Patience is the most essential thing for our life of faith

Patience is the most essential thing for our life of faith

கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார்.
சங்கீதம் 40:1.

==========================
எனக்கு அன்பானவர்களே!

இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

கிறிஸ்துவ வாழ்க்கையில் அதி முக்கியமான குணங்களில் ஒன்று பொறுமை. நம்முடைய விசுவாச வாழ்க்கைக்கு மிக மிக அவசிமானதும் பொறுமை தான்.

பெரிய நிறுவனமொன்றில் ஒரு பொறுப்பான வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய குறிப்பிட்ட நாளில் நேர்முகத் தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. குறிப்பிட்ட அந்த நாளில் அநேகர் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் அந்த தேர்வில் கலந்து கொள்ள கடந்து வந்திருந்தனர்.

வந்தவர்கள் அனைவரும் நிறுவனத்தின் வரவேற்பறையில் அமர வைக்கப்பட்டனர். நேரம் கடந்து கொண்டேயிருந்தது. ஆனால் தேர்வு தொடங்குவதற்கான எந்த அறிகுறியும் அங்கு தென்படவில்லை.

நேரம் ஆக ஆக நேர்முகத் தேர்வுக்கு வந்தவர்களில் பலரின் பொறுமையும் குறைந்து கொண்டே சென்றது.மேலும் நிறுவன பணியாளர்கள் தேர்வர்களை கண்டு கொள்ளாமல் தங்கள் அலுவல்களில் மூழ்கியிருந்தது இன்னும் அதிக வேதனையாக காணப்பட்டது.

தேர்வர்களில் பலர் அந்த நிறுவனத்தை இனிய மொழிகளில் அர்ச்சித்து விட்டு கடந்து சென்றனர்.
சிலரோவெனில் சாவகாசமாக வரவேற்பறையில் அமர்ந்து கொண்டு நிறுவனத்தின் செயலைக் குறித்து முறுமுறுப்புடன் விவாதித்துக் கொண்டிருந்தனர்.

சிலர் நிறுவன கேண்டீனில் ஒரு கட்டுகட்டிவிட்டு மதியமும் அவர்களது சேவையை தொடர்ந்தனர். மிகச் சிலர் மட்டும் தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக் கொண்டிருந்தனர். இதையெல்லாம் அந்த நிறுவனத்தின் மனிதவளத் துறையினர் கண்காணிப்பதை அவர்கள் யாரும் அறிந்திருக்கவில்லை

சுமார் 3-மணியளவில் நிறுவன பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரத்தை அறிவிப்பு பலகையில் ஒட்டினர். முறுமுறுப்பாளர்கள் வெட்கம் கலந்த வேதனையுடன் இடத்தை காலி செய்தனர். இந்த சம்பவத்தில் ஆழமான ஆவிக்குரிய உண்மையும் மறைந்திருக்கிறது.

நீண்ட பொறுமையோடு காத்திருந்தவர்கள் மட்டுமே அந்த நிறுவனத்தில் பணிபுரிய தகுதிபெற்றவர்கள் ஆயினர்.

வேதத்தில் பார்ப்போம்,

ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயுமிருக்கக்கடவர்கள்;
யாக்கோபு 1 :19.

உங்கள் பொறுமையினால் உங்கள் ஆத்துமாக்களைக் காத்துக் கொள்ளுங்கள்.
லூக்கா 21 :19.

நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது.
எபிரேயர் 10 :36.

பிரியமானவர்களே,

நம்முடைய அன்பின் ஆண்டவர் நம் அனைவரையும் ஓர் உயர்ந்த நோக்கத்துடன் படைத்துள்ளார். அந்த குறிப்பிட்ட நோக்கத்தை அடைய வேண்டுமானால் நாம் அதற்கு மனதளவில் தகுதியுடையவர்களாகவும் , விசுவாசமுடையவர்களாகவும் பொறுமையுடையவர்களாகவும் காணப்பட வேண்டும்.

நிராகரிப்புகள், சோதனைகள், துன்பங்கள், வேதனைகள் போன்றவை நம்மை மனதளவில் பண்படுத்துவதற்காக கூட நம் வாழ்க்கையில் அனுமதிக்கப்படக்கூடும். அந்த நேரத்திலும் நாம் இறைவன் மீது நம்பிக்கையுடையவர்களாக பொறுமையுடனும், விசுவாசத்துடனும் காணப்பட வேண்டியது அவசியம்.

இதற்கு ஆதாரமாக வேதாகமத்தில் பல பரிசுத்தவான்களின் வாழ்க்கையைக் காணலாம்

யோசேப்புக்கு அநேக நிராகரிப்புகள், அநியாயமான தண்டனைகள், சிறைச்சாலை வாசம் ஆகியவை அவரை புடமிட்டது. அந்த நேரத்திலும் அவர் விசுவாசத்துடனும் பொறுமையுடனும் காணப்பட்டார்.

மோசே- 40 ஆண்டுகால வனாந்திர வாழ்க்கை அவரை பண்படுத்தியது, இதனால் அவர் சாந்த குணமுடையவராக மாறினார். அந்த நேரத்திலும் அவர் விசுவாசத்துடனும் பொறுமையுடனும் காணப்பட்டார்.

தாவீது- சவுலால் துரத்தப்பட்டபோது இஸ்ரவேல் நாடு முழுதும் அவர் கால்படாத இடமில்லை என்னும் அளவுக்கு பிரயாணப்பட்டார். பிற்காலத்தில் வந்த போர்களை சமாளிப்பதற்கான அனுபவ அறிவை பெற்றார்.

அந்த நேரத்திலும் அவர் விசுவாசத்துடனும் பொறுமையுடனும் காணப்பட்டார். தேவனோடு எவ்வளவு நெருக்கமானவராக இருந்தார் என்பதற்கு அவர் இயற்றிய சங்கீதங்களே சான்று.

பொறுமையாய் காத்திருந்தவர்களின் வாழ்க்கை புதிய மறுமலர்ச்சியை பெற்றது.

ஆகவே நாமும் நம்முடைய வாழ்க்கையில் தேவனோடு கூட இருந்து பொறுமையை கடைபிடிக்க கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த ஓய்வு நாளில் நமக்கு அருள் புரிவாராக.
ஆமென்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *