Daily Manna 95

லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார். யோவான் 11:43

எனக்கு அன்பானவர்களே!

உயிர்த்தெழுதலும்,
ஜீவனுமாய் இருக்கிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

எகிப்து தேசத்தில் கிறிஸ்தவத்தை எதிர்க்கிற காலம் இருந்தது‌. அப்பொழுது ஒரு மனிதர் தனது மனைவி பைபிளைப் படித்துக் கொண்டிருந்ததை, பார்த்ததும் ஆத்திரம் அடைந்து அவளை அடித்துக் கொன்று விட்டு, கைக் குழந்தை மற்றும் 8 வயது மகளை உயிருடன் புதைத்துள்ளார்.

15 நாட்களுக்குப் பிறகு, மற்றொரு குடும்ப உறுப்பினர் இறந்தார். அவரைப் புதைக்கச் குழி தோண்டிய போது மணலுக்கு அடியில் 2 சிறுமிகள் உயிருடன் இருப்பதைக் கண்டனர்.

பெரிய பெண்ணிடம் “நீ எப்படி உயிர் பிழைத்தாய் ?”என்று கேட்கப்பட்ட போது, அந்த 8 வயது குழந்தை கூறினாள்.

​​’பளபளப்பான வெண்மை ஆடை அணிந்து, கைகளில் ரத்தக் காயம் ஏற்பட்ட தழும்புகளுடன் வந்தவர்
எங்களுக்கு தினமும் உணவளிக்க வந்தார் என்றாள்.

சரி, அப்படியானால் 8 மாத குழந்தைக்கு எப்படி உணவளிக்கப்பட்டது என்ற கேள்வியை எழுப்பிய போது “அவளுக்கு பசி எடுக்கும் போது அவரே வந்து என் அம்மாவை எழுப்புவார். அதனால் என் அம்மா எழும்பி என் சகோதரிக்கு பாலூட்டினார்கள்” என்று அந்த குழந்தை கூறினாள்.

எகிப்திய தேசிய தொலைக்காட்சியில், முஸ்லிம் பெண் செய்தி தொகுப்பாளர் மூலம் இப்பேட்டியைக் கண்டார். அவள் பொதுத் தொலைக்காட்சியில், ‘இது வேறு யாருமல்ல, இயேசுவே, இயேசுவைத் தவிர வேறு யாரும் இதுபோன்ற செயல்களைச் செய்ய மாட்டார்கள்!’,

ஈசா (இயேசு) தான் இதைச் செய்தார் என்று நம்புகிறார்கள்.
ஏனெனில் அவர் கைகளில் உள்ள காயங்கள் அவர் உண்மையில் சிலுவையில் அறையப்பட்டதைக் குறிக்கிறது, மேலும் அவர் தான் என்பதும் தெளிவாகிறது.

இந்த குழந்தைகள் உயிரோடிருந்தது உண்மையான அதிசயம். அதிசயம் இல்லாமல் இருந்தால் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை.

இந்த சாட்சியை கேட்ட, கண்ட அநேகர் இயேசுவை ஏற்றுக் கொண்டனர்.

கிறிஸ்து என்னும் இரட்சகர் இவ்வுலகை தலைகீழாக மாற்றிக் கொண்டிருக்கிறார் என்பது தான் நிதர்சனமான உண்மை.

வேதத்தில் பார்ப்போம்,

எல்லாரும் அழுது அவளைக் குறித்துத் துக்கங் கொண்டாடுகிறதைக் கண்டு: அழாதேயுங்கள், அவள் மரித்துப் போகவில்லை, நித்திரையாயிருக்கிறாள் என்றார்.
லூக்கா 8:52

இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;
யோவான் 11 :25.

நாம் பிழைத்தாலும், கர்த்தருக்கென்று பிழைக்கிறோம், நாம் மரித்தாலும் கர்த்தருக்கென்று மரிக்கிறோம்; ஆகையால் பிழைத்தாலும் மரித்தாலும் நாம் கர்த்தருடையவர்களாயிருக்கிறோம்.
ரோமர் 14:8.

பிரியமானவர்களே,

காலம் கடந்து விட்டது, இனி எதுவும் செய்ய முடியாது
என்று அனேகர் சொல்லுவதை நாம் கேட்டிருப்போம்.

சிலருடைய வாழ்வைக் குறித்தும் இனி இவன் அல்லது இவள் பிழைக்க மாட்டாள்.{ அல்லது திருந்தவே மாட்டாள்}
என்று முடிவு கட்டி விடுகிறோம். ஆனால், முடியாததையும் முடிய வைக்கிறவர் தான் நம் ஆண்டவர்.

வேதத்தில் மார்த்தாள், மரியாள், லாசரு மகிழ்ச்சியோடு வாழ்ந்த குடும்பம். அந்தக் குடும்பத்தில் லாசருவின் மரணம் குடும்பத்தின் மகிழ்ச்சியையே கொன்று விட்டது.

சகோதரிகள் இருவரும் மனக்கிலேசங் கொண்டு கண்ணீருடன் காணப்பட்டார்கள். இயேசு வந்த போது, மார்த்தாள் அவருக்கு எதிர் கொண்டு போய் ‘நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரிக்க மாட்டான்’ என்று கூறினாள்.

அதாவது, இயேசு முன்னரே வந்திருந்தால், வியாதியைக் குணப்படுத்தியிருப்பார், லாசருவும் மரித்திருக்க மாட்டான் என்பது அவளது எண்ணம். ஆனால், எதையும் ஆண்டவர் காரணமின்றிச் செய்கிறவர் அல்ல.

லாசருவின் உடல் வைக்கப்பட்ட கல்லறைக்கு அருகில் வந்த இயேசு, கல்லறையை அடைத்திருந்த கல்லை அகற்றச் சொன்னார். அடக்கம் செய்து நான்கு நாட்கள் கடந்து விட்ட நிலையில் இயேசு சொன்ன இந்த வார்த்தைகள் அங்கிருந்தவர்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கலாம்.

ஆனால், ஆண்டவரோ, ‘லாசருவே, வெளியே வா’ என்று உரத்த சத்தமாய் கூப்பிட்டார். அந்த சத்தத்தைக் கேட்டதும் மரணம் தன் பிடியை விட்டு விட்டு ஓடிப் போனது. லாசரு உயிருடன் எழுந்து வந்தான்.

இனி எந்தவித நம்பிக்கையும் இல்லை என்று முடிவு செய்திருந்தனர் அவரது சகோதரிகள். ஆனால், ஆண்டவரோ இன்னும் நம்பிக்கை உண்டு என்று திடப்படுத்தினார். நான்கு நாட்களாகி விட்டது, இனி எதுவும் செய்ய முடியாது என்று நினைத்தனர் மக்கள். ஆனால், இயேசுவோ மரணம் கூட தேவ கட்டுப்பாட்டுக்குள் தான் இருக்கிறது என்பதை நிரூபித்து காட்டினார்.

அப்படியிருக்கும் போது, ஒரு நபரைப் பார்த்து, இவர் இனி பிழைக்கவே மாட்டார் திருந்த வாய்ப்பே இல்லை என்று நாம் தள்ளிவிடலாமா?

தவறான பாதையில் வழிநடக்கும் நம்முடைய பிள்ளைகளில் நாம் வைத்திருந்த நம்பிக்கையை இழந்து போகலாமா? திருந்தாத கணவன், திருந்தாத மனைவி என்று உறவுகளைத் தள்ளி வைக்கலாமா?

எல்லாவற்றுக்கும் தேவனுக்கு ஒரு நேரம் இருப்பது மாத்திரமல்ல, தேவனுடைய வழி ஒன்றும் உண்டு. அவர் முந்துகிறவரும் அல்ல, பிந்துகிறவரும் அல்ல. அவர் ஒவ்வொருவருடைய வாழ்வையும் அடைத்துப் போட்ட பாவ கல்லறைக்கு அருகே நின்று, ‘வெளியே வா’ என்று அழைக்கிறார்.

அவருடைய சத்தம் தடைகளை உடைக்கும். பாவக் கட்டை அவிழ்க்கும்.
அவருடைய சத்தத்தைக் கேட்கிற ஒவ்வொருவரையும் விடுவிக்கும்.

நாமும் கர்த்தரின் சத்தத்தை கேட்டு, நம் வாழ்வில் உள்ள தீமைகளை களைந்து, வியாதிகளை களைந்து நம்மை அதிசயமாய் நடத்துகிற தகப்பனுடைய கைகளை பிடித்துக் கொள்வோம்.

அவரே நமக்கு ஜீவனும் தீர்க்காயுசுமானவராய் நம்மோடு கூடவே இருந்து வழிநடத்துவாராக.

ஆமென்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *