கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான். சங்:128:1-4
அன்பானவர்களே!
ஆலயங்களிலே திருமண ஆராதனையின் போது 128ஆவது சங்கீதங்களை வாசிக்கும் ஒரு பழக்கம் இருக்கிறது. அதை நாமும் கேட்டிருப்போம். 128ஆவது சங்கீதத்திலே அருமையான அநேக சத்தியங்கள் உள்ளன. இந்த சங்கீதத்திலே குடும்பத்தைக் குறித்ததான தேவ திட்டத்தைப் பார்க்கிறோம்.
உங்களுடைய குடும்ப வாழ்வு ஆசீர்வதிக்கப்பட்டதாய் இருக்க வேண்டும் என்பதே தேவனுடைய திட்டமாயிருக்கிறது.
இதை வாசித்துக் கொண்டிருக்கும் கணவன்-மனைவி அல்லது புதியதாக திருமணமானவர்களே! இதோ, உங்களுக்கு கர்த்தருடைய வார்த்தை என்னவெனில், “உங்களுடைய திருமண வாழ்வு, குடும்ப வாழ்வு ஆசீர்வதிக்கப்பட்டதாய் இருக்க வேண்டும் என்று கர்த்தர் திட்டமிட்டிருக்கிறார். இதுவே அவருடைய சித்தம்!அவருடைய சித்தத்தின்படி, திட்டத்தின்படி நம்முடைய குடும்ப வாழ்வு நடக்கவில்லையானால் யாருக்குப் பொறுப்பு?
திருவாளர் மாணிக்கம் கடைக்குப் போய் ஒரு நல்ல டேப்ரிக்கார்டர் வாங்கினார்.
சில வாரங்கள் சென்ற பின்பு அது நின்றுபோய்விட்டது, வேலை செய்யவில்லை. என்ன ஆனது என்று அவருக்குத் தெரியவில்லை.
உடனே அதை எடுத்துக்கொண்டு கடைக்குச் சென்று, கடைக்காரரிடம் “என்னய்யா, இந்த மாதிரி ஒரு டேப்ரிக்கார்டரை எனக்கு கொடுத்துட்டீங்க.
இது வேலை செய்யவில்லையே. நான் வாங்கி சில வாரங்களே தான் ஆகிறது” என்று கேட்டார்.
அப்பொழுது கடைக்காரர் கேட்டார் “அய்யா திரு.மாணிக்கம், அந்த டேப்ரிக்கார்டரோடு கூட ஒரு கையேடு புத்தகம் ஒன்று கொடுத்தேன். அது இருக்கிறதா? அதை படித்துப் பார்த்தீர்களா?” என்றார். அதற்கு மாணிக்கம் “புத்தகமா, டேப்ரிக்கார்டரைத்தான் நான் வாங்கிட்டுப் போனேன்
புத்தகம் ஒன்றும் இல்லையே” என்று கூறினார். கடைக்காரர் “அய்யா, நீங்கள் அந்த கையேடு புத்தகத்தை போய்த் தேடிப் பாருங்கள்.
இந்த டேப்ரிக்கார்டரை செய்தவர் இதை எப்படி இயக்குவது? இது எப்படி இயங்குகிறது? என்றெல்லாம் அந்த புத்தகத்திலே சொல்லியிருக்கிறார்.
எனவே அந்த கையேடு புத்தகம் மிகவும் முக்கியம்” என்று சொல்லி மாணிக்கத்தை அனுப்பிவிட்டார்.
அதுபோலவே குடும்ப வாழ்வை சரியாய் நடத்த மிக மிக முக்கியமான ஒன்று பரிசுத்த வேதாகமமே.
வேதத்தில் பார்ப்போம்,
கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்.
சங்கீதம்: 128:1
கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு: அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும்.
நீதி: 14:26
கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவனுக்கேதுவானது, அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்: தீமை அவனை அணுகாது.
நீதி:19:23
பிரியமானவர்களே,
திருமண வாழ்வு என்பது ஆண்டவர் கொடுத்த ஈவு. ஆதியாகமம் 2ஆவது அதிகாரத்திலே பார்க்கிறோமே, ஏவாளை ஆதாம் உருவாக்கினாரா? அல்லது தனக்கு திருமணம் வேண்டுமென்று சொல்லி ஆதாம் ஏதாவது முயற்சி செய்தாரா?
இல்லை.
அவன் தனிமையாயிருப்பது நல்லதல்ல என்று கடவுளே பார்த்து அவனுக்கு ஒரு நல்ல வாழ்க்கைத் துணையை உருவாக்கி, கொண்டு வந்து அவனுக்கு முன்பாக நிறுத்தினார்.
அப்படியென்றால் திருமணத்தை உருவாக்கியது யார்? *கர்த்தர்* . அதை உருவாக்கினவர் அந்த திருமணம் எப்படி இயங்குவது, என்று இந்த சத்திய வேதத்திலே எழுதி வைத்திருக்கிறார்.
அதைப் பார்த்து அதன்படி நடந்தால்தான், திருமண வாழ்வு மகிழ்ச்சியும் ஆசீர்வாதமும் உள்ளதாய் இருக்கும்.
இந்த செய்தியின் ஆரம்பத்தில் கூறியதுபோல் “உங்கள் திருமண வாழ்வு ஆசீர்வாதமாக இருக்க வேண்டுமென்று கர்த்தர் விரும்புகிறார்”. ஆனால், அது நம்மால் நடக்கக்கூடிய ஒரு காரியம் அல்ல. அவர் சொன்ன படி, அவர் வார்த்தையிலே கூறியிருக்கிற காரியங்களையெல்லாம் நாம் செய்து அதின்படி நடந்தால், உங்கள் திருமண வாழ்வு ஆசீர்வாதமுள்ளதாக இருக்கும்.
இதுவே கர்த்தருடைய திட்டம்! அந்தத் திட்டத்திற்கென்று அவர் ஒரு ஒழுங்கு வைத்திருக்கிறார். அதை இந்தச் சங்கீதத்திலே நாம் பார்க்கிறோம்.
கர்த்தர் தந்த வாழ்க்கை துணையோடு இணைந்து, அவர் வேதத்தின் வார்த்தைகளை கைக்கொண்டு வாழ்ந்தாலே நமது வாழ்வில் மகிழ்ச்சியும்,
சந்தோஷமும் கிட்டும் என்பதில் ஐயமில்லை.
இப்படிப்பட்ட பக்தியுள்ள வாழ்க்கை வாழ்ந்து பாக்கியமாய் முடித்து, நித்திய ராஜ்ஜியத்தின் பிள்ளைகளாய் வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து துணை புரிவாராக.
ஆமென்.