிசியால் தேவனுடைய விருப்பம் (சித்தம்) நிறைவேற்றப்பட்டது.
இந்தப் புத்தகத்தின் செய்தி நமக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. இரட்சிக்கப்படாத புறஜாதி மக்களைக் குறித்த பாரம் நமக்குள்ளே உண்டாக வேண்டும். தேவன் நம்மை நேசிப்பதைப் போலவே, இரட்சிக்கப்படாத புறஜாதியாரையும் நேசிக்கிறார் என்பது தான் மிக மிக உண்மையாகும்.
அவர்களும் இரட்சிக்கப்பட வேண்டும் என்று அவர் ஏங்குகிறார். புறஜாதியாரையும் தேவன் நேசிக்கிறார் என்பது யூதர்களால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்றாக இருந்தது.
யோனா நினிவேக்குப் போகாமல் விலகிச் சென்றதற்கு 2 காரணங்கள் கருதப்படுகின்றன:
1. நினிவே பட்டணத்தாரின் கொடூரமான சுபாவ குணமுள்ள வர்கள், தேவனால் அழிவு வருகிறது என்று பிரசங்கித்தால், தனக்கு ஆபத்தைப் கொண்டு வரும் என்று பயந்து அங்கே செல்வதைத் தவிர்த்திருக்கலாம்.
அல்லது யூதர்கள் அனைவரும் மற்ற உலகத்தாரை அதிகமாக வெறுத்தார்கள், நினிவே பட்டணத்தார் மனந்திரும்பி அழிவின் தண்டனைக்குத் தப்புவதை யோனாவும் விரும்பாததால், அவர் அங்கே செல்வதைத் தவிர்த்திருக்கலாம்.
என்று பல அறிஞர்களால் கருதப்படுகின்றன.
ஆனால் அன்பின் ஆண்டவர் அழிவில் இருக்கும் அந்த மக்களுக்காக பரிதவிக்கின்றார்.
யோனாவோவென்றால் கப்பலின் கீழ்த்தட்டில் இறங்கிப் போய்ப் படுத்து அயர்ந்த நித்திரை பண்ணினான்.
தேவனுடைய சமூகத்திலிருந்து விலகி நம்மால் எங்குமே செல்ல முடியாது எனபது தான் உண்மை.
மீனின் வயிற்றுக்குள் யோனா பட்டபாடு, இந்த முறை அவனை உடனே நினிவேவுக்கு செல்ல வைத்தது.
யோனா-3: 2 நீ எழுந்து மகாநகரமாகிய நினிவேக்குப் போய், நான் உனக்குக் கற்பிக்கும் வார்த்தையை அதற்கு விரோதமாய்ப் பிரசங்கி என்றார்.
பிரியமானவர்களே, மக்கள் மனந்திரும்பும் போது, தேவன் தாம் செய்ய நினைத்திருந்த தீங்கைச் செய்யாதபடி, தன் முடிவை மாற்றுவதை யோனாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
சத்தியமானது தவறுக்காக தண்டிப்பேன் என்று சொல்கிறது. கிருபை தவறுக்காக மன்னிப்பேன் என்று சொல்கிறது. சத்தியமும் கிருபையும், தவறுக்காக மனந்திரும்பிடு, அப்பொழுது
மன்னிக்கப்படுவாய் என்று சொல்கிறது.
ஆனால் கிறிஸ்தவமோ சத்தியமும் கிருபையும் என்ற தன்மையில் செயல்படுகிறது.
நாமும் பிறரையும் தேவ ராஜ்ஜியத்திற்கு நேராய் அழைத்து செல்லுவோம். யோனாவைப் போல நமது சுயநலனுக்காக அல்ல. தேவ திட்டத்தை நிறைவேற்ற சுவிஷேசத்தை அறிவிப்போம்.
கர்த்தரின் சித்தத்தை செய்து சாட்சியுள்ள வாழ்வு வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு கிருபை செய்வாராக.
ஆமென்.