Be not quick in your spirit to become angry, for anger lodges in the heart of fools.
உன் மனதில் சீக்கிரமாய்க் கோபங் கொள்ளாதே, மூடரின் நெஞ்சிலே கோபம் குடி கொள்ளும்.
பிரசங்கி 7:9
***********
அன்பானவர்களே,
இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
மனதில் உறுதி வேண்டும், வாக்கினிலே இனிமை வேண்டும் என்பது பாரதியாரின் கவிதை பாணிகளில் ஒன்று.
சினம் முன் வாசல் கதவை தட்டும் போது,
அறிவு பின் வாசல் வழியாக வெளியேறி விடுகிறது என்கிறார் ஒரு அறிஞர்.
சின்ன சின்ன விஷயங்களுக்காக சினம் கொள்கிறவர்கள்
வாழ்க்கையில் பெரிதாக எதையும் சாதிக்க (செய்ய) முடியாதவர்களே.
பாருங்கள், ஒரு மனிதனுக்கு கோபம் மூண்ட உடனே அவன் மகிழ்ச்சி, நிம்மதி எல்லாம் அவனை விட்டு ஓடிப் போய் விடுகிறது.
நீங்கள் 10 நிமிடம் கோபத்தில் இருக்கும் போது 60 வினாடி ஆனந்தத்தை இழந்து விடுகிறீர்கள்.
தீக்குச்சிக்கு தலை தான் இருக்கிறது.மூளை இல்லை.எனவே தான் கொஞ்சம் உரசினாலும் உடனே சீறி பாய்கிறது.
மனிதன் மணம் வீசும் மலர் போலவும், ஒளிவீசும் கதிரவன் போலவும் இருக்க வேண்டும் . இதுவே மனித பிறப்பின் பயன்.
வேதத்தில் பார்ப்போம்,
மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே.
யாக்கோபு 1:20
மூடனுடைய கோபம் சீக்கிரத்தில் வெளிப்படும், இலச்சையை மூடுகிறவனோ விவேகி.
நீதி12:16
கோபம் நிர்மூடனைக் கொல்லும். பொறாமை புத்தியில்லாதவனை அதம் பண்ணும்.
யோபு 5:2.
பிரியமானவர்களே,
கோப குணம் ஆதி முதல் மனிதனை ஆண்டு அடிமைப்படுத்துகிற குணம். தேவன் ஆபேலின் பலியை அங்கிகரித்தவுடன் காயினுக்குக் கோபம் வந்து விட்டது.
தன் சொந்த சகோதரன் என்றும் பாராமல் அவனை கொலை செய்தான். கோபம் மனிதனை மிருகமாக்கி விடுகிறது. கோபம் கண்ணை மறைத்து குருடாக்குகிறது. ஒரு விசுவாசி தொடர்ந்து இந்த பாவத்திற்கு அடிமையாயிருக்க ஒரு போதும் கூடாது.
நாகமான் சுகம் பெறும் படியாக நீண்ட பிரயாணம் செய்து இஸ்ரவேல் தேசத்திற்கு வருகிறான். அவனுக்கு வேண்டியது சுகம். ஆனால் தீர்க்கத்தரிசி அவன் எதிர் பார்த்தவிதமாக வந்து அவனைத் தடவி சொஸ்தமாக்கவில்லை என்று அறிந்தவுடன் கடுங் கோபங் கொண்டான்.
கோபம் ஒரு மனிதனை, தன் சுயக் கட்டுப்பாட்டை இழக்கச் செய்கிறது. தான் பேசுவதில், செய்வதில், கட்டுப்பாட்டை இழந்து விடுகிறான்.
ஒருவேளை நாகமான் அந்த கோபத்தோடே திரும்பிப் போயிருப்பானானால் அவன் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய இழப்பை அடைந்திருப்பான்.
நல்ல வேளை அவனுடைய ஊழியக்காரர் அவனைப் போல் கோபமடையாமல் அமைதலாய் அவனுக்கு எடுத்துரைத்தார்கள். அவன் கோபத்தோடே திரும்பி போயிருந்தால் வாழ்நாள் முழுவதும் குஷ்டரோகியாயிருந்திருப்பான்.
ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள். மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்க மாட்டாதே.
கோபத்தை சரியாக கையாளுங்கள். சாத்தானுக்கு கைப்பிடியைக் கொடுத்து விடாதிருங்கள்.
சில சமயங்களில் உங்களோடு ஒத்துப் போகாதவர்களை அன்புகூர்ந்திட நீங்கள் கஷ்டப்படுகிறீர்களா? ஆனால், இயேசுவோ தன்னைக் காட்டி கொடுக்கப் போகும் யூதாஸை கூட முடிவு பரியந்தமும் அன்பு கூர்ந்தாரே!
பிறரின் கோபத்தை எதிர்க்கும் நீங்கள் உங்களின் கோபத்தைத் தவிருங்கள்.
கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான் நீடிய சாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான்.
தீமைக்குத் தீமையையும், உதாசனத்துக்கு உதாசனத்தையும் சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக் கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்களென்று அறிந்து, ஆசீர்வதியுங்கள்.
ஆம், நாம் ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக் கொள்ளும்படி அழைக்கப்பட்டவர்கள் என்பதை உணர்ந்தவர்களாய் பிறரையும் நேசிப்போம், ஆசீர்வதிப்போம்.
ஆமென்