There is great peace for those who love your scripture

There is great peace for those who love your scripture

உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை.
சங்கீதம் 119 :165.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
எனக்கு அன்பானவர்களே!

வேதத்தின் வெளிச்சத்தில் நம்மை நடத்துகிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

பாரசீகம் என்று பண்டைக் காலத்தில் அழைக்கப்பட்ட ஈரான் நாட்டில் 19ம் நூற்றாண்டில் பிறந்த மன்சூர்சிங் தனது வாலிப நாட்களில் இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டார்.

தனது விடாமுயற்சியின் மூலமாக பல் மருத்துவராக மாறிய இவர், ஈரான் நாட்டின் பாலைவனங்களிலும், மலைகளிலும் சுற்றித் திரிந்து, ஏழை கிராம மக்களுக்கு இலவசமாய் மருந்துகளை வழங்கி இயேசுவின் அன்பை நற்செய்தியாக அறிவித்து வந்தார்.

இஸ்லாமிய நாட்டில் இயேசுவைப் பற்றிக் கூறியமைக்காக பலமுறை சவுக்கால் அடிபட்டு, சிறைக்குக் சென்றார்.
இவ்வாறு ஒருமுறை பிடிக்கப்பட்டு ஷிராஸ் (Shiraz) நகர சிறையில் இருந்த பொழுது, தைரியமாக இயேசுவின் அன்பை அநேகருக்கு அறிவித்து வந்தார்.

இதை அறிந்த பாஹாய் (Bahá’í) மதத்தை சேர்ந்த காவல் அதிகாரி மன்சூரை தன்னிடம் அழைத்தார். மன்சூரிடம் புதிய ஏற்பாட்டு புத்தகத்தைக் காண்பித்து, “இதன் விலை என்ன?” என்று கேட்டார். மன்சூர் பதிலாக, “இந்த புத்தகத்தை இலவசமாக பிறருக்கு வழங்கின்றோம்” என்றார்.

சிறைச்சாலை அதிகாரி ஏளனமாக சிரித்துக் கொண்டே, “அதுவே அதற்கேற்ற சரியான விலை. தகுதியற்ற இந்த புத்தகத்திற்கு நிர்ணயத்த விலை சரியானதே” என்று கூறி தன்னிடம் இருந்த பாஹாய் மதநூலைக் காண்பித்து, இதை வாங்க பெருந்தொகை கொடுக்க வேண்டுமென்று கூறினார்.

மன்சூர் அவ்வதிகாரியின் அறையில் இருந்த மின்சார விளக்கைக் காண்பித்து, “இது என்ன விலை?” என்று கேட்டார். அது அதிக வெளிச்சத்தைக் கொடுக்கும் படியாக அதிக பணம் கொடுத்து வாங்கியதாக கூறினார்

பின்னர் மன்சூர், ஜன்னல் வழியாக வெளியே சூரியனை சுட்டிக்காட்டி,
“அதோ அந்த சூரியன் உமக்கு தேவையான ஒளியை பகல் முழுவதும் கொடுக்கின்றது. அதற்கு எவ்வளவு விலை கொடுத்தீர்” என்று கேட்டார்.

பதில் கூறமுடியாமல் திகைத்த காவல் அதிகாரிடம் மன்சூர், “ஐயா, மனிதர்களால் படைக்கப்பட்ட மின்சார விளக்கையும், உமது மதநூல்களையும் வாங்க அதிக பணம் தேவை தான்.

சூரியன், சந்திரன், காற்று, நீர் போன்றவை விலைமதிக்க முடியாததாக இருந்தாலும் அவற்றை தேவன் மனிதனுக்கு இலவசமாக வழங்குகின்றார்.

அதேப் போலத் தான் இந்த புதிய ஏற்பாடு புத்தகமும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் இரத்தம் சிந்தி, நமக்கு பாவ மன்னிப்பையும், மீட்பையும் இலவசமாக தந்துள்ளார்.

புதிய ஏற்பாடு புத்தகத்தை வாசிப்பதின் மூலம் நீங்களும் இயேசுவைப் பற்றி அறிந்து கொள்ள முடியும்” என்று கூறினார்.

தமது தவறை உணர்ந்த காவல் அதிகாரி, மன்சூர்சிங்கிடம் மன்னிப்பு கேட்டு அனுப்பி வைத்தார்.

வேதத்தில் பார்ப்போம்,

நீதியை அறிந்தவர்களே, என் வேதத்தை இருதயத்தில் பதித்திருக்கிற ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள்;
ஏசாயா 51 :7.

என் உபத்திரவத்தைப் பார்த்து, என்னை விடுவியும், உமது வேதத்தை மறவேன்.
சங்கீதம் 119 :153.

சிட்சித்து, உம்முடைய வேதத்தைக் கொண்டு போதிக்கிற மனுஷன் பாக்கியவான்.
சங்கீதம் 94 :13.

பிரியமானவர்களே,

ஒவ்வொரு நாளும் தேவன் நமக்கு இலவசமாக கொடுக்கின்ற காற்றை சுவாசிகின்றோம். சூரிய ஒளியை அனுபவிகின்றோம். தண்ணீரைக் குடிக்கின்றோம். அதைப் போல தேவன் நமக்கு ஈவாக அருளிய வேத வசனத்தை அனுதினமும் தியானிக்க வேண்டும்.

“உம்முடைய வசனத்தை நான் காத்து நடக்கும் படிக்கு, சகல பொல்லாத வழிகளுக்கும் என் கால்களை விலக்குகிறேன்.

உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை”
-(சங் 119: 101,165).

நீங்கள் அனுதினமும் வேதத்தை தியானித்தால் நிச்சயமாக பாக்கியவான்களாக இருப்பீர்கள்.

தினமும் வேதத்தை வாசித்து தியானியுங்கள்..
நீங்கள் நடக்க வேண்டிய வழியை உங்களுக்குக் காட்டும். நல்ல வழியில் உங்களை நடத்தும். இருளுள்ள ஸ்தலத்தில் ஒளியாய் பிரகாசிக்கும்.

தினமும் வேதம் வாசித்து தியானிப்பதால்
அறிவும், புத்தியும், ஞானமும், வெளிச்சமும், விவேகமும் ஆகிய அனைத்தும் உங்களுக்குள் வரும்.

அப்படி வரும் போது நீங்கள் திறமை உள்ளவர்களாகவும், உங்களை மீறின சக்தியுள்ளவர்கள் உங்களை விட யாருமே இருக்க முடியாது என்று சொல்லுமளவுக்கு கர்த்தர் உங்களை உயர்த்தி விடுவார்..

உதாரணம்:
யோசேப்பு, மோசே, யோசுவா, நெகேமியா, எஸ்றா, தானியேல், சாத்ராக், மேஷாக், ஆபேத்நெகோ,
பேதுரு, யோவான், பவுல் ஆகிய இவர்களின் வாழ்க்கை சரித்திரத்தை வாசித்து பாருங்கள்.

இவர்கள் மிகவும் சாதாரணமான மனிதர்கள் தான். ஆனால் இவர்கள் திறமையும், அறிவாற்றலும், ஞானமும் உள்ளவர்களாய் தங்கள் வாழ்க்கையில் சாதித்தார்கள்.
இவர்கள் பின்னணியில் இருந்து சாதிக்க வைத்தது விலைமதிப்பற்ற வேத புத்தகத்தை தவிர வேறும் ஒன்றுமில்லை.

“உங்களையும் விலைமதிப்பற்ற வேதம் விலையேறப்பட்டவர்களாய் மாற்றும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

நாமும் நம் வாழ்வில் உயர வேதத்தை தினமும் வாசிக்க வேண்டும்.அதை தியானிக்க வேண்டும். வேதத்தின் மூலமாக கர்த்தர் நமக்கு உணர்த்துபவற்றை உணர்ந்து வேதத்தின் வழியில் நடக்க வேண்டும்.

“இவைகளால் ஞானத்தையும் போதகத்தையும் அறிந்து, புத்திமதிகளை உணர்ந்து,
விவேகம், நீதி, நியாயம், நிதானம் என்பவைகளைப் பற்றிய உபதேசத்தை அடையலாம்.

இவைகள் பேதைகளுக்கு வினாவையும், வாலிபருக்கு அறிவையும் விவேகத்தையும் கொடுக்கும்.
நீதிமொழிகள் 1:2,3,4
என்ற வசனங்கள் வேத வசனங்களை வாசிப்பதாலும், கடைபிடிப்பதாலும் கர்த்தர் நமக்கு தரும் ஆசீர்வாதங்களில் ஒரு சிலவற்றை கூறியுள்ளது.

இம்மையில் மட்டுமல்ல மறுமையின் வாழ்விலும் நம்மை ஆயத்தப்படுத்தி நம்மை பக்குவப்படுத்துவதும் கர்த்தரின் வேதமே.

ஆகவே நாம் கர்த்தர் தந்த வேத வசனங்களை கைக்கொள்ளுவோம். ஆசீர்வாதமுள்ள வாழ்வை சுதந்தரிக்க கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.
ஆமென்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *