A faithful man will abound with blessings
பரிசுத்தமானதை விழுங்குகிறதும், பொருத்தனை செய்தபின்பு யோசிக்கிறதும், மனுஷனுக்குக் கண்ணியாயிருக்கும்.
நீதி 20 :25.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^எனக்கு அன்பானவர்களே,
நம் பொருத்தனைகளை ஏற்றுக் கொள்ளும் தேவனாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஹென்றி பி. கிரோவெல் (Henry P. Crowell ) என்பவர், ஒரு பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர் என்றாலும், அவரது சிறு வயதில் காசநோயினால் பாதிக்கப்பட்டார்.
அதினால் அவர் பள்ளப் படிப்பை விட வேண்டி இருந்தது. அவர் ஒரு நாள், டி.எல் மூடி பிரசங்கியாரின் செய்தியை கேட்க நேர்ந்தது. அப்போது அவர் தீர்மானித்தார்,
‘என்னால் பிரசங்கிக்க முடியாது. ஆனால் சிறந்த தொழிலதிபராக முடியும், ஆண்டவரே, உமக்கு சித்தமாயிருந்தால், நான் ஆரம்பிக்கும் தொழிலில் நல்ல லாபம் அடைய உதவி செய்யும், நான் அதிலிருந்து உமக்கு உண்மையாக உம்முடைய ஊழியத்தை தாங்குவேன்’ என்று பொருத்தனை செய்தார்.
வைத்தியர்களின் ஆலோசனைப்படி, அவர் இருந்த இடத்தை விட்டு வெளியே ஏழு வருடங்கள் இருந்த பின்பு முற்றிலும் சுகமானார்.
பின் ஓஹியோ (Ohio) என்னுமிடத்தில் Quaker Mills என்னும் சிறிய ஓட்ஸ் தயாரிக்கும் ஆலையை ஆரம்பித்தார்.
பத்து வருடங்களுக்குள் அமெரிக்காவின் ஒவ்வொரு வீட்டிலும் ஓட்ஸ் (Oats) காலை உணவாக மாறியது.
அவரும் தன் தசமபாகத்தை பத்தில் ஒரு பங்காக ஆரம்பித்து,
படிப்படியாக உயர்ந்து 70 சதவீதம் தேவனுடைய ஊழியத்திற்கு கொடுக்க ஆரம்பித்தார்.
இன்றும் Quaker Oats உலகமெங்கும் பரவி, அநேகர் பயன்படுத்துகிறார்கள்.
உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்;
நீதி 28:20 என்ற வார்த்தையின் படி
ஒரு மனிதனின் உண்மையினால், அவனுடைய செய்கைகளையும் தொழிலையும் கர்த்தர் ஆசீர்வதித்தார்.
வேதத்தில் பார்ப்போம்:
நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பொருத்தனை பண்ணியிருந்தால், அதைச் செலுத்தத் தாமதஞ்செய்யாதே, உன் தேவனாகிய கர்த்தர் அதை நிச்சயமாய் உன் கையில் கேட்பார், அது உனக்குப் பாவமாகும்.
உபாகமம் 23:21.
என் இக்கட்டில் நான் என் உதடுகளைத் திறந்து, என் வாயினால் சொல்லிய என் பொருத்தனைகளை உமக்குச் செலுத்துவேன்.
சங்கீதம் 66:14
பரிசுத்தமானதை விழுங்குகிறதும், பொருத்தனை செய்தபின்பு யோசிக்கிறதும், மனுஷனுக்குக் கண்ணியாயிருக்கும்.
நீதி20:25.
பிரியமானவர்களே,
வேதத்தில் அநேகர் பொருத்தனை செய்தனர். யாக்கோபு, அன்னாள், தாவீது, யெப்தா,எல்கானா என்று பலர் பொருத்தனைகளை செய்தனர். எண்ணாகமம்: 30-ம் அதிகாரத்தில் 2-14 வசனங்கள் முழுவதும் பொருத்தனைகளை பற்றி நமக்கு கூறுகிறது.
இங்கே அன்னாளுடைய ஜெபத்தைப் பார்ப்போம். அவள் ஆண்டவரே எனக்கு நீர் ஒரு ஆண் பிள்ளையைத் தருவீரானால் அவனை நான் உமக்கே கொடுத்து விடுகிறேன் என்று பொருத்தனை செய்கிறாள்
நீர் எனக்கு இதை செய்தால் உமக்கு நான் இதை செய்கிறேன் என்று பேசுவது போலவும் உள்ளது அல்லவா?
ஆனால் அன்னாளின் ஜெபத்தைப் பற்றி ஆழமாக படிக்கும் போது அன்னாள் ஒருபோதும் தேவனாகிய கர்த்தரிடம் பேரம் பேசவில்லை தன் இதய வியாகுலத்தால்
என் நிந்தையை நீக்கியருளும் கெஞ்சுகிறாள்.
என்பதை உணர முடியும்.
பொருத்தனை என்ற வார்த்தையின் முழு அர்த்தம் என்னவென்றால் ‘வார்த்தையினால் கனம் பண்ணுவது’என்பது ஆகும்.
நாம் தேவனுக்குக் கொடுத்த வார்த்தையை கனம் பண்ணுதல் என்பது நமக்கு வாக்குக் கொடுத்தவரை கனம் பண்ணுதலாகும். இதைத் தான் அன்னாள் செய்தாள் என்று பார்க்கிறோம்.
தன்னுடைய வாழ்வின் இருண்ட சூழ்நிலையில், கர்த்தர் அவளுடைய ஜெபத்துக்கு பதிலளியாமல் அமைதியாக இருந்த போதும், கர்த்தரே அவளுடைய வாழ்வின் மையமாக இருந்தார்.
அவருடைய வாக்கை அவள் விசுவாசித்தாள்! அவர் தன்னுடைய மலட்டுத் தன்மையை மாற்ற வல்லவர் என்று அவர் மேல் விசுவாசம் வைத்தாள்.
அன்று அன்னாள்செய்த ஜெபம் பேரம் பேசுவதாக அல்ல, ஒரு மகள் தன் தகப்பனிடம் , அப்பா என் இருண்ட வாழ்க்கையில் மட்டும் உம்மைத் தேடுகிறேன் என்று எண்ண வேண்டாம், என் வாழ்க்கை ஒளிமயமாகும் வேளையிலும் உம்மையே நான் கனம் பண்ணுவேன் என்பது போல அன்னாளின் பொருத்தனை இருக்கிறது.
என்ன அருமையான வாழ்க்கை அனுபவம் ! நாம் நம் வாழ்வில் எப்பொழுதும் கனம் பண்ண விரும்புகிற ஒருவருக்கு, நாம் அதிகமாக நேசிக்கும் ஒருவருக்கு வாக்குக் கொடுப்போமானால் அதிலிருந்து ஒருபோதும் தவற விரும்ப மாட்டோம் அல்லவா?
ஆம்! பொருத்தனை என்பதும் நாம் அதிகமாக நேசிக்கும் நம்முடைய தேவனை, நமக்கு வாக்குத்தங்களை கொடுத்தவரை நம்முடைய வார்த்தையால் கனம் பண்ணுவதுதான்!
ஒருவன் கர்த்தருக்கு யாதொரு பொருத்தனை பண்ணினாலும், அல்லது யாதொரு காரியத்தைச் செய்யும்படி ஆணையிட்டுத் தன் ஆத்துமாவை நிபந்தனைக் குட்படுத்திக் கொண்டாலும், அவன் சொல் தவறாமல் தன் வாயிலிருந்து புறப்பட்ட வாக்கின்படியெல்லாம் செய்யக்கடவன் என்று
எண்ணாகமம்: 30:2 -ல் பார்க்கிறோம்.
நீங்கள் தேவனைத் தொழுது கொள்ளப் போகும் போது மிகவும் கவனமாக இருங்கள். தேவனுக்குப் பலிகளைக் கொடுப்பதைவிட அவர் கூறுவதைக் கவனிப்பது நல்லது .
தேவனிடம் பொருத்தனை செய்யும்போது கவனமாக இருங்கள்.
யெப்தாவை போலல்ல.
அன்னாளைப் போல விசுவாச உறுதியுள்ள பொருத்தனைகளை கர்த்தரிடம் கூறுவோம்.
கர்த்தர் நம்மை ஆசீர்வதித்து வழிநடத்துவாராக.
ஆமென்