Daily Manna 221

நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். மத்தேயு: 7 :1.

எனக்கு அன்பானவர்களே!

கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

ஒரு அடர்ந்த காட்டுப் பகுதியில் ஆழ்ந்த தவத்தில் இருந்தார் ஒரு மகரிஷி. அவர் தவத்தின் போதே கண் திறக்காமல், தினமும் ஒரு முறை கையை நீட்டுவார். கையில் யாராவது எதையாவது வைத்தால், அது என்ன ஏதென்று பார்க்காமல் அப்படியே விழுங்கி விடுவார்.

முனிவர் கையை நீட்டும் நேரம் பார்த்து, பக்தர்கள் நறுக்கிய கனிகள், அப்பம் முதலியவற்றை வைப்பார்கள். இதனால் தங்களுக்கு புண்ணியம் சேரும் என்று அவர்கள் கருதினர்.
ஒரு நாள் அந்த நாட்டின் அரசன் வேட்டைக்கு வந்தான்.

அன்று பக்தர்கள் யாரும் முனிவரிடம் வரவில்லை. அந்நேரம் பார்த்து, மகரிஷி கையை நீட்டினார். மன்னன் மகரிஷியைப் பரிகாசம் செய்யும் நோக்கத்தில், தான் வந்த குதிரை போட்ட சாணத்தில் சிறிது எடுத்து மகரிஷியின் கையில் விளையாட்டாக வைத்தான்.

மகரிஷியும் அதை வாயில் போட்டு விட்டார். மன்னன் கலகலவென சிரித்தபடியே அங்கிருந்து போய் விட்டான்.
மறுநாள் மன்னனின் நலம் விரும்பியாக உள்ள வேறு ஒரு முனிவர் அரசவைக்கு வந்தார். முக்காலமும் உணர்ந்த அவர், ‘மன்னா! நேற்று நீ காட்டில் தவமிருக்கும் மகரிஷிக்கு, குதிரைச்சாணம் கொடுத்தாய் அல்லவா?.

அது நரகத்தில் மலை போல் வளர்ந்து கொண்டிருக்கிறது. நீ நரகம் வந்ததும், அதை உண்ண வைப்பார்கள். அதற்கு தயாராக இரு!’ என்று கூறி விட்டு போய் விட்டார். மன்னன் நடுங்கி விட்டான். தான் விளையாட்டாக செய்த தவறை எண்ணி மனம் வருந்தினான்.

தான தர்மங்கள் செய்து, தன் பாவங்களைக் குறைக்க முடிவெடுத்தான். அரண்மனை நந்தவனத்தில் ஒரு குடில் அமைத்து அங்கேயே தங்கினான். அரண்மனை ஆடம்பர சுகத்தை மறந்தான். தன் நாட்டிலுள்ள அனைவருக்கும் பல உதவிகளை செய்து வந்தான்.

குறிப்பாக இளம்பெண்களை வரவழைத்து, அவர்களது திருமணத்துக்கு தேவையான நகை, பணம் கொடுத்து, பாவம் செய்வதின் கெடுதல் பற்றி எடுத்துக் கூறி அனுப்பி வைத்தான். இது நாள்தோறும் நடைபெறும் ஒரு நிகழ்வாக மாறிவிட்டது.

அரசனின் இந்த தினசரி வழக்கத்தை, அந்த நாட்டில் சிலர் வேறு மாதிரியாக கதை கட்டி விட்டனர். ‘மன்னன், இளம்பெண்களை தவறான நோக்கில் குடிலுக்கு வரச் சொல்கிறான். தவறுக்கு கூலியாக நகை, பணம் தருகிறான்’ என்று திரித்துக் கூறினர். இப்படியாக பல விமர்சனங்கள் வந்தவண்ணமிருந்தன.

ஒரு நாள் கற்புக்கரசியான பெண் ஒருத்தி, பார்வையற்ற தன் கணவருடன், அரசனின் குடில் முன்பாக நின்று யாசகம் கேட்டாள். அந்த கணவன், ‘நீ யார் வீட்டு முன்பு இப்போது நிற்கிறாய்?’ எனக் கேட்டான்.
‘அரசன் அமைத்திருக்கும் குடில் முன்பு’ என்று பதிலளித்தாள்.

அதற்கு அவளது கணவன், ‘ஓ! தானம் கொடுப்பதாகச் சொல்லிக் கொண்டு, பெண்களின் கற்பைச் சூறையாடுகிறானே, அவன் வீட்டு முன்பா?’ என்றான். அந்தப் பெண் பதறிப் போய் உடனடியாக அவனது வாயைப் பொத்தினாள்.

பின் மெதுவாக தன் கணவனிடம் கூறத் தொடங்கினாள். ‘சுவாமி! என் கற்பின் சக்தியால், நான் முக்காலத்தையும் உணர்ந்து சொல்வேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த மன்னன், ஒரு மகரிஷிக்கு குதிரைச் சாணத்தை கொடுத்தான். அது நரகத்தில் மலையளவாக குவிந்து, இவன் உண்பதற்காக தயாரானது.

அவ்விஷயம் மன்னனுக்குத் தெரிய வரவே, அந்த பாவ மலையை கரைக்கும் பொருட்டு, கன்னியருக்கு தான தர்மம் செய்து நற்போதனைகளைச் செய்து வருகிறான்.
ஆனால் சிலர் மன்னனைப் பற்றி தவறாகப் பேசி, அவனுக்காக குவிக்கப்பட்டிருந்த சாண மலையில், ஒவ்வொரு கவளமாக ஒவ்வொருவரும் பங்கிட்டுக் கொண்டனர்.

கடைசி கவளம் மட்டும் பாக்கியிருந்தது. தற்போது மன்னனைப் பற்றி தவறாகப் பேசியதன் காரணமாக, அந்த கடைசி கவளத்தை தாங்கள் எடுத்துக் கொண்டீர்கள்.
என்று கூறினாள்.
அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனான் அவளது கணவன்.

இவ்வுலகில் அநேகர் இப்படித் தான் தனக்கு மிஞ்சின கருமங்களில் தலையிட்டு மற்றவர்கள் செய்த பாவங்களில் தாமே சென்று பங்கடைகிறார்கள்.

வேதத்தில் பார்ப்போம்,

ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்;
மத்தேயு: 7:2.

முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்டியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்.
எபேசியர் :2 :3.

மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்; அப்பொழுது நீங்களும் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதிருப்பீர்கள்;
லூக்கா :6 :37.

பிரியமானவர்களே,

நம்மிடம் ஏற்படும் தீய குணங்களில் முக்கியமான ஒன்று பிறர் குறைகளை அலசி ஆராய்வதாகும்.
எல்லா மனிதர்களும் ஏதோ ஒரு வகையில் குறைகளுடனே நடமாடுகிறார்கள்.

நூறு வீதம் சரியான மனிதராக ஒருவரை இவ்வுலகில் காண்பது மிகவும் அபூர்வம்.
எம்மிடையே பல குறைகளை வைத்துக் கொண்டே பிறரைப் பற்றி விமர்சிப்பது எவ்வகையில் முறையாகும்?

அப்படியென்றால், நாம் பிறரது குறைகளை கண்ட இடத்திலும், நின்ற இடத்திலும் பேசிக் கொண்டிருப்பது தவறான விசயமாகும்.

தவறு செய்தவர்கள் திருந்த எடுக்கும் முயற்சியை விமர்சிக்கக் கூடாது. அவர்களை தவறாக விமர்சித்தால், அவர் செய்த பாவங்களைப் நாமும் பங்கு போட்டுக் கொள்ளும் நிலைமைக்கு ஆளாக வேண்டி வரும்.

உண்மை என்னவென்று அறிந்து கொள்ளாமல், காலத்துக்கும் வம்பு பேசிக்கொண்டு மற்றவர்களின் பாவத்தை சிலர் பங்கிட்டுக் கொள்கிறார்கள். அந்த தவறை செய்ய நாம் ஒரு போதும் இடம் கொடுக்க கூடாது.

நாம் செய்த பாவத்தை சுமக்கவே, இந்தப் வாழ்வு போதுமா என்பது தெரியாத நிலையில், தேவையில்லாமல் புறம்பேசி அடுத்தவரின் பாவத்தையும் சேர்த்து சுமக்க வேண்டுமா என்ன?

ஆகவே நாம் மற்றவர்களைக் குறித்து தீர்ப்பிடாதபடி, புறம் பேசாதபடி நம் நாவை காத்துக் கொள்ள வேண்டும். அப்போது நமது வாழ்வு ஆசீர்வாதமானதாக மாறும்.

கர்த்தர் தாமே இத்தகைய பரிசுத்த வாழ்வு வாழ நம் யாவருக்கும் அருள் புரிவாராக.
ஆமென்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *