மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்து கொண்டாள் என்றார். லூக்கா :10:42.
எனக்கு அன்பானவர்களே,
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒருமுறை வில்லியம் பிரன்ஹாம் என்பவரின் வாழ்க்கை சரிதையைப் படித்தேன்.
அதில், தேவன் அவரை இரட்சித்து, தம்முடைய ஊழியத்தில் இணைத்த பொழுது,முழு நேரமும் போதனையும், பிரசங்கமுமாகவே இருந்ததால், தேவனின் பாதத்தில் அமர்ந்திருக்க நேரமில்லாமல், காலப்போக்கில் ஆவிக்குரிய வல்லமையை அவர் இழந்து போனார் என்று எழுதியிருந்தார்.
இந்த தோல்விகளினால் அவர் முக்கியமான பாடத்தைக் கற்றுக் கொண்டார். அதாவது, எவ்வளவுக்கு அதிகமாக அவர் தந்த வேதத்தை வாசித்து, ஆண்டவருடைய பாதத்தில் காத்திருந்தாரோ, அவ்வளவுக்கு அதிகமாய் ஆண்டவருடைய வல்லமையைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை அறிந்தார்.
பிரியமானவர்களே,
இன்றைக்கு ஊழியங்களில் தங்கள் சுயசித்தம் செய்கிறவர்களே அதிகம்.
தேவனுடைய பாதத்தில் காத்திருத்து தேவ சித்தத்தை அறிந்து கொள்ளாமல் தங்கள் மாம்சமும் மனதும் விரும்பினவைகளை ஊழியத்தில் செயல்படுத்தி, தங்களை உயர்த்திக் கொள்கிறார்கள்.
ஊழியம் என்று சொல்லி தங்கள் சொந்த வாழ்வை கெடுத்துக் கொள்ளுகிற ஊழியர்கள் அநேகம்.ஊழியத்தில் பிறருக்காக ஜெபித்து, தனக்காகவும், தன் குடும்பத்துக்காகவும் ஜெபிக்க நேரமில்லாமல் ஊழியத்தை வேலையாய் பார்க்கிறவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள்.
தேவ பாதத்தில் காத்திருந்து தேவ பெலனை பெற்று கொள்ளாதவர்களின் ஊழியத்திலும், குடும்பத்திலும் போராட்டங்கள் நிச்சயம் வரும். அப்போது, மார்த்தாளைப் போல சோர்ந்து போய் முறுமுறுக்க ஆரம்பித்து விடுகின்றனர்.
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நம்முடைய நல்ல பங்காக தெரிந்துக் கொண்டு அவர் பாதத்தில் நாம் தரித்திருப்பதே, என்றைக்கும் அழியாத நித்திய பங்கு.
வேதத்தில் பார்ப்போம்,
கர்த்தர் என் சுதந்தரமும் என் பாத்திரத்தின் பங்குமானவர்; என் சுதந்தரத்தை தேவரீர் காப்பாற்றுகிறீர்.
சங்கீதம் :16 :5.
நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக் கொண்டிருப்போமாகில், கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம்.
எபிரேயர் :3 :14.
கர்த்தர் என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கை கொண்டிருப்பேன்.
புலம்பல் :3 :24.
பிரியமானவர்களே,
இந்த உலகத்தில் நாம் வாழும் நாட்களில் நாம் நமக்கென தெரிந்து கொள்ள வேண்டிய பங்கு பல இருந்தாலும், நம்மை விட்டு என்றுமே எடுபட்டு போகாத நல்ல பங்கு ஒன்று இருக்கிறது.
அதையே மரியாள் பெற்றுக் கொண்டாள். தன்னை விட்டெடுபடாத நல்ல பங்காகிய இயேசுவை தெரிந்து கொண்டாள்.
இந்த பூமியில் ஆசைப்படுகிற அனைத்து காரியங்களையும் நாம் அனுபவித்தாலும் இது நம் ஆயுள் வரை மட்டுமே, நம் மரணத்திற்குப் பின் இவை ஒன்றும் நம்முடன் வருவதில்லை.
உலகப் பிரகாரமாக யோசித்த மார்த்தாளுக்கு அந்த பங்கு கிடைக்கவில்லை.
‘இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக் குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.
தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்து கொண்டாள் என்றார்’
ஆம், கர்த்தருடைய பாதத்தில் அமர்ந்து அவரின் சத்தத்தை கேட்பதே நம்மை விட்டு எடுபடாத நல்ல பங்காகும்.
மரியாள் அதையே தெரிந்து கொண்டாள்.
நாமும் கூட அநேக முறை நம்முடைய வேலைகளில் மிகவும் பிஸியாக இருந்து, கர்த்தருடைய பாதத்தில் அமர்ந்து அவர் சொல்வதை கேட்க தவறி விடுகிறோம்.
காலையில் எழுவதில் இருந்து, இரவு படுக்கும் வரை நான் ரொம்ப பிஸி என்று சொல்லி, கர்த்தருடைய பாதத்தில் அமர்ந்து அவர் சொல்வதை கேட்க மறந்து விடுகிறோம் அல்லது அவ்வளவு பிஸியாகி விடுகிறோம்.
இந்த நாட்களில் யாரையும் கேளுங்கள்,நான் ரொம்ப பிஸி என்று தான் சொல்வார்கள். அப்படி பிஸியாக இருப்பவர்கள் எப்படி கர்த்தரின் பாதத்தில் அமைதியாக அமர முடியும்?
நாம் ஆண்டவருடைய பாதத்தில் அமராமல், தொடர்ந்து நம் வேலைகளை செய்வதில் மிகவும் பிஸியாக இருப்போமானால், என்ன நடக்கும்? பிரச்சனைகளும், போராட்டங்களும் எழும்ப ஆரம்பிக்கும், சாத்தான் நம்மேல் வெற்றி கொள்ள ஆரம்பிப்பான்.
‘மரியாள் தன் சகோதரன் லாசரு மரித்த போது, இயேசு இருந்த இடத்தில் மரியாள் வந்து, அவரைக் கண்டவுடனே, அவர் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரிக்க மாட்டான் என்றாள்’
(யோவான் 11:32) இந்த இடத்திலும் மரியாள் கர்த்தரின் பாதத்தில் விழுகிறதை காண்கிறோம்.
உலகப் பிரகாரமான எல்லா தேடல்களையும் விட, மரியாள் இயேசுவின் பாதத்தின் அமர்ந்து அவர் வார்த்தையை கேட்க ஆவலாயிருந்து
தன்னை விட்டு என்றுமே எடுபடாத நல்ல பங்காகிய இயேசு கிறிஸ்துவை தெரிந்துக் கொண்டாள்.
இன்று நம்முடைய எல்லா பிரச்சினைகளுக்கும், துன்பத்திற்கும், கவலைகளுக்கும் தீர்வு ஆண்டவராகிய இயேசு மாத்திரமே .நாம் அவரை முழுமனதுடன் தேடும் பொழுது, நம்முடைய எல்லா பிரச்சினைகளுக்கும் முடிவு கிடைக்கிறது.
கர்த்தரின் பாதத்தை பற்றிக் கொண்டவர்களுக்கு மற்றவை எதுவும் பெரியதாக தெரியாது. அவர் பாதமே தஞ்சம் என்று வந்தவர்களுக்கு அவர் கிருபை அளிக்கிறார். அவர் பாதத்தை பற்றிக் கொண்டவர்கள் வெட்கப்பட்டு போவதில்லை.
நாமும் நம்மை விட்டு எடுபடாத நல்ல பங்கை இந்த ஓய்வு நாளில் பெற்று கர்த்தருடைய ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்வோம்.
ஆமென்