May we receive the blessings of the Lord Jesus Christ
அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப் பார்த்தார்; இதோ, இதுமுதல் எல்லாச் சந்ததிகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள்.
லூக்கா 1:48.
=======================எனக்கு அன்பானவர்களே,
மனுக்குலத்தை மீட்டெடுக்க மனுவுருவாக வந்த நம் அருமை ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
இங்கிலாந்து தேசத்தில், விக்டோரியா மகாராணியின் ஆட்சிக் காலத்தில், அடுத்து ராஜாவாக முடி சூடப்பட வேண்டிய இளவரசர், ஒரு ஏழைப் பெண்ணை நேசித்தார். அந்த ஏழைப் பெண்ணைத் தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாக உறுதியாக அவர் கூறினார்.
ராஜ குடும்பத்தார், அதை ஏற்றக் கொள்ளவில்லை. ‘ஒரு இளவரசன் ராஜ குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அப்பொழுது தான் ராஜவாக முடிசூட்டப்பட முடியும்.’ என்றார்கள்.
‘ராஜ மேன்மையை
நான் இழந்து போனாலும் பரவாயில்லை. நான் நேசிக்கும் அந்த ஏழைப் பெண்ணைத் தான் திருமணம் செய்வேன்.’ என்று அந்த இளவரசர் உறுதியாக இருந்தார். பலர் வந்து பேசியும், அவர் மனம் மாறவில்லை.
கடைசியில் அந்த இளவரசர், தான் நேசித்த அந்த ஏழைப் பெண்ணுக்காக, தன் ராஜ மேன்மையையே விட்டுக் கொடுத்தார். அந்த ஏழைப் பெண்ணையே மணந்து கொண்டார்.
இப்படித் தான் இயேசு கிறிஸ்துவும், நமக்காக தன் பரலோக மேன்மையை விட்டுக் கொடுத்தார். அந்த ஏழைப் பெண் இளவரசரை மணந்தபடியினால், ராஜ குடும்பத்தைச் சார்ந்த பெண்ணாக உயர்த்தப்பட்டாள்.
இப்படித் தான் இயேசு கிறிஸ்துவின் மூலம், ‘நான் தேவனுடைய பிள்ளை!’ என்கிற உயர்வை நாம் பெற்றுக் கொள்கிறோம். யேவான் 1:12.
நம்மை உயர்த்தத் தான் இயேசு கிறிஸ்து தன்னைத் தாழ்த்தினார். அதை விசுவாசியுங்கள்!
ஜெபியுங்கள். உயர்வைக் காணும் வரை ஜெபியுங்கள். நாம் உயர்த்தப்படுவோம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
வேதத்தில் பார்ப்போம்,
அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள்.
லூக்கா 1:38.
அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப் பார்த்தார்;
இதோ, இதுமுதல் எல்லாச் சந்ததிகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள்.
லூக்கா 1:48
தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.
பிலிப்பியர் 2 :7.
பிரியமானவர்களே,
வானத்தையும் பூமியையும் உண்டாக்கிய தேவன், மனுஷரில் ஒருவரும் காணக் கூடாதவர், நம்மைப்போல ஒரு சாதாரண மனிதனாக இந்த உலகத்தில் வந்த நாள் தான் கிறிஸ்துமஸ்
‘இயேசு கிறிஸ்து தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.
அவர் நினைத்திருந்தால், ஒரு அரச குடும்பத்தில், ஒரு ராஜகுமாரனாக, ஒரு அரண்மனையில் பிறந்திருக்க முடியும்!
ஆனால், அவர் ஒரு ஏழை தச்சனுடைய குடும்பத்தில், ஒரு ஏழ்மைக் கோலத்தில் அவதரித்தார்.
மகிமையின் தேவன், ஒரு சாதாரண மனிதனாக ஏன் இந்த உலகத்தில் அவதரிக்க வேண்டும்?
மனுக் குலத்தின் மீது, அவர் வைத்த அன்பினால், தம் மக்களை பாவத்திலிருந்தும், சாபத்திலிருந்தும் விடுதலையாக்கி அவர்களை ஆசீர்வதிக்கவே, அவர் இந்த உலகத்தில் தாழ்மை கோலமேடுத்து பிறந்தார்.
ஆகவே தான், இந்த இயேசு கிறிஸ்துவின் நிமித்தம், இன்று உலகமே மகிழ்கிறது. எல்லா நாடுகளிலும், எல்லா பாஷைக்காரர்களும் கிறிஸ்து பிறப்பின் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள்.
இயேசு கிறிஸ்து ஒரு குறிப்பிட்ட குடும்பத்திற்கோ, ஒரு கிராமத்திற்கோ, ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கோ, ஒரு குறிப்பிட்ட மொழிக்கோ, ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கோ சொந்தமானவரல்ல! முழு உலகத்திற்கும் அவர் சொந்தமானவர்!
ஆகவே தான் அவர் ”உலக இரட்சகர்!’ 1யோவான் 4:14 என்று, இயேசு கிறிஸ்து அழைக்கப்படுகிறார்.
இதை வாசிக்கிற உங்களுக்கும் இயேசு கிறிஸ்து சொந்த இரட்சகர்தான்! இயேசு கிறிஸ்து உங்களுக்காகப் பிறந்ததினால் உண்டான ஆசீர்வாதங்களை நீங்கள் பெற்றுக் கொள்ளும் போது தான் உண்மையான கிறிஸ்து பிறப்பின் மகிழ்ச்சியை! கொண்டாட முடியும்.
ஆம் இந்த கிறிஸ்துமஸ் காலங்களில் கிறிஸ்துவின் அன்பை அனைவருக்கும் கூறுவோம்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தரும் ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்வோம்.
நாம் கொண்டாடுகிற இந்த பண்டிகை நம் அனைவருக்கும் மகிழ்வாய், சமாதானமாய் அமைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம் யாவருக்கும் உதவி செய்வாராக.
ஆமென்…