Our faith is the victory that overcomes the world
அதற்குக் கர்த்தர்: கடுகு விதையளவு விசுவாசம் உங்களுக்கு உண்டாயிருந்தால், நீங்கள் இந்தக் காட்டத்திமரத்தை நோக்கி: நீ வேரோடே பிடுங்குண்டு கடலிலே நடப்படுவாயாக என்று சொல்ல, அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.
லூக்கா:17:6
+++++++++++++++++++++++++எனக்கு அன்பானவர்களே!
விசுவாசத்தை துவக்குகிறவரும், முடிக்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
கடற்கரை ஓரமாக ஒரு பெரிய மரம் ஒன்று வளர்ந்திருந்தது. அதன் கிளை ஒன்று மிக நீண்டு கடல் நீருக்கு மேலாக நீட்டிக் கொண்டிருந்தது. அதன் உச்சியில் கடற்குருவி ஒன்று கூடு கட்டியது.
அதனுள் நாலைந்து முட்டைகளை இட்டு அடைகாத்து வந்தது. ஆண் குருவியும் பெண் குருவியும் அதே கூட்டில் வசித்தபடி தங்கள் குஞ்சுகள் வெளிவரும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தன.
ஒரு நாள் பெரும் காற்று வீசியது. பெரிய அலைகள் பொங்கி எழுந்தன. கிளையில் இருந்த கூடு நழுவி காற்றின் வேகத்தில் கடலில் விழுந்து மூழ்கியது. குருவிகள் மனம் பதறிக் கதறின. கடல் நீரில் விழுந்து கூடு மூழ்கிய இடத்திற்கு மேலாக கீச், கீச் என்று கத்தியபடியே சுற்றிச் சுற்றி வந்தன.
பெண் குருவி மனம் உடைந்து சொல்லியது. எப்படியாவது முட்டைகளை மீண்டும் நான் காண வேண்டும். இல்லையேல் நான் உயிர் வாழ மாட்டேன் என்றது .ஆண் குருவி சொன்னது. அவசரப்படாதே ஒரு வழி இருக்கிறது.
நமது கூடு கரையின் ஓரமாகத் தான் விழுந்துள்ளது. கூட்டுடன் சேர்ந்து முட்டைகள் விழுந்ததால் நிச்சயம் உடைந்திருக்காது. அதனால் இந்த கடலிலுள்ள தண்ணீரை வற்றவைத்து விட்டால் போதும். முட்டைகளை நாம் மீட்டுவிடலாம் என்று பெண் குருவிக்கு தன்னம்பிக்கை ஊட்டியது .
கடலை எப்படி வற்றவைப்பது?
முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவர இன்னும் பல நாட்கள் ஆகலாம். எனவே நாம் இடைவிடாமல் சில நாட்கள் முயல வேண்டும். நம் வாயில் கொள்ளும் மட்டும் தண்ணீரை எடுத்துக் கொண்டு பறந்து சென்று தொலைவில் கொட்டுவோம்.
மறுபடியும் திரும்பி வந்து மீண்டும் நீரை நிரப்பிக் கொண்டு போய் தொலைவில் உமிழ்வோம். இப்படியே இடைவிடாமல் செய்து கடல் நீரை வேறு இடத்தில் ஊற்றினால் கடல் நீர் மட்டம் குறைந்து தரை தெரியும்.
நமது முட்டைகள் வெளிப்படும்.
இதையடுத்து இரண்டு குருவிகளும் தன்னம்பிக்கையுடன் ஊக்கத்துடன் செயலில் இறங்கின. விர்ரென்று பறந்து போய் தங்களது சிறிய அலகில் இரண்டு விழுங்கு நீரை நிரப்பிக் கொண்டன. பறந்து சென்று தொலைவில் போய் உமிழ்ந்தன. மீண்டும் பறந்து வந்து இரண்டு வாய் தண்ணீரை அள்ளின. கொண்டு போய் தொலைவில் கக்கின.
இப்படியே இரவு, பகல், நாள்முழுவதும் இடைவிடாமல் நடந்து கொண்டிருந்தது, இவற்றின் நீர் அகற்றும் படலம்.
அப்போது அந்தக் கடற்கரை ஓரமாக முனிவர் ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார். மகா சக்திகள் நிறைந்த மகான் அவர். ஆளில்லாத அந்தப் பகுதியில் கீச் கீச் என்ற சப்தம் கேட்கவும் அவர் திரும்பிப் பார்த்தார். இரண்டு குருவிகள் பறந்து போவது கண்டு சிரித்தபடி மேலே நடந்தார்.
மீண்டும் கீச் கீச் என்ற சப்தம். குருவிகள் கடலுக்கு மேல் பறந்தன. எதையோ அள்ளின. மீண்டும் பறந்தன. இப்படி பலமுறை நடைபெறவும், முனிவருக்கு வியப்பு. கடலில் இருக்கும் எதைக் கொத்துகின்றன இவை? அங்கு இரை ஏதும் இல்லையே என்று நினைத்தார் அவர்.
உடனே அந்த மகான் கண்களை மூடினார். உள்ளுக்குள் அமிழ்ந்தார். மறுகணம் அவர் மனதில் எல்லா நிகழ்ச்சிகளும் படம்போல் ஓடின. அவர் மனம் உருகியது. முட்டைகளை இழந்த தாயின் தவிப்பும் கடலையே வற்ற வைத்தாவது முட்டைகளை மீட்க வேண்டும் என்ற அதன் துடிப்பும் அவரது உள்ளத்தை நெகிழச் செய்தன.
உடனே தனது தவ பலத்தை ஒன்று திரட்டிய முனிவர் கையை உயர்த்தினார். மறுகணம் கடல் சில அடிகள் பின் வாங்கியது. அங்கே கூட்டுடன் இருந்த முட்டைகள் தென்பட்டன. குருவிகள் அதைப் பார்த்து குதூகலத்துடன் கீச்சிட்டன. ஆளுக்கொன்றாக முட்டைகளை பற்றிக் கொண்டு போய் வேறிடத்தில் சேர்த்தன.
நான் அப்போதே சொன்னேன் பார்த்தாயா? நமது ஒரு நாள் உழைப்பில் கடல் நீரை குறைத்து முட்டைகளை மீட்டு விட்டோம் பார்த்தாயா? என்றது ஆண் குருவி பெருமிதமாக. முனிவர் சிரித்தபடி தொடர்ந்து நடந்தார்.
இங்கே குருவிகள் முட்டைகளை மீட்டது அவற்றின் உழைப்பாலா? இல்லை. முனிவரின் அருளால் தானே. ஆனால் அந்தக் குருவிகளுக்கு முனிவர் என்ற ஒருவரைப் பற்றியோ தவ வலிமை என்றால் என்ன என்பது பற்றியோ, எதுவுமே தெரியாது.
ஆனால் தன்னம்பிக்கையுடன் கடல் நீரை அள்ளின .
அதே சமயம் குருவிகள் மட்டுமே கடல் நீரை மொண்டு சென்று ஊற்றிக் கொண்டிருக்கா விட்டால் முனிவர் தம் வழியே போயிருப்பார்.
அவரை மனம் நெகிழ வைத்தது எது? அவற்றின் உழைப்பும் விசுவாச முயற்சியும் தான்.
ஆக இங்கே முட்டைகள் மீட்கப்பட்டது, குருவிகளாலும், முனிவராலும் தான். முனிவரின் ஆற்றல் அவற்றுக்குப் பக்க பலமாக வந்து சேர்ந்தது. குருவிகளின் விசுவாசத்துடன் கூடிய உழைப்புத் தான் அதற்கு அடிப்படையாக அமைந்தது.
வேதத்தில் பார்ப்போம்,
இயேசு அவளை நோக்கி: நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா என்றார்.
யோவான் 11:40.
என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
யோவான் 6 :47.
தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.
1 யோவான் 5 :4.
பிரியமானவர்களே,
தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.
இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்? 1 யோவான் – 5:4, 5
மேலும்
மத்தேயு 21: 22 ல் இயேசு கிறிஸ்து கூறுகிறார் “நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள்” என்றார்.
இன்று உங்களின் விசுவாசம் குறைவுபட்டதை போன்ற உணர்வில் இருக்கிறீர்களா? துக்கம் பல காரணங்களினால் உங்கள் வாழ்வின் சந்தோஷத்தை அழித்துப் போட்டு விட்டதா?
வியாதி, கடன் பிரச்சினை, குழந்தை பாக்கியம் இல்லாமை, கணவனால்-
(மனைவியால்) வீட்டிலே நிம்மதி இல்லையா?? பிள்ளைகளின் கெட்ட பழக்க வழக்கங்கள், குடும்பப் பிரிவு, திருமணத்தடை, நம்பினவர்களால் கைவிடப்பட்ட நிலை, தோல்வி, வறுமை தொழில் வியாபாரத்தில் வீழ்ச்சி, வழக்குகள் இதுபோன்ற பல காரணங்கள் உங்கள் சந்தோஷமான வாழ்க்கை உடைந்து போய் உள்ளதா?
இவ்வாறான சூழ்நிலையில் சந்தோஷத்தைத் தேடியும் கிடைக்காத நிலையில் இனி விடுதலை பெற வழி தெரியவில்லையே, எல்லாமே தோல்வி என்று சொல்லி தோல்வியடைந்த சூழ்நிலையில் வாழ்கிறீர்களா?
எனக்கு அன்பானவர்களே, நீங்கள் கலங்கவும் பயப்படவும் வேண்டாம்.
அந்த குருவியைப் போல
நாமும் முயற்சிக்கும் போது அன்பின்ஆண்டவர் நம்முடைய விசுவாசத்தை கண்டு நமக்கு அற்புதங்களை செய்வார்.
நீ தொடங்கு நான் முடிப்பேன் என்ற வார்த்தையின் படி நம்முடைய தொடக்கம் அற்பமாய் இருந்தாலும் முடிவோ சம்பூரணமாயிருக்கும்.
யோவான்- 16:20 ல் நம் அன்பான இயேசு கிறிஸ்து சொல்லுகிறார் “உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்”. இயேசு கிறிஸ்துவினால் மாத்திரமே உங்களுக்கு நிறைவான சந்தோஷத்தையும், சமாதானத்தையும் தரமுடியும்.
எனவே நாம் விசுவாச உறுதியோடு வாழ்ந்து, அவரின் வார்த்தைகளின் மீது பற்று உள்ளவர்களாக இருக்க கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு அருள் புரிவாராக.
ஆமென்.