ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; மத்தேயு 7 :2
எனக்கு அன்பானவர்களே!
கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒரு பெண் கடைக்குச் சென்று பொருட்கள் வாங்க போகும் போது வழியில், ஒரு பால் பொருட்கள் விற்கும் கடையில் சீஸ் {Cheese}
ஒரு சிறிய பாக்கெட் வாங்கி அதை தன் கையில் இருக்கும் பையில் பணத்தோடு கூட வைத்து விட்டு,மற்ற கடையில் சென்று பொருட்களை வாங்க ஆரம்பித்தாள்.
அந்த சீஸ் உருகி, பணப்பையை நனைக்க ஆரம்பித்தது, ஒவ்வொரு முறையும் அவள் பணத்தை எடுக்கும் போது,
வருகின்ற நாற்றத்தினால் அவள் அங்கிருக்கும் பணியாளர்களிடமி ருந்து தான் வருகிறது என்று நினைத்து ஐயோ எப்படி இப்படி நாற்றமெடுக்கும் ஊழியர்களை வேலைக்கு வைத்திருக்கிறார்கள்
என்று நினைத்தவளாக,
பணத்தை கொடுத்து விட்டு வெளியே வந்தாள்.
கடைசியாக தன் வீட்டை அடைந்தாள். வீட்டுச் சாவியை எடுக்க தன் கைப்பையை திறந்தபோது , அவளால் தாங்க முடியாத நாற்றம் வீசியது. தன்னிடம் இருந்து தான் இந்த தாங்க முடியாத நாற்றம் வருகிறது என்று அறிந்த போது,நான் மற்றவர்களை எப்படி எல்லாம் தரக்குறைவாக பேசினோம் என்று நினைத்து போது வெட்கி தலை குனிந்து போனாள்.
பிரியமானவர்களே,
நம்மில் அநேகருக்கு மற்றவர்களிடம் குறைகளை கண்டுபிடிப்பது நமக்கு எத்தனை எளிதாக இருக்கிறது ?
ஆனால் நாம் மற்றவர்களை குறை சொல்வதற்கு முன், நாம் எப்படி இருக்கிறோம்? நம்முடைய குடும்ப நபர்கள் என்ன சூழ்நிலையில் இருக்கிறார்கள்? என்பதை அறிந்த பின்பு மற்றவர்களை அலசி ஆராய முற்படுவோம்.
வேதத்தில் பார்ப்போம்,
நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்.
மத்தேயு 7 :1.
ஆகையால், மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி, போக்குச் சொல்ல உனக்கு இடமில்லை; நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக் குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத் தானே குற்றவாளியாகத் தீர்க்கிறாய்.
ரோமர் 2 :1.
மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்; அப்பொழுது நீங்களும் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதிருப்பீர்கள்; மற்றவர்களை ஆக்கினைக்குள்ளாகும்படி தீர்க்காதிருங்கள், அப்பொழுது நீங்களும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதிருப்பீர்கள்;
லூக்கா 6: 37.
பிரியமானவர்களே,
நம் அருமை ஆண்டவர் உத்திரம், துரும்பு இந்த இரண்டின் மூலமாக தேவ ராஜ்ஜியத்தின் இரகசியத்தை நமக்கு கற்றுக் கொடுக்கிறார்.
தேவ ராஜ்ஜியத்தின் புத்திரர்கள் எப்படிப்பட்டவர்களாய் வாழ வேண்டும் என்று போதிக்கிறார். மாயக்காரனே! என ஆண்டவர் அழைப்பதிலிருந்து இந்த மாயக்காரர்கள் யார் என நாம் சிந்திக்கலாம்.
தங்கள் பெருங்குற்றத்தை உணராதவர்கள்
முதலாவது, மாய் மாலக்காரார்கள். இவர்கள் தங்களில் இருக்கக் கூடியதான பெரிய குற்றங்களை உணராதவர்கள்.
தங்கள் கண்ணில் உத்திரத்தை வைத்திருக்கிறவர்கள். ஆனால் பிறர் கண்ணில் இருக்கிற துரும்பைப் பார்ப்பார்கள். ஆகவே தான் ஆண்டவர் அவர்களைப் பார்த்து, ‘மாயக்காரனே’ எனச் சொல்லுகிறார்.
பரிசேயர்கள், சதுசேயர்கள், ஆசாரியர்கள் இவர்கள் தங்களைப் பக்திநெறியிலே வாழ்கிறவர்களென்று வெளிப்படையாய்ச் சொல்லிக் கொண்டார்கள். சீஷத்துவ வாழ்விலே, கிறிஸ்துவை பின்பற்றுகிற வாழ்விலே, ஆயக்காரர் வாழ்விலே அவர்களை பல்வேறு விதங்களிலே குற்றம் கண்டுபிடிக்க முற்பட்டார்கள்.
“நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்” மத்.7:1,2. பார்க்கிறோம்.
பழைய கால வீடுகளிலே மரக்கட்டை உத்திரம் பெரிய அளவிலே இருக்கும். அந்த உத்திரத்தினால் தான் அந்த வீடு நிலைநிற்கும். அந்த உத்திரம் பார்வைக்கு மறைந்திருக்காது. எல்லார் கண்களிலும் படும்படியாக பெரியதாக இருக்கும். ஆகவேதான் ஆண்டவர் உன்னிடத்திலுள்ள பெருங்குற்றத்தை உணராமல் மற்றவர்களிலிருக்கிற துரும்பைப் போன்ற காரியங்களைப் பார்க்கிறதென்ன? எனச் சொல்லுகிறார்.
நமது வாழ்க்கையிலும் இப்படிப்பட்ட உத்திரம் போன்ற காரியங்கள் இருக்கின்றனவா என்பதை நாம் ஆராய்ந்து பார்ப்போம்.
தங்களுடைய வாழ்வில் இருக்கிற பாவ அடிமைத் தனத்திலிருந்து விடுதலைப் பெறாமல் மற்றவர்களுடைய தவறை சுட்டிக் காண்பித்து அவர்களைத் திருத்த முற்படுகிறவர்கள் மாயக்காரர்களாக இருப்பார்கள்.
எனவே நம்முடைய வாழ்க்கையை ஆராய்ந்து பார்ப்போம். உண்மையாகவே நாம் தேவ ராஜ்ஜியத்தின் பிள்ளைகளாயிருக்கிறோமா? அல்லது மாய்மாலமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா?
தங்களிடத்திலுள்ள பெருங்குற்றத்தை உணராதவர்கள், பிறரிடத்திலுள்ள சிறிய குற்றத்தையே பெரிதாக எண்ணுகிறவர்கள், தங்களைத் திருத்திக் கொள்ள முயலாமல் மற்றவர்களை திருத்த முயலுகிறவர்கள் இப்படிப்பட்ட மாய்மாலமான குருட்டாடமான வாழ்விலிருந்து மனந்திரும்பவும்,
நம்முடைய மனக்கண்கள் திறக்கப்படுவதற்கும் கர்த்தருடைய ஆவியானவர் தாமே நமக்கு உதவி செய்து வழிநடத்துவாராக!
ஆமென்.