கர்த்தரைத் தேடுகிறவர்களோ சகலத்தையும் அறிவார்கள். நீதிமொழிகள்:28:5.
கர்த்தரைத் தேடுகிறவர்களோ சகலத்தையும் அறிவார்கள்.
நீதிமொழிகள்:28:5.
எனக்கு அன்பானவர்களே!
ஞானக் கன்மலையாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஓர் ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவருக்குத் தன் நாட்டு மக்களில் எத்தனை பேரில் அறிவாளிகளாக இருக்கிறார்கள் என அறிவும் ஆவல் ஏற்பட்டது. உடனே ஒரு போட்டி நடத்தி தேர்ந்தெடுக்கலாம் என முடிவு செய்தார்.
போட்டியில் மூன்று கேள்விகள் கேட்கப்படும். மூன்று கேள்விகளும் ஒரே பொருளைத் தான் குறிக்கும். அதைக் கொண்டு வருபவர்களுக்கு ஒரு பெரிய பரிசு தரப் போவதாக மன்னர் அறிவித்தார்.
போட்டியின் கேள்விகள் இது தான்.
1) உலகத்தில் உள்ளதை முதலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
2) ஆப்பத்தில் இரண்டாவதை எடுத்துக் கொள்ள வேண்டும்.
3) கம்புவில் மூன்றாவதை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு எடுத்துக் கொண்டு பின்பு அதைச் சேர்த்து ஒரே பொருளாக்கி அதைக் கொண்டு வர வேண்டும் என்பதே போட்டி.
இதைக் கேட்ட மக்களில் சிலர் உலகத்திலுள்ள முதலில் தோன்றியது எது என்ற படி சிந்தித்துப் பார்த்தனர். இப்படி ஒவ்வொரு கேள்விக்கும் விடை தேடினர். யாருக்கும் எதுவும் புலப்படவில்லை. சரி எதையாவது கொண்டு போனால், ஒரு வேளை அது சரியாக இருந்தால் நமக்குப் புத்திசாலி என்ற பட்டமும், பரிசும் கிடைக்கும் என நினைத்தனர்.
அடுத்த நாள் அரண்மனை வாசலில் நீண்ட வரிசை…
வரிசையில் நின்ற ஒவ்வொருவரும் தங்களின் பொருளைப் பிறர் பார்த்து விடாதவாறு மூடி மறைத்தபடி நின்றிருந்தனர். முதலில் ஒருவன் அனுப்பப்பட்டான்.
அவன் கொண்டு சென்ற பொருள் மண். பின்னர் அவனிடம் விளக்கம் கேட்டார். அவனோ பேந்த பேந்த முழித்தான். அவனுக்கு ஒரு கசையடி கொடுத்து மன்னர் அனுப்பி வைக்கச் சொன்னார். கேள்விகளைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல், அதற்கு முயற்சி கூடச் செய்யாமல் எதையோ கொண்டு வந்ததற்காகவும், மன்னனின் நேரத்தை வீணாக்கியதற்காகவும் கசையடி கொடுக்கப்பட்டதாக மன்னர் கூறினார்.
அடி வாங்கியவன் எதுவும் சொல்லாமல் நடந்ததை மற்றவர்களிடம் தெரிவிக்காமல் வீடு போய்ச் சேர்ந்தான்.
இப்படி ஒவ்வொருவருக்கும் கசையடி கொடுக்கப்பட்டது. ஒவ்வொருவரும் தங்களுக்குக் கிடைத்த பொருட்களையெல்லாம் கொண்டு சென்றனர்.
ஒருவன் ‘தங்கம்’ ஒருவன் ‘தண்ணீர்’
ஒருவன் ‘அரிசி’ ஒருவன் ‘வைரம்’ கொண்டு போனான். ஏனெனில் மன்னர் உயர்ந்த பொருளைத் தான் குறிப்பிட்டிருப்பார் என அனைவரும் நினைத்தனர். சிறிது நாட்கள் இப்படியே நடந்தது.
நாட்கள் செல்லச் செல்ல மன்னருக்கே சலிப்பு ஏற்பட்டு விட்டது. யாருக்கும் சரியான விளக்கம் சொல்லவும் தெரியவில்லை. சரியான பொருளைக் கொண்டு வரவும் தெரியவில்லை. போட்டியை நிறுத்தி விடலாம் என ஆலோசனை செய்தார்.
அப்போது தான் மக்கள், யாருக்கும் கடைசி வரை பரிசு கொடுக்கப்படவேயில்லை என்பதையும் யாரும் சரியான பதிலைச் சொல்லவுமில்லை எனவும் அறிந்தனர். தங்களைப் புத்திசாலிகளாக நினைத்தவர்கள் இந்த நிகழ்ச்சியால் உண்மை உணர்ந்தனர்.
அப்போது அரண்மணைக்கு ஒரு ஏழை மனிதன் வந்தான்.
அவன் பார்ப்பதற்குக் பரட்டைத் தலையும், அரைகுறை ஆடையும் அணிந்தவனாக இருந்ததால் வீரர்கள் அவனை உள்ளே அனுமதிக்கவில்லை. அவனோ மன்னன் குறிப்பிட்ட பொருளைக் கொண்டு வந்திருப்பதாகத் தெரிவித்தான்.
வீரர்கள் வேறுவழியின்றி அரசனிடம் அழைத்துச் சென்றனர். அரசன் முன் அவன் தன் பையிலிருந்து ‘உப்பை’ எடுத்தான். ‘இது தான் தாங்கள் குறிப்பிட்ட பொருள்’ என்றான். சரி. அதற்குரிய விளக்கத்தைக் கூறினால் தான் பரிசு கிடைக்கும் என்றார்.
அவன் கேள்விகளைச் சொல்லி விளக்கமும் சொல்ல ஆரம்பித்தான்.
உலகத்திலுள்ளதை முதலில் எடுத்து என்றால் ‘உலகம்’ என்ற சொல்லிலுள்ள ‘உ’ வை எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆப்பத்தில் உள்ள இரண்டாவது என்றால் ‘ப்’ என்ற எழுத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.
‘கம்பு’வில் மூன்றாவது என்றால் ‘பு’ மூன்றையும் சேர்த்தால் ‘உப்பு’ என வருகிறது. எனவே, அரசர் குறிப்பிட்ட பொருள் ‘உப்பு’ என விளக்கம் தந்தான்.
மன்னருக்கு மிகுந்த மகிழ்ச்சி. தன் நாட்டில் சிந்திக்கத் தெரிந்த ஒருவனாவது இருக்கிறானே என மகிழ்ந்தார்.
உடனே அவனிடம் முதலிலேயே ஏன் நீ இங்கு வரவில்லை எனக் கேட்டார்.
அவனோ தயங்கியபடி ‘நிறைய மனிதர்கள் என் தோற்றத்தைப் பார்த்து என்னை அலட்சியமாகப் பார்ப்பார்கள். அவர்கள் மிடுக்கான தோற்றமும், வசதியும் உடையவர்கள். படித்தவர்கள்.
எனவே, அவர்கள் என்னை அலட்சியமாகவும் கேவலமாகவும் பார்த்ததால், எனக்குள் நான் ஒரு முட்டாள் என்ற எண்ணம் ஏற்பட்டிருந்தது.
எனவே, எனக்கு விடை தெரிந்திருந்தாலும், இந்த எளிய பதிலை எல்லோரும் கூறி பரிசு பெற்று விடுவார்கள் என நினைத்து நான் ஒதுங்கியிருந்தேன். யாரும் விடை சொல்லவில்லை எனத் தெரிந்த பின்னரே நான் சொல்வதற்கு வந்தேன்.
தாங்கள் வைத்த போட்டி என்னை எனக்கு அடையாளம் காட்ட உதவியது. அதற்கு மிக்க நன்றி அரசே!’ என்று கண்ணீர் மல்க தெரிவித்தான்.
அரசன் அவனைப் பாராட்டி, அவனுக்கு அறிவித்த பரிசைக் கொடுத்ததோடு, தன் அரண்மனையிலேயே அவனுக்கு ஒரு வேலையும் கொடுத்து மகிழ்ந்தார். அவனையும் மகிழ்வித்தார்.
வேதத்தில் பார்ப்போம்,
அறிவாளி தன் வார்த்தைகளை அடக்குகிறான்; விவேகி குளிர்ந்த மனமுள்ளவன்.
நீதிமொழிகள்:17:27.
அவர் காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவர்; ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர்; ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர்.
தானியேல்: 2:21.
அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது” கொலோசேயர்: 2:3
பிரியமானவர்களே,
அறிவு என்பது படிப்பில் மட்டுமே இல்லை. நாம் எந்த கோலத்தில் இருந்தாலும், பரவாயில்லை. ஆண்டவருக்கு பயப்படும் பயம் மட்டும் நமக்கு இருக்குமானால் ,
அறிவு தானாய் வரும்.
நமது இயேசு கிறிஸ்துவுக்குள்ளிருக்கும் ஞானம், அறிவு என்கிற சகல விலையேறப் பெற்ற பொக்கிஷங்களையும் அவர் தமக்குச் சித்தமானவனுக்குக் கொடுக்கிறார்.
கர்த்தர் ஒருவரே மனுஷருடைய எண்ணங்கள், தோற்றங்கள், நினைவுகள், செயல்கள் என எல்லாவற்றையும் அறிந்தவர். அவருக்கு மறைவானது ஒன்றுமில்லை.
அப்.பவுல், கர்த்தரின் ஞானம், அறிவு, என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது என்று சொல்லி மிகவும் ஆச்சரியப்பட்டார் ரோமர் :11:33. நீங்கள் தாகத்தோடிருந்தால், கர்த்தர் உங்களுக்குத் தேவைப்படும் அறிவை நிச்சயமாய் தந்தருள்வார்.
இன்றைக்கு மனிதனுடைய அறிவு மிகவும் பெருகிவிட்டது தானியேல்.12:4. விமானங்களும், ராக்கெட்டுகளும், விண்வெளிப் பயணங்களும், கணினி குறித்த அறிவுகளும், உலகத்தைப் பிரமிக்கச் செய்கின்றன.
அதே நேரம், சில தீய அறிவுகள் மனிதனை ஆபத்தான, அழிவின் பாதையிலே கொண்டு போய் நிறுத்தியிருக்கின்றன.
ஆனால் கர்த்தரோ, தம்முடைய பிள்ளைகளுக்கு ஆவிக்குரிய அறிவைத் தந்தருளுகிறார். நித்தியத்திற்குரிய, பரலோக அறிவைத் தந்தருளுகிறார். இந்த அறிவை உலக ஞானி ஒருவனும் அறியமாட்டான்.
கர்த்தர் தருகிற இந்த அறிவாகிய பொக்கிஷம் ஆறு விதங்களிலே உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்.
முதலாவது, கர்த்தரைப் பற்றிய அறிவு. இரண்டாவது, வேதத்தின் ஆழங்களையும், இரகசியங்களையும் அறியும் அறிவு. மூன்றாவது, உங்களை நீங்களே அறிகிற அறிவு. நான்காவது, ஆவிக்குரிய நிலவரங்களைப் பற்றிய அறிவு. ஐந்தாவது, ஒரு மனிதனைப் பற்றிய, ஒரு இடத்தைப் பற்றிய, ஒரு சூழ்நிலையைப் பற்றிய அறிவு.
ஆறாவது, பரலோகத்தை பற்றியும், பாதாளத்தைப் பற்றியும், ஆவிகளின் உலகத்தைப் பற்றியும் அறிகிற அறிவு. இந்த அறிவுகளெல்லாம் மகா விலையேறப் பெற்றப் பொக்கிஷங்களல்லவா?
பெரிய நற்செய்திப் பெரு விழாக்களில், பிரச்சனையுள்ளவர்களையும், வியாதியுள்ளவர்களையும் பெயர் சொல்லி அழைப்பதும், அவர்களுக்கு இருக்கிற பிரச்சனைகள், வியாதிகள் பற்றி தீர்க்கதரிசனமாகச் சொல்லி ஜெபிப்பதும் இந்த பரலோக அறிவினால் தான்.
இந்த மேலான ஞானத்தை நாமும் பெற்று வளமாய் வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.
ஆமென்