There is definitely peace and happiness in our lives

There is definitely peace and happiness in our lives

உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர் மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்.
லூக்கா 2:14 .

~~~~~~~
எனக்கு அன்பானவர்களே,

சமாதான கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

கிறிஸ்துமஸ் என்றாலே பரலோகத்தில் ( Heaven) மகிழ்ச்சி. பூலோகத்தில் ( Earth) சமாதானம் என்பதாகும். கிறிஸ்துமஸ் என்பது இயேசு கிறிஸ்துவின் பிறப்பை அனுசரிக்கும் திரு நாளாகும்.

ஆதிச் திருச்சபையினர் கிறிஸ்துவின் பிறப்பை டிசம்பர் 25-ம் தேதி கொண்டாடுவது என்று முடிவெடுத்தனர். இந்நாள் சரித்திரத்தில் புகழ்பெற்ற நாளாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை வைத்து தான் கி.மு. என்றும், கி.பி. என்றும் வரலாற்றின் காலம் கணிக்கப்படுகிறது.

இயேசு கிறிஸ்துவின் பிறப்பை உலகிற்கு முதன்முதல் அறிவித்தவன் கர்த்தருடைய தூதன் என்பதை வேதத்தில் காணலாம்.

” இதோ எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்கு தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்”. லூக் 2 : 10-11என்றான்

இயேசு இவ்வுலகின் ரட்சகர் என்பதை அவர் பிறப்பின் செய்தியிலேயே அறிவிக்கப்பட்டு விட்டது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் எழுத்தாளர்களில் ஒருவரான ஜி.காம்ப்பெல் மார்கன் என்பவர் “அவர் பாவத்தை எதிர்க்கும் இரட்சகர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இரட்சகர் என்பதன் பொருளை அறிந்து கொள்ள மேலும் இரு காரியங்களை நாம் ஆராய்வோம்.
Soter என்ற கிரேக்க சொல்லிலிருந்து Savior – இரட்சகர் அல்லது மீட்பர் என்ற சொல் வந்துள்ளது. அதாவது இச்சொல் ‘பாதுகாவலர்’ என்ற பொருளைக் குறிக்கிறது.

மேலும் விடுதலையாக்கும் வல்லமையான செயலையும் அதன் விளைவையும் இது அறிவிக்கிறது. விடுதலையின் விளைவு யாதெனில் பாதுகாப்பளிப்பதாகும். இங்கு இச்சொல் தேவனை இரட்சகராக விவரிக்கிறது.

ஏசாயா 25 மற்றும் 33ஆம் அதிகாரங்களும் தேவனை இரட்சகராக சித்தரிக்கிறது. லூக்கா 1:47இல் மரியாள் “என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது” என்று கூறுகிறார். இங்கு இரட்சகர் என்ற சொல் தேவனைக் குறிப்பிடுகிறது. லூக்கா 2ம் அதிகாரத்தில் அது இயேசு கிறிஸ்துவைக் குறிப்பிடுகிறது. இயேசு கிறிஸ்து வாழ்ந்த நாட்களில் யூதர்கள் தங்களை விடுதலையாக்கும் ஒரு இரட்சகரை எதிர்பார்த்தனர்‌.

இயேசு இஸ்ரேல் நாட்டிலுள்ள எருசலேம் நகருக்கு 10 கி.மீ. தெற்கே உள்ள பெத்லகேம் என்ற சிற்றூரில் புறநகர் பகுதியில் ஒரு மாட்டுத் தொழுவத்தில் ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன் பிறந்தார் என்பது வரலாறு.

ஆனால் அவர் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கோ, ஒரு சாதியினருக்கோ, இனத்திற்கோ உலகில் உள்ள ஒரு பகுதியினருக்கோ சொந்தமானவர் அல்ல.

இவ்வுலகில் உள்ள அனைவருக்கும் சொந்தமான ரட்சகர் என்பதை அவர் பிறப்பின் நற்செய்தி தெளிவாகக் கூறுவதைக் காணலாம்.

வேதத்தில் பார்ப்போம்,

சமாதானத்தை உங்களுக்கு வைத்துப் போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிற பிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக.
யோவான் 14 :27.

தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.
லூக்கா 2:10

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின் மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
ஏசாயா 9:6

பிரியமானவர்களே,

உலக வரலாற்றில் இப்போது எத்தனையோ தலைவர்களின் பிறந்த நாட்களைக் கொண்டாடுவதைப் பார்க்கிறோம். ஆனால் யாருமே அவர்களை குழந்தையாகப் பாவித்துக் கொண்டு கொண்டாடுவதை நாம் காண்பதில்லை. இயேசு இன்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன் பிறந்தார் என்பதை வரலாற்றின் மூலம் அறிகிறோம்.

இது ஒரு எதிர்பாராத விபத்தல்ல. அவரின் பிறப்பை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதில் ஒன்று இயேசுவை குழந்தையாக கொண்டாடப்படுவதை யாரும் மறுக்க முடியாது. ஏனென்றால் அவர் பிறக்கும்போதே மீட்பராக வெளிப்பட்டார்.

இயேசு என்னும் மன்னர்களின் மன்னன் யாரிடத்தில், எந்த வம்சத்தில் எங்கு பிறக்கப் போகிறார் என்று பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உரைக்கப்பட்டு விட்டதை வேதம் கூறுகிறது.

தேவ தூதர்கள் முதலில் மேய்ப்பர்களிடம் சென்று உங்களுக்காக இரட்சகர் ஒருவர் பிறந்துள்ளார் என்று கூறிய பின்னர் உடனே பரமசேனையின் திரளான தூதர்கள் தோன்றி கூறிய மற்றுமொரு பிறப்பின் செய்தி என்னவென்றால் “உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும் பூமியிலே சமாதானமும் மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக” என்பதாகும்.
லூக் 2 : 14.

இது தேவதூதர்களின் பாடல் என்றும் வேத வல்லுனர்கள் கூறுகின்றனர்.

இச்செய்தியில் பூமிக்கு பொதுவாக குறிப்பிட்டிருப்பது சமாதானமாகும். இச்சமாதானம் இப்பிரபஞ்சத்தின் இயல்பான எதிர்பார்ப்பு என்பதில் ஐயமில்லை. நமக்கு மனதில் சமாதானம் வேண்டும். உடலில் சமாதானம் வேண்டும். குடும்பத்தில் சமாதானம் வேண்டும். அயலகத்தில் சமாதானம் வேண்டும். நம் நாட்டில் மட்டுமல்ல நம் உலகில் சமாதானம் எங்கும் தேவை என்பதை நாம் அறிவோம்.

இயேசுகிறிஸ்து பிறந்த நாட்களில் ரோம அரசனாக இருந்தவர் அகஸ்து ராயன் ( Agustus Ceasa r). அன்று வாழ்ந்த எழுத்தாளர்களில் எபிக்டெடஸ் ( Epictetu s) என்பவர் குறிப்பிடத்தக்கவர்.

இவர் ரோம அரசனைப் பற்றி குறிப்பிடும் போது, அகஸ்துராயனால் தரையிலும் கடலிலும் நடக்கும் யுத்தங்களிலிருந்து மக்களுக்கு சமாதானம் கொடுக்க முடியுமே தவிர, மக்களின் கவலை, உணர்ச்சி,வேதனை நிமித்தம் சமாதானம் கொடுக்க இயலாது என்று அவர் கூறியுள்ளார்.

எனவே இந்த உலகம் தரக்கூடாத சமாதானத்தை கொடுக்கவே இயேசு இவ்வுலகில் வந்தார் என்பதை நாம் யோவான் 14 : 27 நாம் காணலாம்.

மேலும் இயேசு கிறிஸ்து உலகில் பிறக்கப் போகிறார் என்று அவர் பிறப்பதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன் உரைத்த தீர்க்கதரிசியான ஏசாயா இயேசுவை சமாதானப் பிரபு என்று கூறுகிறார்.

இயேசு குழந்தையாக இருக்கும் போது அவரை கைகளில் ஏந்திய சிமியோன் என்ற வயதான தேவபக்தி உள்ளவன், அவரை கைகளில் ஏந்தி “உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்; புறஜாதிகளுக்குப பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும், தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம் பண்ணின உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான்”
(லூக்.2:29-32).

இயேசு பாலகனைக் கையிலே ஏந்தினதே அந்த சிமியோனுக்கு அத்தனை சமாதானம் என்றால், அவரை நமது உள்ளங்களில் ஏந்தினவர்களாக இருக்கும் பொழுது , நமக்கு எத்தனை சமாதானம் !

சமாதானப் பிரபுவாகிய இயேசு கிறிஸ்துவை பற்றிக் கொண்டு, அவரை நம் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டால், நம்முடைய வாழ்க்கையிலே நிச்சயம் சமாதானம் சந்தோஷமும் உண்டு.

நாமும் சிமியோனைப் போல கர்த்தருடைய வார்த்தைக்கு காத்திருப்போம் என்றால் அந்த உன்னதமான சமாதானம் நம்மிலும், நம் குடும்பங்களிலும் நிறைவாய் தங்கி தரித்திருக்கும்.

இப்படிப்பட்ட உன்னதமான ஆசீர்வாதங்களை
நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு நிறைவாக தந்து நம்மை ஆசீர்வதித்து நடத்துவாராக.

ஆமென்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *