We will look to the Lord Jesus Christ in our tribulations
நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக் கொள்ளுகிறேன்.
சங்கீதம் 119:71.
~~~~~~~
எனக்கு அன்பானவர்களே!
வெற்றியுள்ள வாழ்வை அருள் செய்கிற இறைமகனாம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒரு மனிதன் தன் குருவிடம் குருவே, என் வாழ்க்கை மிகவும் சிரமமாயிருக்கிறது. கவலைளும், கஷ்டங்களும், பாடுகளும், வேதனைகளும் வருத்தமும் நிறைந்திருக்கிறது.
உடனே குரு அப்படியா?’’‘‘என்றார்.
ஆமாம் குருவே. வாழ்க்கை இன்பமாகவே இருக்க ஏதாவது வழியிருக்கிறதா சொல்லுங்கள், குருவே என்றான்.
குரு காபி சாப்பிடுகிறாயா?’’ என்று கேட்டார்.
தலையசைத்தான். குரு,
உள்ளேயிருந்து ஒரு கிண்ணத்தில் காபித்தூள் கொண்டு வந்தார்.
“இந்தா, சாப்பிடு…’’
வந்தவனுக்கு ஒன்றும் புரியவில்லை. ‘‘சாப்பிடு, பாலைக் கொண்டு வருகிறேன்’’ என்று இன்னொரு கிண்ணத்தில் பாலைக் கொண்டு வந்தார்.
பிறகு இன்னொரு கிண்ணத்தில் தண்ணீர், சர்க்கரை எல்லாம் வந்தார். ‘‘குருவே, இவற்றை எப்படி தனித்தனியாக சாப்பிட முடியும்?
’’‘காபியையே உன்னால் தனித்தனியாகச் சாப்பிட முடியவில்லை. வாழ்க்கையும் அப்படித்தான். பிரித்துச் சாப்பிட இயலாதது’’ என்றார் குரு.
நம் அன்பான இயேசு கிறிஸ்து இவ்வாறு கூறுகிறார். யோவான் 16:33-ல் உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன் கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார். உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் வேதனையும் சோதனையும் கடந்துத் தான் மன அமைதியை பெற முடியும்.
வேதத்தில் பார்ப்போம்,
நான் மிகவும் உபத்திரவப்படுகிறேன்; கர்த்தாவே, உம்முடைய வசனத்தின்படியே என்னை உயிர்ப்பியும்.
சங்கீதம் 119 :107.
நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்.
ரோமர் 12 :12.
என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.
யோவான் 16 :33.
பிரியமானவர்களே,
“உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு. ஆனாலும் திடன் கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்” யோவான் 16:33 என்று இயேசு கூறினார். அதாவது
நம்
இயேசு கிறிஸ்து ஜெயித்தது போலவே நம்மாலும் ஜெயிக்க இயலும் என்று சொன்னார். நம்மை அவர் உபத்திரவத்திலிருந்து கண்டிப்பாக இரட்சிப்பார்.எனினும் அதை விட அந்த உபத்திரவத்தை நாம் ஜெயிக்க வேண்டும் என்பதில் தான் அதிக அக்கறையுடன் இருக்கிறார்.
ஏனெனில் நாம் சுகமாய் வாழ வேண்டும் என்பதைக் காட்டிலும் நம்முடைய சுபாவம் மாற வேண்டும் என்பதில் தான் அவருக்கு அதிக ஆர்வம் உள்ளது.
உண்மையாய் இருப்பதற்குப் பலனாக நாம் வரப்போகும் உபத்திரவத்திலிருந்து தப்பிக் கொள்வோம் என்று சிலர் சொல்லுவதை போல இயேசு ஒருபோதும் ஆமோதிக்கவில்லை.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அடிச்சுவடுகள் கூட, பாடுகளாலும், அவமானங்களாலும், காயங்களாலும் நிறைந்ததே! ஆனால், முடிவு மகிமை!
நமக்கு திருஷ்டாந்தங்களாக எழுதப்பட்டிருக்கும் இஸ்ரவேலரின் வனாந்திரப் பயணம் தான் நம் வாழ்க்கையும்! அந்த இஸ்ரவேலரின் பயணம் நம் கிறிஸ்தவ வாழ்வுக்கான முன்னோட்டம் தான்! முடிவு கானான்!
வேதத்தை சுமந்து கொண்டு நமது இஷ்டப்படி ஓடுவது அல்ல.. வேதத்தின்படி, தேவசித்தம் செய்வதே சரியான வழி!
நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக் கொள்ளும்படி நான் வேண்டிக் கொள்ளாமல், நீர் அவர்களைத் தீமையினின்று காக்கும்படி வேண்டிக் கொள்ளுகிறேன்” என்று சொல்லி இயேசு தன் சீஷர்களுக்காக ஜெபித்தார்
யோவான் 17:15.
ஆம், அவர் நம்மை தீமையிலிருந்து பாதுகாக்க நமக்காக வேண்டுதல் செய்பவர். அது மாத்திரமல்ல 1கொரிந்:10:14-ல் சோதனையிலிருந்து தப்பிக் கொள்ளும் வழியையும் நமக்கு காண்பிப்பார் என்றே வேதம் விளக்குகிறது.
ஆகவே நாம் நம்முடைய உபத்திரவங்களில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பார்ப்போம்.
பாடுகள் நீங்கி பரமனோடு வாழ்ந்து வெற்றியை சுதந்தரிக்க கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.
ஆமென்