If we say we have no sin we deceive ourselves
நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது.
1 யோவான் 1 :8.
“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””எனக்கு அன்பானவர்களே!
பாவங்களை பாராத பரிசுத்த தேவனாம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
“பிரசங்கிகளின் பிரபு“ எனப் புகழப்பட்ட சார்ள்ஸ் ஸ்பேர்ஜன் என்பார்
ஒரு முறை நான் “பூரணமான பரிசுத்தவான்“ எனத் தன்னை அழைத்துக் கொண்ட ஒரு மனிதனை சந்தி்த்தார்.
“தன்னில் ஒரு பாவமும் இல்லை“ எனக் கூறிக் கொண்ட அம்மனிதனின் வார்த்தையைக் கேட்டு ஆச்சரியப்பட்ட ஸ்பேர்ஜன் அவரைத் தன் வீட்டுக்கு வரும்படி அழைத்தார்.
பூரண பரிசுத்த மனிதனான அவருக்கு ஸ்பேர்ஜன் தன் வீட்டில் அருமையான விருந்தொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.
விருந்துண்ணும் போதும் அம்மனிதன் தன் பூரண பரிசுத்த வாழ்வுக்கான ஆதாரங்களை ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டிருந்தான்.
அம்மனிதன் சொல்பவைகள் அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த ஸ்பேர்ஜன் கடைசியில், மேசையிலிருந்த தண்ணீர் கோப்பையை எடுத்து அம்மனிதனின் முகத்தில் வீசினார்.
உடனே அம்மனிதன் கோபங் கொண்டு ஸ்பேர்ஜனைக் கடுமையாகத் திட்டத் தொடங்கினான்.
அப்போது ஸ்பேர்ஜன் அம்மனிதனிடம் “உன்னுடைய பழைய மனிதன் மரணமடையவில்லை. அவன் மயங்கியே இருந்திருக்கின்றான்.
இதனால் தான் கொஞ்சம் தண்ணீர்பட்டதும் அவன் மயக்கம் தெளிந்து எழுந்து விட்டான்“ என்று கூறினார்.
இப்படி தான் ஆவிக்குரிய வாழ்வில் பாவம் செய்து வாழ்கிறவர்கள் “தேவனோடு தங்களுக்கு ஐக்கியம் இருக்கிறது” என்று கூறியும் இருளில் நடப்பவர்களாக இருக்கின்றனர்.
ஆனால், அவர்களது வாழ்வும் நடக்கையும் அவர்கள் கூறுவதைப் பொய்யாக்குகின்றது. ஆனாலும் நாங்கள் “தேவனோடு ஐக்கியமாயிருக்கிறோம்” என்று கூறுகிறவர்கள் அநேகர்.
நாம் தேவனோடு ஐக்கியம் உள்ளவர்கள் என்று கூறி இருளில் நடந்தால், நமக்குள் உண்மை இல்லை என்று யோவான் கூறுகின்றார்.
வேதத்தில் பார்ப்போம்,
பாவஞ்செய்கிற எவனும் நியாயப் பிரமாணத்தை மீறுகிறான்; நியாயப் பிரமாணத்தை மீறுகிறதே பாவம்.
1 யோவான் 3 :4.
சொற்களின் மிகுதியில் பாவமில்லாமற் போகாது; தன் உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான்.
நீதி 10:19.
கிருபையினாலும் சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையை விட்டு விலகுவார்கள்.
நீதி 16 :6.
பிரியமானவர்களே,
இவ்வுலகில் யாருமே பூரணமான பரிசுத்தமானவர்கள் இல்லை.பூரணத்தை நோக்கி ஓடிக் கொண்டிருப்பவர்கள் தான்.
நமக்குப் பாவமில்லை என்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது”. இந்தவிதமான விசுவாசிகளினிடத்தில், அவர்களது பாவம் அவர்களிடமே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
அவர்கள் இருதயத்தில் அதை நன்றாக அறிவார்கள். ஆனால் வெளிப்படுத்தப்பட்ட பாவத்தை அவர்கள் ஒத்துக் கொள்ள மறுக்கின்றனர். இதுவொரு பெரிய வஞ்சனையும் அநீதியும் ஆகும்.
இரட்சிப்பைப் பெறாத ஒருவனால் மட்டுமே இது கூடும். லூக்கா.18ஆம் அதிகாரத்தில் இப்படிப்பட்ட ஒரு பாவியான மனுஷனை பார்க்கின்றோம்.
“பரிசேயன் நின்று: தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப் போலவும், இந்த ஆயக்காரனைப் போலவும் இராததினால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.
வாரத்தில் இரண்டு தரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்தி வருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம் பண்ணினான்”
லூக். 18:11,12.
இந்தப் பரிசேயன் தான் பாவி என்று ஒத்துக் கொள்ள மனதில்லாது இருந்தான்.
தேவனுக்கு முன்பாக தான் செய்துவந்த ஆவிக்குரிய செயல்களைப் பட்டியல் போட்டுக் காட்டி பெருமை பாராட்டினான். அந்த ஆயக்காரனைவிட நான் நல்லவனாக இருக்கிறேன், நல்லவனாக நினைத்தேன். ‘நான் எந்த பாவமும் செய்யவில்லை’ என்பதே அவனது பெருமை.
நம்மில் பாவமே இல்லை – நாம் பூரணமான பரிசுத்தவான்கள் எனக் கூறுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை. அது சுய புகழ்ச்சிக்காகவும் வீண் பெருமைக்காக மட்டுமே இருக்கும்.
தேவனோடு நெருங்கி வாழ்பவர்கள் கூட சில சந்தர்ப்பங்களில் பாவத்தில் விழுந்துள்ளதற்கு வேதாகமத்தில் பல உதாரணங்கள் உள்ளன.
இதனால் தான் வேதாகமம் நாம் பாவஞ் செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது.
1 யோவான் 1:10
என்று வேதம் தெளிவாக கூறுகிறது.
எனவே நாம் பூரணமானவர்கள் என நினைத்து நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளக் கூடாது.
இரட்சிப்புக்கு வழிநடத்தும் ஒளியிலிருந்து விலகி, தாங்களாகவே தெரிந்து கொண்ட இருளில் வாழ்கின்றனர். இந்த கூட்டத்தினர் ஆவிக்குரிய பாதையிலிருந்து வழி தவறினவர்கள்.
தங்கள் பாவங்களிலிருந்தும், தேவனைப் பற்றிய தவறான எண்ணங்களிலிருந்தும் இவர்கள் மாறாவிட்டால், நித்திய தண்டனைக்கு ஆளாவார்கள்
தேவன் தம்முடைய பிள்ளைகளை ஒவ்வொரு நாளும் பரிசுத்தப்படுத்துகிறார் .மேலும் அவர்களிடத்திலும் பரிசுத்தத்தை எதிர்பார்க்கிறவராகவே இருக்கிறார்.
ஆகவே நாம் ஒவ்வொருவரும் நம் குறைவுகளை உணர்ந்து, அவற்றை விட்டு விட்டு ஆண்டவரின் வழியில் பக்தியுடன் வாழுவோம் . நம் குறைகளையும், நம் பாவங்களையும் மன்னித்து தம் பிள்ளைகளாக ஏற்றுக் கொள்ள ஆவலாயிருக்கிறார்.
இப்படிப்பட்ட பரிசுத்த வாழ்வு வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.
ஆமென்.