A man's folly brings his way to ruin
இவர்கள் ஒருநாள் வாழ்வை இன்பமென்றெண்ணி, கறைகளும் இலச்சைகளுமாயிருந்து; தங்கள் வஞ்சனைகளில் உல்லாசமாய் வாழ்கிறவர்கள்;
2 பேதுரு 2 13.
***********எனக்கு அன்பானவர்களே!
பரலோக வாழ்வுக்கென்று நம்மை தகுதிப்படுத்துகிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
மனிதனுடைய நிலைமையை விளக்க ஒரு வேடிக்கையான சம்பவம் ஒன்றை சொல்லுவார்கள். ஒரு மனிதனை சிங்கம் ஒன்று துரத்தி வர, அவன் அதற்கு தப்பும்படி பாழும் கிணற்றுக்குள் குதித்தான்.
நல்ல வேளை அந்த கிணற்றில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு ஆலமர விழுதை அவன் இறுகப் பற்றிப் பிடித்ததினால் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தான்.
மேலே சிங்கம் உறுமிக் கொண்டிருந்தது. கீழே பாழும் கிணற்றின் ஆழத்தில் இரண்டு பயங்கரமான கருநாக பாம்புகள் இவன் எப்பொழுது கீழே விழுவான் கொத்த வேண்டுமென்று படமெடுத்து ஆடிக் கொண்டிருந்தன.
இவன் தொங்கிக் கொண்டிருந்த விழுதையோ மேலே ஒரு எலி கொஞ்சம் கொஞ்சமாக கடித்து, அறுந்து போகும் நிலைமைக்கு கொண்டு வந்து விட்டது.
ஆனால் அவனோ அருகிலிருந்த தேன் கூட்டிலிருந்து சொட்டிக் கொண்டிருந்த தேனை தன் திறந்த வாயினால் சுவைத்துக் கொண்டிருந்தான்.
தேனின் ருசி அவனுடைய கண்களை மயக்கியிருந்தது. தான் எப்பேர்ப்பட்ட ஆபத்தில் இருக்கிறோம் என்பதை மறந்து தேனின் மேலேயே நாட்டம் கொண்டிருந்தான்.
இன்றைய மனிதனின் மன நிலையையும் இதுதான். தன்னை சுற்றிலும் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் தன்னிலை மறந்து உலக இன்பத்தில் திளைத்து இருப்பவர்கள் அநேகம் பேர்.
வேதத்தில் பார்ப்போம்,
மனுஷனுடைய மதியீனம் அவன் வழியைத் தாறுமாறாக்கும்;
நீதி 19 :3.
அவன் சாம்பலை மேய்கிறான்; வஞ்சிக்கப்பட்ட மனம் அவனை மோசப்படுத்தினது; அவன் தன் ஆத்துமாவைத் தப்புவிக்காமலும்; என் வலதுகையிலே அபத்தம் அல்லவோ இருக்கிறதென்று சொல்லாமலும் இருக்கிறான்.
ஏசாயா 44 :20.
நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.
ரோமர் 12 :2.
பிரியமானவர்களே,
சில மனிதர்கள் தங்கள் மதியீனத்தால் தங்களை படைத்த தேவனின் வழிகளை அற்பமாய் எண்ணி, தங்கள் சொந்த ஆசைகளையும், இச்சைகளையும் அடைவதற்காக, இந்த உலகத்தின் வழிமுறைகளை பின்பற்றிச் செல்கின்றார்கள்.
எனவே தான் ஜனங்கள் அதிகமாக பாவத்திற்குள்ளும், உலக உல்லாசங்களையும் ஆவலாய் தேடி தேடி பரிதபிக்கப்படத்தக்க விதமாய் விழுந்து, அமிழ்ந்து, அழிந்து கொண்டிருக்கிறார்கள்.
சிற்றின்பத்தின் மோகத்தில் தான் மனிதன் நாட்டம் கொண்டிருக்கிறான். நித்தியத்தைக் குறித்தோ, பாதாளம் வாயை “ஆ” என்று திறந்திருக்கிறதைக் குறித்தோ, நரக கடலைக் குறித்தோ மனிதர்களுக்கு சிறிதும் அக்கறையில்லை. கர்த்தருடைய வருகை சமீபமாகிவிட்டது என்கிற உணர்வுமில்லை.
இயேசு சொன்னார்: “நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்.
எப்படியெனில், ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள் வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண் கொண்டும் பெண்கொடுத்தும், ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டு போகுமட்டும் உணராதிருந்தார்கள்;
கர்த்தரைவிட்டு விலகி, தங்கள் வழிகளில் இடறும்போது, இவர்கள் உணர்வடைந்து மனந்திரும்பும்படி, தங்கள் மதியீனமே தங்கள் வழிகளை தாறுமாறாக்கினது என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்கள் அன்றாட, அசுத்த வாழ்விலேயே மூழ்கிப் போயிருந்தார்கள்… “சாப்பிடுவதில், குடிப்பதில், பெண் கொடுப்பதில், பெண் எடுப்பதில்” மூழ்கிப் போயிருந்தார்கள். இன்றைய உலகமும் இப்படிப்பட்ட உலக இன்பங்களில் மூழ்கி கிடக்கிறது என்றால் அது மிகையாகாது.
ஆனால் நோவாவும், அவர் குடும்பத்தார் யாவரும் பேழைக்குள் சென்று பிழைத்துக் கொண்டனர் என்பதை நாம் வேதத்தில் பார்க்கிறோம்.
நாமும் கிறிஸ்து என்னும் பேழைக்குள் கட்டப்படும் போது நம்மை எந்த உலக காரியங்களும் அணுக முடியாது. நாம் கிறிஸ்துவுக்குள் வெற்றி சிறந்தவர்களாக, அவரின் வருகைக்கு ஆயத்தமுள்ளவர்களாக வாழ நம்மை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அழைக்கிறார்.
அவரின் வருகைக்கு நாமும் ஆயத்தமாவோம்.
பிறரையும் ஆயத்தப்படுத்துவோம்.
ஆமென்