Daily Manna 47

நமக்குச் சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். ஏசாயா 53:5

எனக்கு அன்பானவர்களே!

நம்மை மீட்டெடுத்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

ஆசியா கண்டத்தின் தென்மேற்கு பகுதியில் ஒரு நாடு இருந்தது. அந்த நாட்டில் எல்லாக் குற்றங்களுக்கும் பெரும்பாலும் மரணம் மட்டுமே தண்டனையாக வழங்கப்பட்டது. மன்னிப்பு என்பதும், கருணை என்பதும் அங்கே சிறிதளவும் இல்லை.

ஊர் மத்தியில் உள்ள ஒரு பொதுவான இடத்தில் குற்றவாளிகளைத் தூக்கில் இடுவதும், பல மணி நேரம் அந்தப் பிணத்தை அங்கேயே தொங்க விடுவதும் அங்கே சர்வ சாதாரணம்.

ஒரு பலகையில் அந்த நபர் செய்த குற்றத்தையும் பெரிதாக எழுதித் தூக்கு மரத்துக்கு அடியில் வைப்பார்கள்.

அந்த ஊரில் ஒரு இளைஞன் இருந்தான். அவனுக்குக் குடும்பத்தில் நிறைய பண நெருக்கடிகள் இருந்தன. ஒவ்வொரு நாளும் கடன் நெருக்கடிகள் சமாளிக்க முடியாமல் பெருகின. மிகவும் வேதனைப்பட்டான்.

அவன் வேலை செய்யும் இடத்துக்கு அருகில் ஒரு நகைக் கடை இருந்தது. மதிய வேளையில் எல்லாரும் சாப்பிடச் செல்லும் போதும் கடை திறந்தே இருக்கும். ஒரு சின்ன பையன் மட்டும் காவலாக உட்கார்ந்திருப்பான். அந்த நாட்டின் சட்டதிட்டங்கள் மிகக் கடுமை என்பதால் யாரும் திருட முயலுவது அரிது.

இளைஞனுக்கு ஒரு யோசனை தோன்றியது. யாருமே இல்லாத நேரத்தில் கொஞ்சம் நகைகளைத் திருடி வந்து விட்டால் தன்னுடைய பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ளலாம். பெண்களைப் போல முக்காடு போட்டுக் கொண்டு போய் அந்தச் சின்னப் பையனை ஏமாற்றி, மிரட்டி நகைகளைக் கொள்ளை அடித்துக் கொண்டு ஓடி விடலாம் என்று திட்டம் தீட்டினான்.

அவனது எண்ணம் சில நாட்களிலேயே பலித்தது. கடையில் இருந்தவர்கள் ஒரு நாள் அனைவரும் அந்தச் சிறுவனை மட்டும் வைத்து விட்டு மதிய உணவுக்குக்காகச் சென்று விட்டார்கள். இளைஞன் திட்டப்படியே பெண்ணைப் போல முக்காடு போட்டுக் கொண்டு கடைக்குள் சென்றான்.

நகைகளைப் பார்வையிடுவதைப் போல சுற்றிலும் பார்த்தபடி திடீரென்று கத்தியை எடுத்து அந்தச் சிறுவனை மிரட்டிக் கைக்கு அகப்பட்ட நகைகளை எடுத்து மூட்டைக் கட்டிக் கொண்டான்.

திடீரென்று எதிர்பாராத விதத்தில் அந்தச் சிறுவன் அவனை மேசையில் இருந்த கனமான பித்தளைப் பூச்சாடியால் அடித்து அவனை ஓடவிடாமல் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டான். இளைஞனுக்குத் தலை சுற்றியது. வலியில் கண்கள் இருண்டன. தாமதித்தால் சிக்கிக் கொள்வோம் என்பதை உணர்ந்தான்.

ஆத்திரத்தில் கையில் இருந்த கத்தியால் சிறுவனை சரமாரியாகக் குத்தினான். சிறுவன் செத்து விழுந்ததும் நகை மூட்டையைத் தூக்கிக் கொண்டு வேகமாக ஓடினான்.

நகைக் கடையில் இருந்து யாரோ ஒரு பெண், ஆணின் வேகத்தில் ஓடி வருவதை அந்தத் தெருவில் சென்ற ஒரு மனிதன் பார்த்து விட்டு, ஏதோ தவறு நடந்திருக்கிறது என்பதை உணர்ந்து கூக்குரலிட்டான். சிக்கிக் கொள்வோமோ என்ற பயம், அடிபட்ட வலி இரண்டும் சேர்ந்து வேதனைப்படுத்த, இளைஞன் வேகமாக ஓடினான்.

ஒடும் போது காலில் ஒரு கல் மோதி இரத்தம் பெருக்கெடுத்தது. தலையில் அடிபட்ட வலியில் கண்கள் இருட்டின. ஓடும் போது தான் அவனுக்கு புத்தி வந்தது.

“ எப்படி இருந்தாலும் அரசாங்கம் என்னை சீக்கிரம் அடையாளம் கண்டுவிடும். நிச்சயமாக மரண தண்டனை தான் கிடைக்கும். போட்ட திட்டமெல்லாம் பாழாய்ப் போனதே. உயிரோடு இருந்தாலும் உழைத்து கொஞ்சம் கொஞ்சமாகக் கடன்களை அடைத்திருக்கலாம். பெற்றோருக்கும், தம்பி, தங்கைகளுக்கும் செய்ய வேண்டிய கடமைகளையும் செய்திருக்கலாம்.

முட்டாள்தனமாய் எல்லாவற்றையும் வீணாக்கி விட்டேனே” என்று கதறியபடியே வெகு தூரம் ஓடிப்போனான்.
அவன் நின்று மூச்சு வாங்கின இடத்தில் ஒரு வீடு இருந்தது. ஒரு பெரியவர் வாசலில் உட்கார்ந்திருந்தார். அவருக்கு அருகே போய் அரை மயக்கத்தில் விழுந்து விட்டான்.

அவர் அவனைக் கைத்தாங்கலாக உள்ளே அழைத்துச் சென்று படுக்க வைத்தார்.
“ கொலை செய்து திருடிவிட்டேன். என்னைத் தூக்கில் போட்டு விடுவார்கள். அற்ப ஆயுளில் சாகப் போகிறேன். என் குடும்பம் நடுத்தெருவில் நிற்கப் போகிறதே “ என்று புலம்பியபடியே மயக்கமானான்.

எவ்வளவு நேரம் அப்படிக் கிடந்தான் என்று அவனுக்கே தெரியாது.
அவன் கண் விழித்துப் பார்த்த போது அவனது காயங்களெல்லாம் கட்டப்பட்டிருந்தன. இரத்தக் கறைபடிந்த அவனது உடைகள் மாற்றப்பட்டு தூய்மையான ஆடைகள் உடுத்துவிக்கப்பட்டிருந்தன. வலி மிகவும் குறைந்திருந்தது.

அவனது படுக்கைக்கு அருகில் ஒரு மேசை வைக்கப்பட்டு அதில் பழங்களும் , தண்ணீரும் வைக்கப்பட்டிருந்தன. நல்ல பசியில் வேகவேகமாக அவற்றை உண்டு தண்ணீர் குடித்தான். பெரியவருக்கு நன்றி சொல்ல அவரைத் தேடினான்.

வீடு முழுதும் அவரைத் தேடியும் காணவில்லை. அவனது நகை மூட்டையையும் காணவில்லை. அறையில் இருந்த பெரிய பலகையில் பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்ததை வாசித்தான்.

“ உன்னை யாரும் குற்றவாளி என்று பிடித்து தண்டிக்க மாட்டார்கள். உன் குடும்பத்தோடு சந்தோஷமாக வாழ்க்கை நடத்து. இனி பாவம் செய்யாதே”.

அவனுக்கு ஒரே குழப்பம். வெளியில் நடந்து வந்தான். யாரும் அவனைக் கண்டு கொள்ளவில்லை. சாலை ஓரமாய் நின்றிருந்த காவலாளிகள் கூட அவனைக் கண்டு கொள்ளவில்லை. “ஊர் அதற்குள் நான் செய்த குற்றங்களை மறந்துவிட்டதா?” குழம்பியபடியே நடந்தான். ஊருக்கு மத்தியில் வந்துவிட்டான்.

அவன் நின்ற இடம் , குற்றவாளிகளைத் தூக்கிலிடும் இடம். வாசலில் இருந்த பலகையில் ,“இன்று காலையில் தூக்கில் இடப்பட்ட குற்றவாளி , பெண் வேடத்தில் வந்து ஒரு நகைக்கடையில் இருந்த சிறுவனை கொன்று , நகைகளைக் கொள்ளையடித்த குற்றங்களைச் செய்தவன்” என்று எழுதி இருந்தது. தூக்கு மரம் இருந்த இடத்தை நோக்கி ஓடினான்.

அங்கே பலமாய்த் தாக்கிக் காயப்படுத்தப்பட்டுத் தொங்கிக் கொண்டிருந்தவர் அவனுக்கு அடைக்கலம் தந்த பெரியவர்.

இளைஞன் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுதான். அவன் மனதில் , “ உன்னை யாரும் குற்றவாளி என்று பிடித்து தண்டிக்க மாட்டார்கள். உன் குடும்பத்தோடு சந்தோஷமாக வாழ்க்கை நடத்து. இனி பாவம் செய்யாதே”. என்ற வார்த்தைகள் சத்தமாக ஒலித்துக் கொண்டே இருந்தன.

நம்முடைய பாவங்களையும், பழிகளையும் கூடக் குற்றமே இல்லாத இயேசு கிறிஸ்து ஏற்றுக்‌ கொண்டு நமக்காக பலவிதமான சித்திரவதைகளை அனுபவித்தார்.

அவர் நமக்கு செய்த உபகாரத்துக்கு நம்மிடம் கேட்கும் கைம்மாறு இதுதான். “இனி பாவம் செய்யாதே”.

வேதத்தில் பார்ப்போம்,

நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது;
ஏசா53:5.

நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும் படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின் மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.
1 பேதுரு 2 :24

நாமெல்லாரும் ஆடுகளைப் போல வழி தப்பித் திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப் பண்ணினார்.
ஏசாயா 53:6

பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் எனக்காகவும் உங்களுக்காகவும் தம் ஜீவனையே தியாகம் செய்தார்.

சிலுவையில் அவர் நமக்காக சிந்திய இரத்தம், நமக்கு பாவமன்னிப்பை கொண்டு வருகிறது. “என் பிள்ளைகள் பாவத்திலிருந்து மீட்கப்படுவதற்காக இதை பொறுமையோடு சகித்துக் கொள்வேன்” என்று அவர் எண்ணினார்.

நம்முடைய மீறுதல்களுக்காக அவர் காயப்பட்டார்; நம்முடைய அக்கிரமங்களுக்காக அவர் நொறுக்கப்பட்டார். சாத்தானிடமிருந்து நம்மை காப்பாற்ற அவர் மரணத்தை ருசிபார்த்தார்.

“நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்”
1 யோவான் 1:9. தேவனுடைய தியாகத்தின் மூலமாக பாவமன்னிப்பை நமக்கு எளிதாக கிடைக்கச் செய்துள்ளார்.

நம்மீது வரவிருந்த ஆக்கினைத்தீர்ப்பு அவர்மேல் வந்தது. “இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே” ரோமர் 5:9.

சிலுவையின் குணமாகுதலையும், மன்னிப்பு மற்றும் ஆசீர்வாதங்களையும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? வார்த்தையை உரிமையாக்கி ஜெபியுங்கள், அற்புதத்தை பெற்றிடுங்கள்.

இப்படிப்பட்ட ஆசீர்வாதத்தை சுதந்தரிக்க கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.
ஆமென்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *