The fear of the LORD prolongs life

The fear of the LORD prolongs life

கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசு நாட்களைப் பெருகப் பண்ணும்.
நீதிமொழி:10:27

************
எனக்கு அன்பானவர்களே!

“நரை வயது மட்டும் நான் உங்களை தாங்குவேன்” என்று வாக்களித்த தேவனாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஏ. மார்க்ஸ் என்பவர் இவ்வாறு கூறுகிறார்,

நான் 20 வயது வரை -என் தேவைக்கேற்ற துணிமணிகள், வயிரார உணவு, எல்லாவற்றுக்கும் மேலாகவே என்னிடம் வசதி இருந்தது.

என் 20 – 50 வயது வரை -நான்
சம்பாதித்து வைத்திருந்ததைப் பார்த்து திருப்தியோடு அமைதியாக ஓய்ந்திருந்தேன்.

50 – 70 வயது வரை – நான் சேமித்ததையும், உடைமைகளையும் மற்றவர்களுக்குக் கொடுத்தால் தான், நான் பராமரிக்கப்படுவேன் என்றாகி விட்டது. எவ்வளவு என் கையிலிருந்து கொடுக்கிறேனோ அந்த அளவு சந்தோஷத்தை எனக்கு தந்தார்கள்.

நான் 70 வயதைக் கடந்த நிலையில் – என்னிடம் மூன்றே மூன்று உடமைகள் மட்டுமே மிச்சப்பட்டு இருக்கின்றன. அவைகள், என் பைபிள், என் மூக்குக் கண்ணாடி, என் பொய்ப் பல்செட்.

பல வியாதிகளோடும், இயலாமையோடும், தள்ளாமையோடும், ஒதுக்கப்பட்டவர்களாய், வெறுக்கப்பட்டவர்களாய், தனித்தும், பயந்தும், ஏக்கங்களோடும், எதிர்பார்ப்புகளோடும், ஏமாற்றங்களோடும் வாழுகிறேன் என்று குறிப்பிடுகிறார்.

இதே நிலையில் வாழும் எண்ணற்ற முதியோர்கள் உண்டு. ஒரு தாய் -தந்தை பத்து குழந்தைகளைக் காப்பாற்றி விடுவார்கள். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தாய் தந்தையைக் காப்பாற்றுவதில்லை!

“மகனே! நீ இருக்க என் கருவறை இருந்தது… ஆனால் நான் இருக்க உன் வீட்டில் ஒரு அறை கூடவா இல்லை?” – என்று முதியோர் இல்லத்தில் தள்ளப்பட்ட தாயிடமிருந்து எழும் இந்த வேதனை நிறைந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது?

நாம் வயதான காலத்தில் நம்மை பாதுகாப்பது நம் “மனைவி, நாம் பழகிய நாய், நாம் சேமித்து வைத்த பணம் ஆகியவைகளே முதுமையில் நமக்கு நம்பிக்கைக்கு உரியவர்கள்” என்று கூறுகின்றார்.

வேதத்தில் பார்ப்போம்,

நிழலைப் போன்ற மாயையான தன் ஜீவகாலத்தைப் போக்கும் மனுஷனுக்கு இந்த ஜீவனில் நன்மை இன்னதென்று அறிந்தவன் யார்?
பிரசங்கி 6 :12.

மாம்சமெல்லாம் புல்லைப் போலவும், மனுஷருடைய மகிமையெல்லாம் புல்லின் பூவைப் போலவுமிருக்கிறது; புல் உலர்ந்தது, அதின் பூவும் உதிர்ந்தது.
1 பேதுரு 1 :24.

என் நாட்கள் சாய்ந்து போகிற நிழலைப் போலிருக்கிறது; புல்லைப் போல் உலர்ந்து போகிறேன்.
சங்கீதம் 102:11

பிரியமானவர்களே,

சாலொமோன் ஞானி கூறுகின்றார்.
வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்……” பிரசங்கி. 11:9 என்று சொன்ன சாலொமோன் ஞானி, “….. இளவயதும் வாலிபமும் மாயையே” என்று குறிப்பிடுகிறார்.

“நீ உன் வாலிபப் பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை…..” பிரசங்கி.12:1) என்றும் சொல்கிறார். ஏனென்றால் இளமைக் காலத்தைத் தொடர்ந்து வரும் முதுமை காலத்து நாட்கள் “எனக்குப் பிரியமானவைகள் அல்ல என்று நீ சொல்லக் கூடிய வருஷங்கள் சேராததற்கு முன்னும்” பிரசங்கி.12:1 என்று ஆரம்பித்து,

முதுமைக் காலத்து நாட்களில், “வீட்டுக் காவலாளிகள் (கைகள்) தள்ளாடிப் போவர்; பெலசாலிகள் (கால்கள்) கூனிப் போவர்; எந்திரம் அறைக்கிறவர்கள் (பற்கள்) குறைவுபட்டுப் போவர்;

பலகணி வழியாய்ப் பார்க்கிறவர்கள் (கண்கள்) இருண்டு போவர்; எந்திர சத்தம் தாழ்ந்து போதலால் தெருவாசல் கதவுகள் (காதுகள்) அடைபட்டுப் போகும்;

குருவியின் சத்தத்துக்கும் (அதிகாலை நேரம்) எழுந்திருக்கும் நிலமை; கீதவாத்தியக் கன்னிகைகள் (குரல்வளை நரம்புகள்) அடங்கிப் போகுதல்; மேட்டுக்காக அச்சமுண்டாகுதல்; ( வழியில் பயங்கள் தோன்றுதல் ) வாதுமைமரம் பூ பூத்தல் (தலைமுடி நரைத்தல்);

வெட்டுக்கிளிகள் பாரமாதல்; ( பசித்தீபனம் அற்றுப் போதல் ) போன்ற ஒரு விருப்பமில்லாத தீங்கு நாட்களோடு கூடிய முதுமைக்கால வாழ்க்கையை ஞானி எளிமையாகவும், யதார்த்தமாகவும், கவித்துவத்தோடும் படம்பிடித்து சித்தரித்து கூறுகின்றார் பிரசங்கி. 12:3-5.

சங்கீதக்காரன், “என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது” சங்.31:15 என்றும், “கர்த்தாவே நான் எவ்வளவாய் நிலையற்றவன் என்று உணரும்படி என் முடிவையும், என் நாட்களின் அளவு இவ்வளவு என்பதையும் எனக்குத் தெரிவியும்” சங்.39:4என்று கூறுவதை பார்க்கிறோம்.

“எங்கள் ஆயுசு நாட்கள் எழுபது வருஷம், பெலத்தின் மிகுதியால் எண்பது வருஷமாயிருந்தாலும், அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே; சங்;.90:10 என்பதாகக் கூறுகிறார்.

இங்கு மனிதனின் நிலையாமைக் குறித்தும், அவன் ஆயுசு நாட்களைப் பற்றியும், அதில் அவனுடைய முதுமைக் காலம் வருத்தமும் சஞ்சலமும் நிறைந்தது என்பது பற்றியும் அவர் தெளிவாய்ச் சொல்லுகிறார்

முதுமையோடு வேதனை நிறைந்த வாழ்க்கையை அநேகர் வாழ்ந்தாலும்,
விசுவாசமுள்ள முதியோரைப் பற்றி சங்கீதக்காரன் இவ்வாறு பாடினார்: “அவர்கள் முதிர் வயதிலும் கனி தந்து, புஷ்டியும் பசுமையுமாயிருப்பார்கள்.”
சங்கீதம் 92:15‌ என்று.

ஆம், ஆபிரகாம், மோசே, நோவா போன்றோர் முதியோர்கள் தான்.நரைத்த தாடியுடன் கையில் தடியை வைத்திருக்கும் மோசேயை கம்பீரமானவராகவும், வலிமை மிக்கவராகவும், நமக்கு முன்பாக வேதாகமம் முன்னிருத்துகிறது. ஏனெனில் அவரை வழிநடத்தியவர் கர்த்தரே.

வேதத்தில் “உங்கள் முதிர்வயது வரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரை வயது மட்டும் நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்து வந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன்.
ஏசாயா 46:4 என்று நம் கர்த்தர் வாக்கு பண்ணியிருக்கிறார்.

நம் கர்த்தரின் பராமரிப்பும், ஆசீர்வாதங்களும் இளமையோடு நின்று விடுவதில்லை. அவருடைய தொடர் பராமரிப்பு கடைசி காலம் வரைத் தொடர்கிறது. அது இப்பூவுலகில் மட்டுமல்ல. மறுமையின் வாழ்விலும் அது தொடர்கிறது.

இப்படிப்பட்ட உறவில் தேவனோடு நம் வாழ்வு தொடர கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.
ஆமென்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *